சில விடயங்கள் நம்ப முடியாதவையாகவும் ஆச்சரியமானவையாகவும் இருப்பதுண்டு. நடைபெறாது என்று நாம் எண்ணியிருந்த ஒரு நிகழ்வாக அது இருப்பதற்கான நிகழ்தகவே அதிகமாகும்.
அண்மைக்காலமாக நமது நாட்டின் அரசியலானது இவ்வாறான அனுபவங்களை தொடர்ச்சியாக தந்து கொண்டிருக்கின்றது.
மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தில் பத்தோடு பதினோராவது அமைச்சராக பதவிவகித்த மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளாராக முன்னிறுத்தப்பட்டது, அவரது வெற்றி, எந்தவித சச்சரவுகளும் இல்லாமல் ஜனாதிபதிப் பதவி ஒப்படைக்கப்பட்டமை, 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டமை எனத் தொடங்கும் அபூர்வமான நிகழ்வுகள் மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக் ஷ சந்திப்பு வரை வந்து நிற்கின்றன.
தோல்வியுற்ற நகர்வுகள்
கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த வேளையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தார்.
அது கைகூடாமல் போய்விட்ட பிறகும் அதிகாரம்மிக்க பதவி மீதான அவரது வேட்கை தணியவில்லை என்பது கண்கூடு.
இலங்கையின் வரலாற்றில் பதவிக்காலம் முடிவுற்ற பின்னர் அல்லது தோற்கடிக்கப்பட்ட பின்னர் எந்தவொரு ஜனாதிபதியும் இதற்கு முன்னர் செய்திராத அரசியல் நகர்வுகளை மஹிந்த மேற்கொண்டு வருகின்றார்.
ஆட்சியை தக்கவைப்பதற்கு மஹிந்த மேற்கொண்டதாக நம்பப்படும் சதித்திட்டங்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியாமல் போனமை அவருக்கு அதீத தைரித்தை அளித்திருக்கும்.
ஆரம்பத்தில் சுதந்திரக் கட்சி தம்பக்கம் இருக்கின்றது என்ற பலத்தை காட்டி அதன்மூலம் நினைத்ததை சாதிப்பதற்கு நினைத்தார்.
மக்கள் அலையை காண்பித்து தமக்கு ஆதரவு இருப்பதாக ஒரு பிரமையை உருவாக்கினார். பின்னர் பொது பலசேனாவையும் அவர்களது கூட்டாளிகளான இனவாத அமைப்புக்களை பயன்படுத்தி தனக்கான பிரசாரங்களை முடுக்கிவிட்டார்.
அதன் பிற்பாடு 19ஆவது திருத்தத்தை தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் இப்படியான எல்லா நகர்வுகளும் தோல்வியில் முடிவடைந்தன அல்லது அவர் எதிர்பார்த்த பலனை தரவில்லை.
அது மாத்திரமன்றி கடந்த மூன்று வாரங்களாக நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற அதிரடி நடவடிக்கைகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் ஏனைய ஊழல்வாதிகள் மற்றும் மோசடிக்காரர்களுக்கும் வயிற்றைக் கலக்கியுள்ளது.
மைத்திரி அரசாங்கம் மெத்தனப் போக்கையும் மென்மையான அணுகுமுறையையும் கடைசி வரையும் கடைப்பிடிக்கப் போவதில்லை என்பது அவர்களுக்கு உணர்த்தப்பட்டிருக்கின்றது.
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறையில் நடைபெற்ற தெயட்ட கிருள கண்காட்சியின் நிதி மோசடி தொடர்பாக மேலும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைதாகியுள்ளார். இதற்கு முன்னரும் பின்னரும் பலர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைக்கான சமிக்ஞையை ஏற்கனவே வெளிப்படுத்தி விட்டது.
எனவே, புதிய அரசாங்கம் மேற்கொண்ட இவ்வாறான அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் அதிரடிகளால், ஒட்டுமொத்தமாக முன்னைய ஆட்சியை நாசமாக்கிய எல்லோரும் கிட்டத்தட்ட ‘பிச்சை வேணாம் நாயைப் பிடி’ என்ற நிலைமைக்கே வந்திருக்கின்றார்கள்.
முன்னாள் அரச தலைவரும் இதற்கு விதிவிலக்கல்ல என தோன்றுகின்றது. இல்லையென்றால், தன்னளவில் இன்னும் ஒரு ஜனாதிபதியாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, தன்னுடைய இறுமாப்பை தளர்த்திக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்புக்கு வலிய வந்திருக்க மாட்டார் என்றே கணிக்க முடியும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
காலத்தின் மாற்றத்தையும் இறைவனின் நாட்டத்தையும் பார்த்தீர்களா? தனது அரசாங்கத்தில் தனக்குக் கீழே, பிரபலமற்ற ஒரு சுகாதார அமைச்சராக இருந்த ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாக சந்திக்க வேண்டிய நிலைமை மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை மஹிந்த எவ்வாறு நடத்தினார் என்பதை நாடே அறியும்.
இவ்வாறான ஒரு நிலையில் 63 இலட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்டு, குற்றச்சாட்டுக்கள் பலவற்றுக்கும் ஆளாகியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால இடமளித்தமை மிகவும் நல்லதொரு முன்மாதிரி.
நல்லாட்சியின் இலட்சணங்களுள் ஒன்றாகவும் இது இருக்கலாம். அதேபோல் பகையையும் வஞ்சத்தை கொஞ்சநேரம் மறந்து விட்டு, ஜனாதிபதி தரப்பினருடன் பேசுவதற்கு முன்னாள் ஜனாதிபதி முன்வந்தமையும் வரவேற்கப்பட வேண்டியதே.
அன்றைய தினம் பிற்பகல் 1.35 இற்கு ஆரம்பித்த பேச்சுவார்த்தை ஒரு மணித்தியாலமும் 10 நிமிடங்களும் இடம்பெற்றது.
அடிப்படையில் இச் சந்திப்பை நடாத்துமாறு மஹிந்த தரப்பே கோரியிருந்தமையால் பேசுபொருட்களையும் அவர்களே கொண்டு வந்திருந்தனர். அதன்படி ஐந்து முக்கிய விடயங்கள் குறித்து இங்கு பேசப்பட்டிருக்கின்றது.
1. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொது வேட்பாளராக மஹிந்த ராஜபக் ஷவை பெயர் குறிப்பிட வேண்டும் என்று எதிர் தரப்பினர் கோரியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, யாரையும் பிரதமர் வேட்பாளர் என்று பெயர் குறிப்பிட்டு அறிவிப்பது சுதந்திரக் கட்சியினதோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியினதோ சம்பிரதாயம் அல்ல என்று கூறியுள்ளார்.
அத்துடன் யாரை பிரதான வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பில் கட்சியின் மத்திய குழுவே தீர்மானிக்கும் என்று சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
2. உள்ளூராட்சி மன்றங்களை கலைக்காது அதன் ஆயுட்காலத்தை நீடிக்குமாறு மஹிந்த முன்வைத்த கோரிக்கையை மறுதலித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆட்சிக்காலம் முடிவுற்றிருந்த மன்றங்களின் காலம் மேலும் நீடிக்கப்படமாட்டாது.
முன்னமே நீடிக்கப்பட்ட காலப்பகுதியுடன் (மே 15 மற்றும் 31) முடிவுறுத்தப்பட்டு செயலாளர்களின் கீழ் கொண்டு வரப்படும். ஆனால் எந்த உள்ளுராட்சி மன்றத்தையும் எமது அரசாங்கம் விசேடமாக கலைக்கப் போவதில்லை என்றார்.
3. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பலப்படுத்துமாறும் எதிர்வரும் தோ்தலில் ஐ.ம.சு.மு.வாக இணைந்து செயற்பட வேண்டும் என்றும் மஹிந்த இங்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, இதில் பிரச்சினை இல்லை. என்றாலும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளே இன்று பிளவுபட்டுள்ளன என்று சுட்டிக்காட்டினார்.
4. தனது குடும்பத்தினருக்கு எதிரான ஊழல் விசாரணைகள் தொடர்பாக கவலை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
அவ்வாறு செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறிய ஜனாதிபதி மைத்திரிபால, ஆனால் அரசியல் பழிவாங்கல் இல்லாமல் சுயாதீனமான விசாரணைகள் இடம்பெறும் வகையில் கண்காணிப்பதாக உறுதியளித்தார்.
5. கடைசியாக, சுதந்திரக் கட்சியின் வேட்புமனு சபையில் மஹிந்த ஆதரவு உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கோரிக்கை இங்கு முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரி, கட்சியின் உயர்மட்ட மத்திய குழு உறுப்பினர்களுடன் பேசிய பின்னர் எடுக்கப்படும் தீர்மானத்தை அறிவிப்பதாக கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் மேற்குறிப்பிட்ட 5 விடயங்களும் பேசி முடிக்கப்பட்ட நிலையில் அதாவது பிற்பகல் 3.45 மணிக்கு, தான் இன்னுமொரு நிகழ்வுக்கு செல்ல வேண்டும் என்று கூறி ஜனாதிபதி மைத்திரிபால எழுந்து கொண்டார். அவர் வெளியேறி சில நொடிகளில் மஹிந்த அணியும் புறப்பட்டுச் சென்றது.
இச்சந்திப்பில் மேற்படி 5 விடயங்களும் பேசப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மறுபுறத்தில் சுதந்திரக் கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா வெளியிட்டுள்ள அறிக்கையிலும் வேறுவிதமான சொற் பிரயோகங்களுடன் இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ பல விடயங்களை ஜனாதிபதியிடம் வினயமாகக் கேட்டுக் கொண்டார். ஏனென்றால் அவருக்கு வேறு தெரிவுகளும் இப்போதில்லை.
ஆனால் அவர் ஜனாதிபதியின் காலில் விழுந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
காலில் விழும் கட்டத்திற்கு இன்னும் மஹிந்த வரவில்லை என்பதும், காலில் விழுவதென்றால் நான்கைந்து பேரை கூடவே கூட்டிச் சென்று ஊடகவியலாளர்களுக்கு முன்னால் அதைச் செய்ய வேண்டியதுமில்லை என்பதும் இங்கு கவனிப்பிற்குரியது.
உலக அரசியல் சந்திப்புக்களின் பொதுவான நியதி போல மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருந்த மைத்திரி- மஹிந்த சந்திப்பும் இரு தரப்புக்கும் 100 சதவீத வெற்றியை தராமல் நிறைவுபெற்றிருக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் ஜனாதிபதியும் நல்லெண்ண வெளிப்பாடாக இந்த சந்திப்பை நடத்தியிருக்கின்றார்கள்.
தம்மைப் பற்றிய நல்லபிப்ராயத்தை பொது மக்களிடையே கட்டியெழுப்ப உதவும் என்பது அவர்களது நம்பிக்கையாக இருக்கலாம்.
ஒன்றாக இருந்து பின்னார் ஒரு பூகம்பத்தின் போது இரு துருவங்களான மலைகளைப் போல ஆகிவிட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் இவ்வாறான ஒரு சந்திப்புக்கு முன்வந்தது மிகவும் வரவேற்கத்தக்க முயற்சியாகும்.
ஆனால் மஹிந்த தரப்பு முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றுகூட மக்களுக்கு சார்பானதாக, மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இல்லை என்பது மன வருத்தத்திற்குரியது.
இந்த நாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 58 இலட்சம் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த போது இந்த மக்களுக்கு உருப்படியான அனுகூலங்களை நேரடியாக வழங்கக் கூடிய கோரிக்கை ஒன்றையேனும் மஹிந்த குழுவினர் முன்வைத்திருக்கலாம்.
அது மக்களுக்கான வேண்டுகோளாக இருக்கும் பட்சத்தில் ஜனாதிபதி அதற்கு சாதகமான வாக்குறுதிகளை அளித்திருக்க அதிக வாய்ப்பிருந்தது.
ஆனால், தமது சொந்த அரசியல் மற்றும் கட்சி விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்ததன் மூலம், தமது அரசியல் எப்பேர்ப்பட்டது என்பதை வெ ளியுலகுக்கு காட்டியிருக்கின்றது மஹிந்த தரப்பு.
புதுப்புது சந்தேகங்கள்
எது எவ்வாறிருப்பினும் இந்த சந்திப்பு எதிர்காலத்தில் வேறு ஏதேனும் நகர்வுகளுக்கு இட்டுச் செல்லுமா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதை மறுப்பதற்கில்லை.
குறிப்பாக, மைத்திரி மஹிந்த உறவு துளிர்த்து விடுமா என்பதும் அதனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கனவு சிதைந்துவிடுமா என்பதுமே இன்றைய கவலையாக இருக்கின்றது.
இதுவரை பாராளுமன்றம் கலைக்கப்படவில்லை என்றாலும் இன்னும் மூன்று மாதங்களுக்குள் பொதுத் தோ்தலொன்று நடைபெறும் என்பது நிச்சயிக்கப்பட்டாயிற்று.
அந்த தோ்தலில் பிரதமராகும் பேராசை மஹிந்த ராஜபக் ஷவுக்கு இருக்கின்றது. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்ட பிற்பாடு உருவாகும் பாராளுமன்றத்தில் அதிகாரமுள்ள பிரதமர் பதவியையும் ஒரு தடவையேனும் சுகித்து விட வேண்டும் என்பதில் அவர் குறியாக இருக்கின்றார்.
தனக்கு ஏற்பட்ட தோல்வி, இழப்புக்களுக்கு ஒரு ஆறுதலாக அப்பதவி இருக்கும் என்று மஹிந்த திடமாக நம்புவது புலனாகின்றது.
மைத்திரிபாலவிடம் ஜனாதிபதி பதவியை ஒப்படைத்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் பிரமதர் பதவியை இலக்கு வைத்ததாகவே இருந்தது.
ஆனால், கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட காரணங்களால் அது சாத்தியப்படாமல் போனதாலேயே இப்போது நேரடியாக சு.க.வின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவிடம் வந்திருக்கின்றார் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
தமது பக்கம் சாதக சூழல் இருந்திருக்குமானால் மஹிந்த இந்த அளவுக்கு இறங்கி வந்திருக்க மாட்டார் என்பது சின்னப்பிள்ளைக்கு கூட தெரிந்த விடயமாகும்.
சுதந்திரக் கட்சி பிளவுபட்டுள்ளது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பல துண்டங்களாகியிருக்கின்றது, பொது பலசேனாவை எதிர்த்தால்தான் சிறுபான்மை மக்களை கவரலாம் என்ற நிலைப்பாடு உருவாகியுள்ளது.
சு.க. சார்பில் வேட்பாளராக மஹிந்தவை நிறுத்துவது என்றால் கூட கட்சித் தலைவரான மைத்திரிபால ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது.
சுதந்திரக் கட்சியை தவிர சுயேச்சைக் குழுவில் அல்லது புதிய கட்சியொன்றில் போட்டியிட்டால் எல்லாவற்றையும் பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
இவ்வாறான ஒரு நிலையில் வெறுமனே மக்கள் அலை என்று சொல்லிக் கொண்டு கூட்டம் கூட்டுவதால் மட்டும் பெரிதாக ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை என்பதை உணர்ந்ததன் அடிப்படையிலேயே, ஜனாதிபதியை சந்திப்பதற்கான முஸ்தீபுகளை எதிர்தரப்பு மேற்கொண்டிருக்கின்றது.
இதன்போது அவர்கள் பேசிய விடயங்களை வைத்துப் பார்க்கின்றபோது முன்னாள் ஜனாதிபதியை பிரதமராக்கும் திட்டத்தின் கடைசிக்கட்ட முயற்சியைதான் இப்போது மஹிந்த ஆதரவு அணியினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பது பட்டவர்த்தனமாக தெரிகின்றது.
அவ்வாறு நடக்குமாயின் நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என்பது ஒரு புறமிருக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்பதே பெரிய கேள்வியாக நம்முன்னேஎழுந்திருக்கின்றது. இரு தரப்பு சந்திப்பு இக் கேள்வியை பலமாக விதைத்துள்ளது.
இந்த நாட்டில் நிறைவேற்றதிகாரம் கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரத்தின் அளவுக்கு கோலோச்சிக்கொண்டிருந்த ஒரு ஆட்சிச் சூழலை மாற்றியமைத்ததில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழுமுதற் பங்குள்ளது.
அவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் இல்லையென்றால் இந்த நாட்டில் நல்லாட்சி உருவாகியிருக்கவும் மாட்டாது எனலாம்.
ரணிலின் கனவு பிரதமராக இருப்பதே. ஜனாதிபதியாக தன்னால் வர முடியாது என்பதை அனுபவங்களின் ஊடாக உணர்ந்து கொண்ட அவர் உச்சபட்சம் தமக்கு பிரதமர் பதவியே கிடைக்கும் என்பதை சரியாக முன்மதிப்பீடு செய்திருந்தார். அதுபோல இப்போது அப்பதவி கிடைத்திருக்கின்றது.
ஆனால் இன்று மீண்டும் ஏதாவது காரண காரியங்களின் அடிப்படையில் மஹிந்த ராஜபக் ஷ பிரதான வேட்பாளராக நிறுத்தப்பட்டு விடுவாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.
அவ்வாறு தின்பாருக்கு தேனெடுத்துக் கொடுத்துவிட்டு ஏமாந்து போக ரணில் விக்கிரமசிங்க ஒன்றும் அரசியல் வெகுளியல்ல.
அதேவேளை மைத்திரியும் மக்களும் மஹிந்த ராஜபக் ஷ பிரதமராவதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தவும் இல்லை.
ஆனால், சுதந்திரக் கட்சியா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியா இந்த நாட்டின் ஆட்சியில் பிரதான அங்கம் வகிப்பது என்ற ஒரு பனிப்போர் உருவாகும் என்றால் நிலைமைகள் மோசமாக மாற்றமடையும்.
தற்போது தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு சுமுகமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், பொதுத் தேர்தல் எனறு வருகின்ற போது எந்தக் கட்சியை முன்னிலைப்படுத்துவது என்ற சிக்கல் உருவாவதை தவிர்க்க முடியாது.
அவ்வாறான ஒரு நேரத்தில் சுதந்திரக் கட்சியின் சார்பில் வேறு யாரேனும் ஒருவர் நியமிக்கப்பட்டால் அது வேறு விடயம்.
ஆனால் மைத்திரி மஹிந்தவுக்கு இடையில் ஏதேனும் அடிப்படையில் உடன்பாடு எட்டப்பட்டு அதன் வழியாக முன்னாள் ஜனாதிபதி பிரதமர் வேட்பாளாராகி விடுவாரோ என்ற அச்சம் பொதுவாக ஏற்பட்டிருக்கின்றது.
அப்படி நடந்தால், கோடிகளையும் பல மில்லியன்களையும் எழுதிவிட்டு புச்சியத்தால் பெருக்கிய கதையாகிவிடும் இலங்கையின் நல்லாட்சி.
–ஏ.எல்.நிப்றாஸ்–