இலங்கையின் புங்குடுதீவு மாணவி வித்யாவின் மரணம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை புலனாய்வு காவல்துறையினர் ஞாயிறன்று மாலை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களுக்குத் தாங்களே தண்டனை வழங்கவேண்டும் என்றும், ஆகவே அந்த ஐவரையும் தம்மிடம் கையளிக்க வேண்டும் என்றும் புங்குடுதீவு ஊரவர் நூற்றுக்கணக்கில் திரண்டு காவல்துறையினரிடம் கோரி வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி மாணவி வித்யாவின் கொடூரமான கொலைக்கும், பாலியல் பலாத்காரத்துக்கும் இவர்களே காரணம் என கண்டறிந்து இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

12821இந்த ஐந்து பேரும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்துள்ளதாகவும், காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை அறிந்த ஊர் மக்கள், அவர்களை காவல்துறையினரிடமிருந்து கைப்பற்றுவதற்காக காவல்துறையினருடைய வாகனத்தைச் செல்லவிடாமல் வீதிகளை மறித்து போராட்டம் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்களைப் பாதுகாப்பாக குறிகட்டுவான் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து, அந்த காவல் நிலையத்தையும் ஊர் மக்கள் சூழ்ந்து கொண்டதாகவும், இதனால் அங்கும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஊர் மக்கள் திரண்டு கைது செய்யப்பட்டவர்களைக் கைப்பற்ற மேற்கொண்டுள்ள முயற்சியையடுத்து, புங்குடுதீவுக்கு மேலதிக காவல்துறையினரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

புங்குடுதீவில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை அறிந்து அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

vithya-01புங்குடுதீவு மாணவி வித்யா பாடசாலைக்குச் சென்றபோது கடத்தப்பட்டு மறுநாள் காலை காட்டுப்பாங்கான பகுதியில் கோரமாகக் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் ஏற்கனவே மூன்று பேரைக் கைது செய்திருந்தனர். அவர்களை மே மாதம் 28ஆம் தேதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே இந்த ஐந்து பேர் ஞாயிறன்று கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இலங்கையின் வடபகுதியில் பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்தக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்து தண்டனை வழங்கக் கோரியும் பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள ம.சிவதேவன், துசாந்தன், சசிதரன், சந்திராஜ, நிசாந் உள்ளிட்டோர் வயது முறையே 31, 31, 26, 25, 23 ஐ உடையவர்களாவர்.

இந்த ஐந்து பெரும் புங்குடுதீவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வருகிறது.

அத்துடன் இவர்களது கைதினை அடுத்து மற்றுமொரு சந்தேகநபரும் மக்களினால் பிடிக்கப்பட்டு மின்கம்பத்தில் கட்டப்பட்டு பொதுமக்களினால் தாக்கப்பட்டார். இவர் சுவிசில் இருந்து சென்றவர் எனவும் தெரிய வருகிறது.

உடனடியாக சம்பவ இடத்தை சென்றடைந்த பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வேலணை பிரதேசசபை தலைவர் தவராசா ஆகியோர் தலையிட்டு மக்களிடையே சமரசத்தை ஏற்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மரணமடைந்த வித்தியா கொலை செய்யப்பட்ட இடத்தில் நின்று கொண்டு பிரேதத்தை மீட்க உதவியதாகவும் ,அவர்கள் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க அவ்வாறு நடந்து கொண்டதாகவும் மக்கள்   குறிப்பிட்டனர்.

1281512816128171281812819

Share.
Leave A Reply