ஈராக்கில் சண்டை… தாக்குப்பிடிக்க முடியவில்லை ஈராக் இராணுவத்தால்… மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தி முன்னேறிக்கொண்டிருக்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ்.
அந்த மூர்க்கத் தாக்குதலால் ஈராக்கின் ரமடி நகரம் ஐ.எஸ். வசம் விழுந்தது. ஈராக் தனது ஆதிக்கத்தை இழந்தது.
ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ். அமைப்பினர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஈராக்கிற்குள் புகுந்து கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கே அவர்களின் கை ஓங்கியது. உடனே விழித்துக்கொண்ட அமெரிக்கா தனது விமானப் படையை அனுப்பி ஈராக் இராணுவத்துக்கு உதவியது. இன்னும் உதவி வருகிறது.
ஆனாலும் ஐ.எஸ். அமைப்பை ஒடுக்க முடியவில்லை.
அமெரிக்கா நேரடியாக இறங்கினால் ஐ.எஸ். எல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விடும் என்றுதான் சர்வதேச தகவல்கள் சொல்கின்றன.
ஆனால் அமெரிக்கா இறங்காதவரைதான் ஐ.எஸ்.இன் எல்லாமும்.
Captured: Syrian soldiers that were taken after ISIS took control of the ancient city of Palmyra
கடந்த வெள்ளிக்கிழமை சண்டை உச்சகட்டத்தை எட்டியது.
அப்போது 500இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரை ஐ.எஸ். காரர்கள் கொன்று குவித்தனர்.
இந்த சண்டையில் பொதுமக்கள், இராணுவ தரப்பில் ஆயிரக்கணக்கானோர் படுகாயமும் அடைந்தனர்.
கிட்டத்தட்ட இரண்டாயிரம் இராணுவ வீரர்கள் வரை உயிர் பிழைத்தால் போதுமென்று சண்டையிடாமல் தப்பி ஓடியே விட்டனர்.
இதுகுறித்து அரசு செய்தி தொடர்பாளர் முஹன்னாத் ஹைமர் ஒரு அறிக்கைவிட்டார். அதில் பலியானோர் எண்ணிக்கை 500இற்கும் அதிகமாக இருக்கலாம்.
தாக்குதலுக்கு பயந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும், இராணுவ வீரர்களும் ரமடி நகரை விட்டு வெளியேறி விட்டனர் என்றார்.
அதேநேரம், ரமடி நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 1 இலட்சத்து 14 ஆயிரம் மக்கள் வன்முறைக்கு பயந்து வெளியேறிவிட்டதாக ஐ.நா. சபை கூறுகிறது.
இந்த நிலையில் ரமடி நகரம் முழுமையாக ஐ.எஸ். வசம் வந்தது. இது ஈராக் இராணுவத்துக்கும், விமானத் தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய தோல்வியாக கருதப்படுகிறது.
ரமடி நகரை தீவிரவாதிகள் கைப்பற்றி விட்டதால் இனி விருப்பம்போல் தங்களுக்கென ஒரு நாட்டை அவர்கள் உருவாக்க முயற்சிப்பார்கள் என்றும் கருதப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜோன்கெரி கூறும்போது, ரமடி நகருக்கு விரைவில் கூடுதல் இராணுவத்தை ஈராக் அரசு அனுப்பி வைக்கும்.
இதனால் அடுத்து வரும் வாரங்களில் ரமடி நகரை ஈராக் இராணுவம் மீட்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ரமடி நகரில் பெரும் தோல்வியை இராணுவம் சந்தித்துள்ள நிலையில் ஈராக் பிரதமர் ஹைதர் அல்–அபாதி, ‘‘அன்பார் மாகாண இராணுவ நிலைகளை படை வீரர்கள் தகர்த்து விடக்கூடாது.
அப்படிச் செய்தால் அது பாலைவன மாகாணமான அன்பார் முழுவதையுமே தீவிரவாதிகளே கைப்பற்றிவிட வழிவகுத்துவிடும். தீவிரவாதிகளை எதிர்த்து போராட இராணுவத்தினரும் பொதுமக்களும் தயாராக இருக்கவேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
ஐ.எஸ். அமைப்பு மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்படுகிறது.
அதுதான் பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்துகிறார்களாம். ஏன் அவர்களை விற்கவும் செய்கிறார்களாம்.
ஐ.எஸ்.இல் இருந்து தப்பி வந்த ஒருவர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதில் அங்கு அரங்கேறும் சகிக்கமுடியாத கொடுமைகளை பற்றி அதில் விவரித்திருக்கிறாராம்.
ஐ.எஸ். உலகத்திற்கு மிகப்பெரிய தலையிடி என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். இவர்களை இவ்வளவு தூரம் வளரவிட்டதே தப்பென்றும் சொல்கிறார்கள்.
ஆனால் இதுவரை பெரியளவில் எந்த நடவடிக்கையும் ஐ.எஸ்.இற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து எடுக்கவில்லையே என்று ஆதங்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்.
கொள்கைக்காக போராடுகிறார்கள் என்றாலும் பரவாயில்லை, இவர்களின் கொள்கையே தவறாகத்தானே இருக்கிறது. நாடுகளைச் சேர்த்து பேரரசாக்குவதற்கு இவர்கள் யார்?
இந்த ஜனநாயகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும், அதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் மன்னர் ஆட்சியைக் கொண்டுவந்து எதை சாதிக்கப்போகிறார்கள்.
அனைவரையும் கொன்றுகுவித்து, சிரியாவையும் ஈராக்கையும் பாலைவனமாக்கிவிட்டு யாரை ஆளப்போகிறார்கள்.
பாலஸ்தீனத்தில் போராடும் ஹமாஸும் சரி, ஜோர்தானின் ஹிஸ்புல்லாவும் சரி ஏன் ஈரான்கூட ஐ.எஸ். அமைப்பை ஆதரிக்கவில்லை. ஏன் அவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவே இல்லை.
உலகின் மிகமுக்கிய அமைப்பு மிகவும் பலம் கொண்ட அமைப்பாகக் கருதப்படும் ஹிஸ்புல்லாவும் ஒரு சந்தர்ப்பத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை எச்சரித்திருந்தது.
ஏன் ஈரான்… இன்னமும் எச்சரித்துக்கொண்டுதான் இருக்கிறது. அவர்களை யாரும் ஏற்றுக்கொள்ளவே இல்லாதபோது யாருக்காகத்தான் இந்த போராட்டம்… இதை போராட்டம் என்று வார்த்தைக்குச் சொன்னாலும் இது போராட்டமா என்பது கேள்விதான்…
சீரழிகிறது சிரியா, நாகரித்தின் தொட்டிலாக சொல்லப்படும் ஈராக்கோ சுடுகாடாக மாறிக்கொண்டிருக்கிறது. எங்கும் மரண ஓலம். காலடி எடுத்து வைத்தால் எங்கும் மண்டை ஓடுகள். கொன்றுகுவித்தவர்களின் மண்டை ஓடுகள் பாதி… இவர்கள் தண்டனை என்ற பெயரில் வெட்டி எடுத்தவர்களின் மண்டை ஓடுகள் பாதி.
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டைத்தான் மன்னர் ஆளப்போகிறாரா
முற்றும்
Seized: Members of the Syrian army crouch before cameras after they were seized by ISIS
