வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பாக இந்தியாவின் முக்கியமான ஆங்கில நாளிதழ்களில் ஒன்றான ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா’வில் வெளியான செய்தி, அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அது ஒன்றும், அரசியல் ரீதியான செய்தியல்ல.
இந்தியாவிலும், இலங்கையிலும் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய வழக்கொன்றில் தண்டனை விதிக்கப்பட்டவர்க ளின் விடுதலை பற்றிய செய்தியே அது.
அதனால், அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லா மட்டங்களிலும் அது விவாதங்களையும் எழுப்பியிருந்தது.
1990களின் நடுப்பகுதி யில், தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, பிரேமானந்தா ஆசிரம வழக்குத்தான் அது.
தன்னைக் கடவுள் என்று கூறிக் கொண்ட பிரேமானந்தா, திருச்சியை அடுத்த
பாத்திமா நகரில் நடத்தி வந்த ஆசிரமத் தில், கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதுடன், மேலும் 13 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அந்த ஆசிரமத்தை நடத்திய பிரேமானந்தாவும் சரி, அவருக்குத் துணையாக இருந்ததாக தண்டனை விதிக்கப்பட்டவர்களும் சரி, அவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட 13 பெண்களும் சரி இலங்கைத் தமிழர்களே.
அந்த வழக்கில், பிரேமானந்தா மற்றும் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த கமலானந்தா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், பாலேந்திரா, சதீஸ்குமார், நந்தகுமார் ஆகிய மூவருக் கும் தலா ஒரு ஆயுள்தண்டனையும் புதுக் கோட்டை நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்ட போது, தண்டனை உறுதி செய்யப்பட்டதுடன், புதுடில்லி உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேன் முறையீடும் நிராகரிக்கப்பட்டது.
ஆயுள்தண்டனை அனுபவித்து வந்த பிரேமானந்தா நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார்.
எஞ்சியோர், கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்ற நிலையில் இன்னமும் விடுதலையாகவில்லை.
இந்தக் கட்டத்தில் தான், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கும் இடை யில் முடிச்சுப் போட்டிருந்தது ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா.’
ஆயுள் தண்டனை பெற்றவர் மூவரை யும் விடுதலை செய்யுமாறு கோரி, இந்தி யப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.
சாதாரணமாக அந்தச் செய்தி வெளியாகியிருந்தால் பரவாயில்லை.
விக்னேஸ்வரன் இலங்கையின் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் என்பதை யும் சுட்டிக்காட்டி, அவர் குற்றவாளிக ளுக்குத் துணைபோவது போன்றும், இந்தியாவின் நீதித்துறையில் அவர் தலையீடு செய்வது போன்றும் கருத்தை உருவாக்கியிருந்தது இந்திய நாளிதழ்.
அதைவிட, அவரது இந்தக் கோரிக்கை, இந்திய அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை யும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், அதில் கூறப்பட்டிருந்தது.
இது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது.
உடனடியாகவே, முதலமைச்சர் செயலகம், தாம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியகடிதத்தின் பிரதியுடன், மறுப்பை வெளியிட்டது.
அதில், தண்டனையை அனுபவிக்கும் குற்றவாளிகளின் உறவினர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தையே- அவர்கள் தமது மாகாணத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் வசிப்பவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தியப் பிர தமரின் கவனத்துக்கு அனுப்பி வைப்பதாக குறிப்பிட்டிருந்தார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியுடன் அந்த மறுப்பு வெளியானதால் அந்த விவகாரம் அத்தோடு அமுங்கிப் போனது.
ஆனாலும், இந்த விவகாரத்தில், விக்னேஸ்வரன் இழுத்து வரப்பட்ட பின்னணியும், அதற்கான நோக்கங்களும் ஆராயப்பட வேண்டியவை.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்புபட நேர்ந்தமைக்கு, முக்கியமான ஒரு காரணம் உள்ளது.
அது, அவர் பிரேமானந்தாவின் தீவிரமான பக்தர் என்பதேயாகும்.
அவர் தேர்தலில் போட்டியிட்ட போது, ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், தன்னை உணர வைத்தவர் பிரேமானந்தாவே என்று குறிப்பிட்டிருந் தார்.
அவரது போதனைகளை முற்றுமுழுதாகவே ஏற்றுக் கொண்டவர் என்பதும், அவ்வப்போது, பிரேமானந்தாவின் ஆசிரமத்துக்குச் சென்று அங்கு நடைபெறும் வழிபாடுகளில் கலந்துகொண்டு வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன்னர், சென்னையில் நடந்த அஞ்சலிக் கூட்டம் ஒன்றில் நினைவுரையாற்றச் சென்றிருந்த போதும், அவர் பிரேமானந்தா ஆசிரமத்துக்குச் சென்று வழிபாடு செய்த பின்னர், ஒரு நாள் அங்கு தங்கியிருந்து விட்டுத் தான் திரும்பியிருந்தார்.
பிரேமானந்தா மீதும், அவரது சீடர்கள் மற்றும் ஆசிரமம் மீதும், குற்றச்சாட்டு கள் சுமத்தப்பட்டு, அவர்களுக்குத் தண் டனை விதிக்கப்பட்ட பின்னரும் கூட, அவரைப் பின்பற்றி வருபவர் விக்னேஸ் வரன். அதை அவர் மறைக்கவும் இல்லை.
மறுக்கவுமில்லை. இந்தப் பின்னணி, அவர் மீது, இந்திய நாளிதழ் குற்றச்சாட் டைச் சுமத்துவதற்கு வசதியாகிப் போனது.
பிரேமானந்தாவின் ஆன்மீக வழியை முதலமைச்சர் விக்னேஸ்வரன் பின்பற்றுவது அவரதுதனியுரிமை.
அதேவேளை, ஒரு முன்னாள் நீதியரசராக இருந்து கொண்டும், முதலமைச்சராக இருந்து கொண்டும், சர்ச்சைக்குரிய ஒருவரைப் பின்பற்றுவதாக முன்னிறுத்த முனையும் போது, இத்தகைய சிக்கல்களை சந்திக்கவே வேண்டியிருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன், தாம் இந்தக் கடிதத்தை எழுதவில்லை என்றும், உறவினர்கள் தமக்கு அனுப்பிய கடிதத்தையே இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தாலும், தண்டனை அனுபவிப்போரின் உறவினர்கள், முதலமைச்சரை இதற்குப் பயன்படுத்த முனைந்திருப்பதற்குக் காரணம், அவர் பிரேமானந்தாவின் பக்தர் என்பதனாலேயாகும்.
எவ்வாறாயினும், இந்த விவகாரத்தை, இந்திய ஊடகங்கள் சில, இந்தியாவின் நீதித்துறை மீதான தலையீடாகக் காண்பிக்க முனைந்தன.
முதலமைச்சராக இருக்கின்ற ஒருவர், அதுவும், முன்னாள் நீதியரசராக இருந்த ஒருவர், இன்னொரு நாட்டின் நீதித்துறையில் தலையீடு செய்ய முனையமாட்டார் என்பதை குறிப்பிட்ட இந்திய நாளிதழ் அறியாதிருக்காது.
ஆனாலும், இந்த விவகாரத்துக்குள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இழுக்கப்பட்டுள்ளதன் பின்னணி சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அதாவது, வடக்கு மாகாண முதலமைச்சர் செயலகம் குறிப்பிட்டது போல, விக்னேஸ்வரனின் பெயரைக் கெடுப்பதே, புதுடில்லியை மையமாகக் கொண்ட இந்திய ஊடகங்களின் நோக்கமா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
புதுடில்லி அதிகார மட்டம், அல்லது அங்குள்ள கொள்கை வகுப்பாளர்கள், முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஒருவித அச்சத்துடன் பார்ப்பதையும், அவர் மீது வெறுப்பை பாராட்டுவதையும் அண்மைக்காலமாக உணர முடிகிறது.
குறிப்பாக, வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விவகாரம், இலங்கை அரசாங்கத்தைப் போலவே, இந்தியாவுக்கும், நெருடலை ஏற்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்தப் பின்னணியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம், இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்திக்க வேண்டாம் என்று, கொள்கை வகுப்பாளர்களால் ஆலோசனை கூறப்பட்டதாகவும் கூட, சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
ஆனாலும், இந்தியப் பிரதமர் நரேந்திர அதனை நிராகரித்து விட்டு, முதலமைச்சரைச் சந்தித்ததுடன் அவருடன் இணைந்து நிகழ்வுகளிலும் பங்கேற்றிருந்தார்.
பா.ஜ.க அரசு மீது செல்வாக்குச் செலுத்தும் ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிசத் போன்ற அமைப்புகளின் தலைவர்கள் மத்தியில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆன்மீக ரீதியான நெருக்கத்தைக் கொண்டிருப்பது, கூட, மோடி அவரைத் தட்டிக்கழிக்க முடியாது போனதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
இந்தநிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் புறக்கணிக்குமாறு இந்தியப் பிரதமருக்கு ஆலோசனை கூறப்பட்டது பற்றிய செய்தி எந்தளவுக்கு உண்மையாக இருக்கும் என்று கூற முடியாவிடினும், புதுடில்லி அதிகார மட்டம், அவரை கொஞ்சம் தள்ளியே வைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
உதாரணத்துக்கு, இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திக்க முதலமைச்சர் விரும்பிய போதிலும், அவரைப் புதுடில்லி அழைக்கவில்லை.
சில மாதங்களுக்கு முன்னர் புதுடில்லியில் நடந்த மாநாட்டில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்றிருந்த போதிலும், இந்தியப் பிரதமர் அவரைச் சந்திக்கவில்லை.
அதேவேளை, யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, அவரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், முதலமைச்சர் விக்னேஸ்வரனை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள், சற்று ஆபத்தானவராகக் கணிக்க முனைவது போல் தெரிகிறது.
அதாவது, இலங்கையிலும், புலம்பெயர் தேசங்களிலும், உள்ள தமிழ்த் தேசிய சக்திகளுக்கு அவர் தலைமை தாங்கக் கூடுமோ என்ற அச்சம் உருவாகியிருக்கலாம்.
அண்மையில், புதுடில்லி கொள்கை வகுப்பாளர்களுக்கு நெருக்கமான- ஊடகவியலாளரான எம்.ஆர்.நாராயணசாமி எழுதியிருந்த கட்டுரை ஒன்றில், இந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
விடுதலைப் புலிகள் குறித்தும், பிரபாகரன் குறித்தும் Tigers of Lanka, Inside an Elusive Mind- Prabhakaran, The Tiger Vanquished – LTTE’s Story ஆகிய நூல்களை ஆங்கிலத்தில், எழுதியிருப்பவர் தான் எம்.ஆர்.நாராயணசாமி.
இலங்கையில் தமிழ் கடும்போக்குவாத சக்திகள் விடயத்தில் இந்தியா அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதில், முதலமைச்சர் விக்னேஸ்ரவன் குறித்தும் கூறப்பட்டிருந்தது.
இதனால், முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழர்கள் மத்தியில், செல்வாக்குமிக்க தலைவராக உருவெடுத்துள்ள நிலையில், அவரது பெயரைக் களங்கப்படுத்துவதன் மூலம், தமிழர்களின் மத்தியில் உள்ள செல்வாக்கை சீர்குலைக்க முயற்சிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் தோன்றியிருக்கிறது.
ஏற்கனவே, அவருக்கு எதிராகக் கொழும்பின் அதிகார சக்திகளும் மறைமுக யுத்தம் ஒன்றைத் தொடுத்துள்ள நிலையில், புதுடில்லி ஆங்கில ஊடகங்களும், அதே வழியைப் பின்பற்றத் தொடங்கியுள்ளமை, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரல் செயற்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.
இது அவரை அரசியலிலிருந்தும், தமிழ் மக்களிடத்திலிருந்தும் அந்நியப்படுத்தும் முயற்சியாக மட்டும் கருதமுடியவில்லை..
தமிழரின் அரசியல் பலத்தை சிதைக்கும் நோக்கத்தையும் கொண்டதாக இருக்கலாம்.