புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் சரணடைய விரும்பியும், சி.பி.ஐ. விரும்பவில்லை என்று முன்னாள் காவல் அதிகாரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி போலீஸ் கமிஷனராக இருந்த நீராஜ் குமார், கடந்த 2013 ஆம் ஆண்டு  ஜுலை மாதம்  ஓய்வு பெற்றார்.

சிபிஐ-யின் மும்பை குண்டு வழக்கு விசாரணையில், நீராஜ் முன்னணி அதிகாரியாக இருந்தவர். இவர் தனது ஓய்வுக்கு பிறகு புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார்.

அதில் தனது 37 ஆண்டு கால போலீஸ் பணியில், தான் சந்தித்த  குற்றவாளிகள் குறித்தும்,  பிரபல நிழல் உலக தாதாக்கள்  10 பேர்  குறித்தும் எழுதி உள்ளார்.

அதில் தாதாக்களுடன் நடைபெற்ற உரையாடல்கள் குறித்து பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்களை எழுதி உள்ளார்.

இந்தப்  புத்தகம் இந்த வருட இறுதியில் வெளியாகிறது. புத்தகத்தை பென்குயின் நிறுவனம் வெளியிடுகிறது.

மும்பை தாக்குதல் நடைபெற்று 15 மாதங்களுக்கு பிறகு,  பிரபல கடத்தல் மன்னன் தாவூத் இப்ராஹிம் சரணடைய தயார் என தெரிவித்து சிபிஐ டிஐஜி நீராஜ் குமாரிடம் பேசி உள்ளான்.

ஆனால் சில காரணங்களுக்காக இதை சிபிஐ ஏற்றுக் கொள்ளவில்லை  என அப்புத்தகத்தில் அவர் கூறி உள்ளார்.

மேலும் “ பதற்றத்துடன்  இருந்த  தாவூத்துடன்  1994 ஜூன் மாதம் 3 முறை நான் பேசி உள்ளேன். அவன் சரணடையும் எண்ணத்துடன் இருந்தான் ஆனால் அவனிடம் ஒரு கவலை இருந்தது.

அவன் இந்தியா திரும்பும் போது அவனை அவனது எதிர் கும்பல தீர்த்துக்கட்ட திட்டமிட்டு இருந்தது.  அவனை பாதுகாக்கும் பொறுப்பை சிபிஐ ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறினான்.

ஒப்புதல் கொடுத்த பிறகு   தாதா குழுக்களுடன் சென்று பேச  நினைத்தேன். ஆனால் என்னுடைய  மூத்த அதிகாரிகள்   இத்துடன் தொலைபேசி தொடர்புகளை துண்டித்துக் கொள்ளுமாறு என்னிடம் கூறினர்.

இருந்தும் தாவூத் தொடர்ந்து என்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்தான். ஆனால் என்னிடம் அதிகாரம் இல்லை என்பதால் நான் அவனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்”  என அதில் அவர் கூறி  உள்ளார்.

உலக வர்த்தக நகரமான மும்பையில் கடந்த 1993 ஆம்  ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி தீவிரவாதிகள் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 257 அப்பாவி மக்கள் பலியாகினர். 713 பேர் காயம் அடைந்தனர். இந்தத்  தாக்குதல் தொடர்பாக புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மும்பை குண்டு வெடிப்புக்கு பிறகு பிரபல சட்ட நிபுணர் ராம் ஜெத்மலானி  ” இந்தியாவின்  தேடப்படும் குற்றவாளி  தான் சரணடைய விருப்பம் தெரித்து இருந்தார்.

ஆனால் அவரின் நிபந்தனைகளான துன்புறுத்த கூடாது, தன்னை வீட்டு காவலில் வைக்க வேண்டும் என்ற  நிபந்தனைகளை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை” என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply