வெள்ளைக்கொடி விவகாரம் மற்றும் சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக, ஐ.நா விசாரணைக் குழுவின் முன்பாக தாம் சாட்சியம் அளித்துள்ளதாக, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர்   சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“போரின் இறுதிக்கட்டத்தில்,  என்ன நடந்தது என்ற எனக்குத் தெரிந்த விபரங்கள் அனைத்தையும், வெள்ளைக் கொடி விவகாரம் குறித்தும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைய விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளேன்.

வரும் செப்ரெம்பர் மாதம் வெளிவரவுள்ள சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கை, மென்மையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

பால்கன், ஆபிரிக்க, மற்றும் இலத்தீன் அமெரிக்கா போன்ற ஏனைய போர் வலயங்களில், பொறுப்புக்கூறலுக்கு எப்போதுமே காலம் எடுத்துள்ளது.

அனைவரும், பொறுமை காக்க வேண்டும். ஆனால் முடிவில் போர்க்குற்றங்கள் வெளிப்படுத்தப்பட்டு, நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படும்.

எல்லா போர்க்குற்றங்களையும் சமமான வகையில் கண்டிக்க வேண்டியது முக்கியமானது.

சிறிலங்கா அரசாங்கமும், விடுதலைப் புலிகளும், ஏற்றுக்கொள்ள முடியாத கொடுமைகளை இழைத்துள்ளனர் என்பது  தெளிவானது.

உண்மையை வெளிக்கொண்டு வருதல், மிகவும் அவசரமான விவகாரம். உயிர் தப்பியவர்களுக்கு, தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரிய வேண்டும்.

தனது கணவனோ, பிள்ளையோ உயிருடன் இருக்கிறாரா என்று  தெரிந்து கொள்ளாமல் ஒரு பெண்ணால் எவ்வாறு தனது வாழ்வைத் தொடரவோ, அல்லது மீளமைக்கவோ முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share.
Leave A Reply