பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று பிடி ஆணையினை பிறப்பித்துள்ளார்.

லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக, அண்மையில் நடத்தப்பட்ட ஆர்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

எனினும், அந்த தடையை மீறியமை தொடர்பான வழக்கு விசாரணையில் இன்றைய தினம் முன்னிலையாகாத நிலையிலே இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கலகொடஅத்தே ஞானசார தேரர் வெளிநாடு ஒன்றிற்கு விஜயம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு சென்றிருந்த போது, நீதிமன்ற உத்தரவை மீறி, ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பட்ட மேற்கொண்டதன் காரணமாக, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 26 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டது.

பந்துல குணவர்த்தன, டலஸ் அழகபெறும, எஸ் எம் சந்ரசேன உள்ளிட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்,  மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட பலருக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவர்களை தவிர, 9 பிக்குகளுக்கும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், இன்றைய தினம் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.

இந்த நிலையில்; இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையான 26 பேரும் தலா 10 லட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தேரர்களைத் தவிர, ஏனைய 18 பேர் பத்தாயிரம் ரூபா ரொக்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன் சகல பிரதிவாதிகளும் மாதத்தின் இறுதி வெள்ளிக் கிழமையன்று கொழும்பு பிரதான நீதிமன்ற பதிவாளர் முன் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவு இடப்பட்டுள்ளது

இது தவிர, நீதிமன்றில் முன்னிலையான சகல பிரதிவாதிகளும் நாளைய தினம் கறுவாத் தோட்ட காவல் நிலையத்திற்கு சென்று வாக்கு மூலத்தை வழங்குமாறும் கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பிரதிவாதிகள் எவரும் அமைதியை சீர்குலைக்கும் வகையிலான செயல்பாடுகளில் ஈடுபடுவார்களாயின் உடனடியாக விளக்க மறியலில் வைக்கப்படுவார்கள் என நீதவான் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, குறித்த வழக்காளர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி ஹ_சேன் அசார், வழக்கின் சந்தேகத்திற்கு உரியவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்சவை பேரிடுமாறு கோரியுள்ளார்.

இது தொடர்பில், எதிர்வரும் நாட்களில் ஆராய்ந்து நீதிமன்றத்திடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம், காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

Share.
Leave A Reply