சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் திருப்பூரை சேர்ந்த மாணவி பவித்ரா, கோவையை சேர்ந்த மாணவி நிவேதா ஆகியோர் 1200க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 86 ஆயிரம் மாணவர்-மாணவியர்கள் எழுதினர். கடந்த மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி, 31 ஆம் தேதி வரையில் நடைபெற்ற இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன், சென்னையில் இன்று வெளியிட்டார்.
அப்போது அவர், தமிழகத்தில் 90.6 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். மாணவிகள் 93.4 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.
இதில், திருப்பூர் மாணவி பவித்ரா (விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி) மற்றும் கோவையை சேர்ந்த மாணவி நிவேதா (சவுடேஸ்வரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி) ஆகியோர் 1,192 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து உள்ளனர்.
விக்னேஸ்வரன் (ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு), பிரவீண் (எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்), சரண்ராம் (எஸ்.எஸ்.எம்.லக்ஷ்மியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்) மற்றும் வித்யா வர்ஷினி (சௌவுடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருச்சி) ஆகிய மாணவர்கள் 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2 ஆம் இடத்தை 4 மாணவர்கள் பிடித்து உள்ளனர்.
நாமக்கல் டிரினிட்டி அகாடமிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி பாரதி 1189 மதிப்பெண்கள் எடுத்து 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் பாடத்தில் 124 மாணவர்கள் 200க்கு 200 எடுத்துள்ளனர். வேதியியல் பாடத்தில் 1049 மாணவர்கள் 200க்கு 200 எடுத்துள்ளனர். உயிரியல் பாடப்பிரிவில் 387 மாணவர்கள் 200க்கு 200 எடுத்துள்ளனர். தாவரவியல் பாடப்பிரிவில் 75 மாணவர்கள் 200க்கு 200 எடுத்துள்ளனர்.
மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை இணையதளங்களில் அறிந்துகொள்ள www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in. என்ற இணையதள முகவரி அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் முடிவுகளை அறிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
மேலும், மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளவும் ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி துறை செய்திருந்தது.
மேலும், இணையதளங்களில் இருந்து தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவிறக்கம் செய்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 14 முதல் மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். மே 18 முதல் மாணவர்கள் தாங்களாகவே இந்த மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மாணவர்கள், விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வருகின்ற மே 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை பள்ளிகளின் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. சிறப்புத் துணைத் தேர்வுக்கு மே 15 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் பெற மொழி பாடங்களுக்கு தலா 550 ரூபாயும், பிற பாடங்களுக்கு தலா 275 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மறு கூட்டல் செய்வதற்கு மொழி பாடங்களுக்கு தலா 305 ரூபாயும், பிற பாடங்களுக்கு தலா 205 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகள் வருகின்ற ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ளது.
இதற்காக வருகின்ற 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தோல்வியடையும் மாணவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என அரசு தேர்வு இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகள்!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை மாணவிகளே பெற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொது தேர்வில் 32 ஆயிரத்து 476 மாணவ–மாணவிகள் எழுதினர். இதில் இன்று காலை வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் 30 ஆயிரத்து 969 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் சுமார் 95.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தை பொருத்தவரையில் 221 பள்ளிகளில் தேர்வு நடந்தது. அதில் துறையூர் செளடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வித்யாவர்ஷினி 1190 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2ஆம் இடத்தையும் மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.
இயற்பியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ள இவர், தமிழ்–197, ஆங்கிலம்–194, வேதியியல் 199 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவருக்கு அடுத்து சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக் பள்ளி மாணவி கவுசிகா 1186 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளிவில் 2ம் இடத்தையும், அதே பள்ளி மாணவி மதுமிதா 1185 மதிப்பெண் பெற்று 3வது இடத்தையும் பிடித்துள்ளார்.
பிறமொழிப்பாடங்களில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் சங்கரன் பிள்ளை எஸ்.டி. இந்து மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெயலெட்சுமி 1185 மதிப்பெண் பெற்று 3வது இடத்தை பிடித்தார்.
ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் மேலப்புதூர் புனித ஜோசப் பள்ளி மாணவி மினாதா ரிபார்ட் 1186 மதிப்பெண்கள் பெற்று திருச்சி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.
jayalakshmi
திருச்சி மாவட்டத்தில் 363 மாணவ– மாணவிகள் 200–க்கு 200 மதிப்பெண்கள் கணித பாடத்தில் பெற்றுள்ளனர். கணக்கு பதிவியல் பாடத்தில் 202 பேர், வேதியியல் பாடத்தில் 42 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 22 பேரும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
வணிக கணக்கியல் பாடத்தில் 27 பேரும், அரசியல் அறிவியல் பாடத்தில் 25 பேரும், உயிரியல் பாடத்தில் 20 பேரும் 200–க்கு 200 பெற்றனர். பொறியியல் பாடத்தில் 4 பேர், இயற்பியல் பாடத்தில் 7 பேர், தாவரவியல் பாடத்தில் 3 பேரும் 200–க்கு 200 மதிப்பெண் பெற்றனர். மொழிப்பாடத்தில் 7 பேர் 200–க்கு 200 பெற்றுள்ளனர். வரலாறு பாடத்தில் ஒரு மாணவி மட்டும் 200–க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளார்.
திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த வருடத்தைவிட இந்த வருடம் அரசு பள்ளிகள் நல்ல தேர்ச்சி விகிதம் அடைந்துள்ளன. கடந்த வருடம் 9 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். ஆனால் இந்த வருடம் 14 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. கூடவே கடந்த வருடத்தைவிட இந்த வருடம் தேர்ச்சி விகிதத்தில் முன்னுக்கு வந்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறிவருகின்றனர்.
புதுச்சேரியிலும் பிளஸ்2 தேர்வில் மாணவிகள்தான் முதலிடம்!
07-05-2015
புதுச்சேரி: புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வில் ஒரே பள்ளியை சேர்ந்த இந்துஜா, நிகிதா ஆகிய 2 மாணவிகள் 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. முதல்வர் ரங்கசாமி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
சென்ட் பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் இந்துஜா, நிகிதா ஆகியோர் 1200க்கு 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
பெட்டிட் செமினார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர் ஹரிஸ் பாலாஜி 1186 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளார்.
சென்ட் பேட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவி பிரதிக் ஷா 1182 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளார்.
மொத்த தேர்ச்சி விகிதம் 88.16 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 1.45 சதவீதமாக குறைந்துள்ளது.
தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, “ஆசிரியர் பற்றாக்குறைதான் தேர்ச்சி விகிதம் குறைவுக்கு காரணமாக இருந்தது. அந்த பிரச்னையை சரி செய்து விட்டோம்.
மேலும், தனியார் பள்ளிகள் சரியாக படிக்காத மாணவர்களுக்கு சான்றிதழ் கொடுத்து அனுப்பி விடுகின்றனர். இதுவும் தேர்ச்சி விகிதம் குறைவுக்கு காரணம். இந்த பிரச்னைகள் சரி செய்யப்படும். இனி தேர்ச்சி விகிதம் குறையாது ” என்றார்.