மனித உரிமைகள் மறக்கப்பட்டு ஊடக உள்நுழைவு மறுக்கப்பட்டு சாட்சி இல்லாது நடத்தப்பட்ட சமரே முள்ளிவாய்க்கால் என வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இன்று (18) காலை இடம்பெற்ற மே 18 நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
´உயிரிழந்த எமது பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவுகூரும் நாளே இன்றைய நாளாகும். இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களை மாத்திரமன்றி உலக நாடுகளில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களினதும் நெஞ்சங்களை உலுக்கிய சோகமான செய்திகளை காவிவந்த இந்த நாளானது யுத்தத்தால் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகின்ற புனித நாளாகும்.
உலகலாவிய ரீதியில் வாழும் இலங்கை தமிழ் மக்களின் ஒருமித்த மனித சிந்தனையில் கலங்கத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வே முள்ளிவாய்க்கால்.
மனித உரிமைகள் மறக்கப்பட்டு ஊடக உள்நுழைவு மறுக்கப்பட்டு சாட்சி இல்லாது நடத்தப்பட்ட சமரே முள்ளிவாய்க்கால்.
தடை செய்யப்பட்ட போராயுதங்கள் பாவிக்கப்பட்டன என்று பல்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. வெளிநாட்டு உதவிகள் உதாசீனப்படுத்தப்பட்டு உள்நாட்டு உதவிகள் மறுக்கப்பட்டு உண்மை நிலை சொல்லாது மக்கள் தொகையை குறைத்து கூறி அப்பாவி பெண்கள், பிள்ளைகள், குழந்தைகளின் உயிரை காவிச் சென்றதே முள்ளிவாய்க்கால்.
முள்ளிவாய்க்காக் எமது சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்ட சோக வரவாற்று பதிவு.
போரிலே உயிரிழந்த எம் உறவுகளை என்னென்றும் நினைவுகூர தமிழர்களாகிய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்´ என்று வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.