மல்லாவியிலுள்ள தனியார் கல்விநிலையமொன்றில் கல்வி பயிலும் மாணவிகளிற்கு விசித்திர அனுபவமொன்று நேர்ந்துள்ளது. அவர்களை மாங்காய் சாப்பிட வைத்துள்ளார் ஆசிரியர் ஒருவர்.
தண்டனையாகவே இது நடந்துள்ளது. தரம் 10 இல் கல்வி பயிலும் சில மாணவிகளே இந்த விசித்திர தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர்.
மல்லாவியிலுள்ள தனியார் கல்விநிலையமொன்றின் வளவிற்குள் மாமரமொன்று நிற்கிறது. நீண்டகாலத்தின் பின்னர் அம்முறைதான் அது பூத்து காய்த்துள்ளது. அதுவும் குறைந்தளவிலான காய்கள்தான் அதிலிருந்துள்ளன.
அதனை பார்த்த கல்விநிலைய உரிமையாளரான ஆசிரியர், மாமரத்தில் யாரும் கைபோடக்கூடாதென மாணவர்களிற்கு கண்டிப்பான உத்தரவிட்டிருந்தார்.
கடந்த புதன்கிழமை ஆசிரியர் இல்லாத சமயத்தில் மாங்காயொன்றை பறித்து நான்கு மாணவிகள் பங்கிட்டு சாப்பிட்டு கொண்டிருந்திருக்கிறார்கள். இந்த சமயத்தில் திடீரென வந்த ஆசிரியர் அதனை கண்டு ஆத்திரமடைந்துள்ளார்.
தனது உத்தரவை மீறிய மாணவிகளில் கோபடைந்தவர், அவர்களிற்கு விசித்திர தண்டனையொன்றை கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு மாணவியும் மூன்று மாங்காய் பறித்துக் கொண்டு வரச்செய்து, வகுப்பறையில் அனைவரிற்கு முன்பாகவும் நின்று மாங்காய் சாப்பிடும் தண்டனை வழங்கியுள்ளார்.
ஒவ்வொருவரும் புளிக்கப்புளிக்க மூன்று மாங்காய் சாப்பிட்ட பின்னர்தான் அந்த இடத்திலிருந்து நகர அனுமதித்துள்ளார்.
மல்லாவியுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விகற்பிக்கும் இந்த ஆசிரியர், கோபத்திற்கு பிரபலமானவர் என்றும், எப்பொழுது உணர்ச்சிவசப்படுவார் என்பதை கணிக்க முடியாதென்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.