புதுடெல்லி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ரகசிய  கோப்புகள் மத்திய அரசிடம் இருப்பதாக பிரதமர் அலுவலகம் ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால் அவற்றை வெளியிட்டால், வெளிநாடுகளுடனான உறவு பாதிக்கும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இறப்பு குறித்த சர்ச்சை அவர் மாயமாகி 70 ஆண்டுகளாகியும் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

நேதாஜி  தைவான் நாட்டில் 1945 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 18 ஆம் தேதி நடந்த விமான விபத்தில் பலியாகி விட்டதாகக்  கூறப்பட்டு வந்தாலும், அந்த நாளில் அப்படியொரு விபத்து நடக்கவே இல்லை என்று தைவான் அரசு மறுத்து விட்டது.

இந்நிலையில்  நேதாஜி பற்றிய   பல ரகசிய கோப்புகள்   இந்திய  அரசின் வசம் இருந்தாலும், அவை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.

அதனால் அவர் தொடர்பான கோப்புகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அண்மையில் கூட பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பெர்லின் நகரில் அவரை நேதாஜியின் பேரன் சூரியகுமார் போஸ் சந்தித்துப்  பேசினார்.

அப்போது அவர், பிரதமர் மோடியிடம் தனது தாத்தா நேதாஜி மாயமான அல்லது மரணம் அடைந்ததாகக்  கூறப்படுகிற  நாள் தொடங்கி, அவர்  தொடர்புடைய அனைத்து   ரகசிய கோப்புகளையும் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதை பரிசீலிப்பதாக பிரதமர் உறுதி அளித்ததாகவும்  சூரிய குமார் போஸ் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அமைச்சரவை செயலாளர் அஜித் சேத் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில்,   நேதாஜி கோப்பு விவகாரத்தில், தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.

அதில் நேதாஜி பற்றிய தகவல்கள் அடங்கிய 41 கோப்புகள் இருப்பதாக பிரதமர் அலுவலகம் ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக பிரதமர் அலுவலகத் தரப்பில், நேதாஜி தொடர்பான 41 கோப்புகள் உள்ளன.

அவற்றில் 2 கோப்புகள்  பகிரங்கமாக அறிவிக்கப்பட்டவை.   அந்த கோப்புகள் நேதாஜி நிறுவிய இந்திய தேசிய ராணுவத்தின் சொத்துகள், அவர் மாயமான அல்லது இறந்தது தொடர்பான சூழல் குறித்தவை. இந்த 2 கோப்புகளும் தேசிய ஆவண காப்பகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.

10 கோப்புகள் பகிரங்கமாக அறிவிக்கலாமா, வேண்டாமா என வகைப்படுத்தப்படாதவை. ஆனால் அவற்றை பகிரங்கமாக அறிவிக்காமல் வைத்திருக்க விலக்கு பெறப்பட்டுள்ளது. 20 கோப்புகள் ரகசிய கோப்புகள் ஆகும்.

மேலும் உள்ள 4 கோப்புகள் மிக மிக ரகசியமானவை, நேதாஜி மனைவி, மகள் பற்றிய தகவல்கள், அவரது அஸ்தியை இந்தியாவுக்கு அனுப்பிவைப்பது தொடர்பான கடிதங்களைக்  கொண்டவை. 2 கோப்புகள் நேதாஜி மாயம் பற்றிய நீதிபதி முகர்ஜி கமிஷன் குறித்தவை.

மற்ற கோப்புகள் ரகசியமானவை. நேதாஜியின் உடல் ஜப்பானில் ரன்கோஜி கோவிலில் வைக்கப்பட்டிருந்தது தொடர்பானவை” என்று கூறப்பட்டுள்ளது.

நேதாஜி தொடர்பான ரகசிய கோப்புகளை வெளியிட்டால், அவை வெளிநாடுகளுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவை வெளியிடப்படுவதில் இருந்து விலக்குரிமை பெறப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply