இலங்கையின் வடமாகாண நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்த விபரங்கள் அடங்கிய மூன்று ஆவணங்களை வடமாகாண முதலமைச்சர் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜோன் கெரியிடம் நேற்று கையளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஜோன் கெரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். இதில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கலந்துகொண்டிருந்தார்.

இந்தச் சந்திப்பின்போதே விக்னேஸ்வரன் மூன்று ஆவணங்களை ஜோன் கெரியின் கவனத்துக்குக் கொடுத்துள்ளதாகத் தெரிகின்றது. வடமாகாண சபை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய ஆவணம், இனஅழிப்பு குறித்து வடமாகாண சபை நிறைவேற்றிய பிரேரணையின் பிரதி என்பவற்றுடன் கடிதம் ஒன்றையும் விக்னேஸ்வரன் கையளித்தார்.

இவற்றைப் பெற்றுக்கொண்ட ஜோன் கெரி, ‘எங்களுக்கு Home Work தந்துள்ளீர்கள் போல” என நகைச்சுவையாக சிரித்துக்கொண்டே கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், “ஆம் நாம் எமது Home work ஐ முடித்துவிட்டோம். இப்போது உங்களுக்குத் தந்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதேவேளையில் நேற்றைய சந்திப்பின்போது அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு ஒரு புறமாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு மறுபக்கமாகவும் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் விக்னேஸ்வரனுக்கு அமெரிக்க பிரதிநிதிகளின் பக்கமாகவே ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் அரசியல் ரீதியான நன்மைகளை பெறமுடியும்! த.தே.கூ.விடம் கெர்ரி (‍‍காணொளி)

835030161
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆர்.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடமாகண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து வடக்கு முதல்வர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

விக்னேஸ்வரன் கூறியதாவது,

நாம் ஜோன் கெர்ரியை இன்று சந்தித்தோம், தற்போது சூழ்நிலை நல்ல முறையில் மாறிக் கொண்டு வரும்போது அதனை நாம் எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என அவர் எமக்கு வலியுறுத்தினார்.

பல விதமான பிரச்சினைகளை நாம் எதிர்நோக்கினாலும் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் அவற்றை தீர்க்க வேண்டும் என்றார்.

எங்களுடைய பிரச்சினைகளை தான் நன்றாக உணர்ந்து கொண்டிருப்பதாகவும், அந்த உணர்ச்சியுடன் தான் தங்கள் செயற்படுவதாகவும் கூறிய அவர், இதனை நாம் மனதில் நிறுத்த வேண்டும் எனவும் கூறினார்.

அதன் அடிப்படையில் விரைவில் பல அரசியல் ரீதியான மாற்றங்களையும் நன்மைகளையும் நாம் பெறக்கூடும் என அவர் வலியுறுத்தினார்.

சம்பந்தன் எமது பிரச்சினைகளை எடுத்துக் கூறினார். அவர் அதனை செவிமடுத்தார்.

25 நிமிடங்கள் மட்டுமே எமக்கிருந்தன, நிறைய விடயங்களை இதனால் பேச முடியாமல் போனது, ஆனால் முக்கிய விடயங்கள் பற்றி அவருக்கு முன்னரே தெரிந்துள்ளது.

அந்த அடிப்படையில் அவர் இது சம்பந்தமாக மனதில் இருத்தி எங்களுக்கு பல விதத்திலும் ஒத்தாசையாக இருப்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது, என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply