யாழ்ப்பாணம், வேலணை கிழக்கு, 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் விமலினி (வயது 20) என்ற யுவதியை வியாழக்கிழமை (21) முதல் காணவில்லையென அவரது உறவினர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள நண்டு பதனிடும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இந்தச் யுவதி, வியாழக்கிழமை (21) காலை வேலைக்குச் சென்று, இதுவரையில் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து, உறவினர்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.
யாழ். ஊர்காவற்றுறை, நாரந்தனையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரை கடந்த 11ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது உறவினர்கள், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
எஸ்.நிரோஜினி (வயது 20) என்பவரே இவ்வாறு காணாமற்போயுள்ளார். முல்லைத்தீவிலுள்ள தனது கணவனைச் சந்திப்பதற்காக செல்வதாகக்கூறி தனது 2 வயதுக் குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் கடந்த 11ஆம் திகதி சென்ற பெண், இதுவரையில் வீடு திரும்பவில்லை என பொலிஸ் முறைப்பாட்டில், உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கணவருடன் பெண் இருக்கின்றார் என நினைத்து இருந்த உறவினர்கள் பெண்ணைத் தேடவில்லை எனவும் இருப்பினும் அவர் கணவனிடம் செல்லவில்லையென்ற விபரம் தெரியவந்ததை அடுத்து பொலிஸ் முறைப்பாடு செய்வதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுரை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.