கள்ளக்காதல் அது என்றும் ஆபத்தானது. அது கடந்த மே 23ஆம் திகதி சனிக்கிழமை. நேரம் எப்படியும் இரவு 9.00 மணியை தாண்டியிருக்கும். 119 இரவு நேர மோட்டார் சைக்கிள் ரோந்தில் கான்ஸ்டபிள்களான பிரியந்த (3912) ரத்நாயக்க (69471) ஆகியோர் ஈடுபட்டிருந்த நேரம் அது.
அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹந்தொட்ட பிரதேசத்தில் பிரியந்தவும் ரத்நாயக்கவும் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வெள்ளை வேன் ஒன்றினை அவர்கள் அவதானித்துள்ளனர்.
JN9802 என்ற மெஸ்டா ரக குறித்த வேன் பாழடைந்த இடங்களில் அல்லது சன நடமாட்டமற்ற பிரதேசங்களில் வேகத்தை குறைப்பதும் பின்னர் வேகமாக பயணிப்பதுமாக இருந்துள்ளது.
இந்நிலையில் அந்த வெள்ளை வேனின் பயணம் குறித்து சந்தேகம் கொண்ட பிரியந்தவும் ரத்நாயக்கவும் அந்த வேனை பின் தொடர்ந்துள்ளனர்.
ஒரு இடத்தில் வைத்து வேனை நிறுத்துமாறு அவர்கள் சமிக்ஞை செய்யவே அந்த வேன் சிறிது தூரம் அப்பால் சென்று நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் அந்த வெள்ளை வேனை பின்தொடர்ந்த பிரியந்தவும் ரத்நாயக்கவும் உடனடியாக செயற்பட்டு அந்த வேன் நிறுத்தப்பட்ட இடத்துக்கு சென்றனர்.
தாம் களியாட்டம் ஒன்றுக்காக விரைவாக செல்வதாகவும் தம்மை செல்ல அனுமதிக்குமாறும் அவர்கள் பொலிஸாரைக் கோரிய நிலையில் பொலிஸார் அவர்களின் கோரிக்கைக்கு இணங்கவில்லை.
வேனை சோதனை செய்ய வேண்டும் எனக்கூறிய பொலிஸ் கான்ஸ்டபிள் பிரியந்த வேனின் பின்கதவினை திறந்தபோது கருகிய வாடை வெளியே வீச ஆரம்பித்துள்ளது.
தொடர்ந்து வேனின் பின் பகுதியை சோதனை செய்தபோது அங்கு கருகிய நிலையில் ஒரு சடலம் உரப்பைகளால் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
உடனடியாக செயற்பட்ட கான்ஸ்டபிள் பிரியந்த அந்த வேனின் சாரதியாக பயணித்த நபரையும் முன் ஆசனத்தில் இருந்தவரையும் கைது செய்ததுடன் விடயத்தை தமது மேலதிகாரியான அத்துருகிரிய பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ மகநாமவிற்கும் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அசங்க பிரேமலாலுக்கும் அறிவிக்கவே அவர்கள் விசேட பொலிஸ் குழுவுடன் ஸ்தலத்துக்கு விரைந்தனர்.
விடயம் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டு, இந்த உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த வெள்ளை வேனை பொலிஸ் பொறுப்பில் எடுத்த அத்துருகிரிய பொலிஸார் அந்த வேனில்இருந்த காலி வட்டரெக – தெனியவத்த பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய அநுர திலிப் நாணயக்கார மற்றும் அத்துருகிரிய பொரலுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பீட்டர் ஜோசப் சரத் ஆகியோரை கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
ஸ்தலத்துக்கு கடுவலை மேலதிக நீதிவான் வந்து பார்வையிட்டதை தொடர்ந்து எரிந்த நிலையில் இருந்த சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொலிஸ் பிரேத அறைக்கு மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பட்டது.
அப்போது அந்த சடலம் அடையாளம் காண முடியாத அளவு சிதைந்திருந்தது.
இந்த கைது தொடர்பில் மிகத் திறமையாக செயற்பட்ட கான்ஸ்டபிள் பிரியந்த எம்மிடம் இப்படி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நாங்கள் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தோம். இதன்போது கஹந்தொட்ட பிரதேசத்தில் சந்தேகத்துக்கு இடமான வெள்ளை வேன் ஒன்று எமது கண்ணில் பட்டது.
அந்த வேன் சிற்சில இடங்களில் நிறுத்தி நிறுத்தி பயணித்தது. எமது மோட்டார் சைக்கிளைக் கண்டு வேகத்தை அதிகரித்தது.
நானும் சிவில் பாதுகாப்பு படை வீரரான ரத்நாயக்கவும் வேனைத் துரத்திச் சென்று நிறுத்தினோம். அந்த வேனில் இருவர் இருந்தனர்.
அவர்கள் இருவரும் சேர்…. எங்களுக்கு பார்ட்டி ஒன்று உள்ளது. அதனால்தான் கொஞ்சம் வேகமாக செல்கின்றோம் என்றனர்.
எனினும் அவர்களது பதிலை எதிர்பார்க்காத நாம் வேனை சோதனை செய்தோம். இதன்போதுதான் கருகிய ஒரு சடலத்தை நான் கண்டேன்.
அதனை கண்ட நாம் ஆச்சரியமடைந்தோம். அவர்கள் ஒவ்வொரு கதையாக எம்மிடம் தெரிவித்தனர்.
எரித்த சடலத்தை பாழடைந்த இடமொன்றில் போடவே தாம் வந்ததாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு கட்டத்தில் சேர்… எங்களை போக விடுங்கள்.. நீங்கள் கோரும் பணத்தொகையை நாம் தருகின்றோம் எனவும் பேரம் பேசினர்.
எனினும் நாம் மசியவில்லை. எமது உயர் அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்கள் இருவரையும் கைது செய்தோம் என்றார்.
இந்நிலையில் தான் கைது செய்யப்பட்ட அநுர திலீப்பையும் பீட்டர் ஜோசப்பையும் நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட 48 மணிநேர தடுப்பு காவல் உத்தரவின் கீழ் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் பிரேமலால் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்த விசாரணைகளில் வேனில் இருந்த சடலம் தொடர்பிலும் அது தொடர்பிலான விபரங்களையும் பொலிஸார் வெளிப்படுத்திக் கொண்டனர்.
அதன்படி கருகிய நிலையில் சடலமாக கிடந்தவர் ஜகத் பிரசாத் என்ற காலி வட்டரெக கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய இராணுவத்தின் விசேட படையணியின் முன்னாள் வீரர் என்பது தெரியவந்தது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகரவின் தகவல்களின் படி ஜகத் பிரசாத் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையிலேயே சடலத்தை அடையாளம் காண முடியாதவாறு சிதைத்து பாழடைந்த இடமொன்றில் கைவிட்டு செல்ல சந்தேக நபர்கள் முயற்சித்துள்ளனர்.
அத்துடன் ஜகத் பிரசாத்துக்கு எதிராக பாலியல் பலாத்காரம், வீடுகளுக்கு தீ வைத்தல், திருட்டு உள்ளிட்ட பல குற்றச் சாட்டுக்கள் இருப்பதாக சுட்டிக்காட்டும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர போத்தல பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக இரு பாலியல் பலாத்கார முறைப்பாடுகளும் மூன்று கொள்ளைகள் தொடர்பிலும் மேலும் இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் முறைப்பாடுகள் உள்ள நிலையில் நீதிமன்றங்களில் வழக்குகளும் உள்ளதாக குறிப்பிட்டார்.
சடலம் தொடர்பான தகவல்களுக்கு மேலதிகமாக அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்ட தொடர் விசாரணைகளில் அதுவொரு கொலை என்பதையும் அதனுடன் மேலும் இரு சந்தேக நபர்களுக்கு தொடர்பிருப்பதையும் அத்துருகிரிய பொலிஸார் வெளிப்படுத்திக் கொண்டனர்.
பிலியந்தலை பொல்வோன மடபாத்த பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய ஜீவந்த சுரங்க, அதே பிரதேசத்தின் ஜம்புரெலிய வீதியை சேர்ந்த 34 வயதுடைய வித்திக சங்க விஜேசூரிய ஆகிய சந்தேக நபர்களுக்கே இக்கொலையுடன் தொடர்புள்ளமை தெரியவரவே அது தொடர்பில் பிலியந்தலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
உடன் செயற்பட்ட பிலியந்தல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சோமரத்ன விஜேயமுனி குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் நந்தசிறி கமகே ஆகியோரின் கீழான பொலிஸ் குழுவினர் அவர்களை கைது செய்து பின்னர் அத்துருகிரிய பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களுக்கு எதிராகவும் பின்னர் 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவை பெற்றுக்கொண்ட பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்தனர். சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தின் பிரகாரம் நடந்தது இதுதான்.
கைதாகி தற்போது விளக்கமறியலில் உள்ள பிரதான சந்தேக நபரான அநுர திலீப்பின் மனைவி சஹானா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)வுக்கும் கொலை செய்யப்பட்டுள்ள ஜகத்துக்கும் இடையே ஒரு காலத்தில் ரகசிய தொடர்பு இருந்துள்ளது.
அந்த காலப்பகுதியால் அநுர திலீப் வெளிநாட்டில் வேலை செய்துள்ளார். அப்போது இரு தரப்பினரும் காலி வட்டரெக பிரதேசத்திலேயே இருந்த நிலையில் இந்த ரகசிய தொடர்பு குறித்து அநுர திலீப்புக்கும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில்தான் கடந்த செப்டம்பர் மாதம் காலி போத்தல பொலிஸ் பிரதேசத்துக்கு உட்பட்ட அநுர திலீப்பின் வீடு ஜகத்தினால் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சஹானா தனது தாய்வீடான பிலியந்தலையிலுள்ள மடபாத்த வீட்டுக்கு வந்து அங்கு தனது குடும்பத்தாருடன் தனியாக வசித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பிலியந்தல, மடபாத்தவிலுள்ள சஹானாவின் தாய் வீட்டுக்கு ஜகத் சஹானாவை தேடி வந்துள்ளார்.
இந்நிலையில் சஹானாவின் இளைய சகோதரரான ஜீவந்த சுரங்க, ஜகத் சஹானாவை தேடி வந்த தகவலை அநுர திலீப்புக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல சம்பவங்கள் தொடர்பில் ஜகத் தொடர்பில் வைராக்கியத்துடன் இருந்த அநுர திலீப் அத்துருகிரியவை சேர்ந்த பீட்டர் ஜோசப் என்ற தனது மைத்துனரையும் உதவிக்கழைத்துக் கொண்டு அந்த வெள்ளை வேனில் பிலியந்தலையிலுள்ள சஹானாவின் தாய் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதன் போது அங்கிருந்த ஜகத்தை கண்டதும் அநுர திலீப், பீட்டர் ஜோசப், விந்திக சங்க விஜேசூரிய, ஜீவந்த சுரங்க ஆகியோர் இணைந்து ஜகத்தை பிடித்து கட்டி பொல்லுகளால் பலமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து வீட்டாரிடம் அவரை பொலிஸில் ஒப்படைக்கப் போவதாக கூறி அந்த வெள்ளை வேனில் கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் அவர்கள் ஜகத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கவில்லை. மாறாக அவரை பீட்டர் ஜோஸப்பின் அத்துருகிரிய பொரகொட வீட்டுக்கு பின்னால் உள்ள இறப்பர் தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ள சந்தேக நபர்கள் அங்கு வைத்து ஜகத் மீது பெற்றோலை ஊற்றி அவர் மீது டயர்களையும் போட்டு தீ வைத்து எரித்துள்ளனர்.
முகம், கால், கைகள் என அனைத்தும் அடையாளம் தெரியாதவாறு சிதைந்து கருகிய பின்னர் அந்த சடலத்தை உரப்பைகளின் உதவியுடன் வேனில் ஏற்றி பாழடைந்த இடமொன்றில் கைவிட்டு செல்லும் நோக்கோடு பயணித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் அந்த சடலத்தை களனிகங்கை அல்லது அதனை சார்ந்த பாழடைந்த இடமொன்றில் போடுவதையே நோக்காக கொண்டிருந்துள்ளனர். இந்நிலையிலேயே பொலிஸாரிடம் அவர்கள் வசமாக சிக்கி கொண்டுள்ளனர்.
விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் தகவல்களின் படி இராணுவத்திலிருந்து தப்பி வந்த ஜகத் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுவந்த நிலையில் முதலில் சஹானாவை பலவந்தமாக அச்சுறுத்தி தனது பாலியல் தேவையை பூர்த்தி செய்துள்ளான்.
பின்னர் சிலகாலம் இருவரும் விருப்பத்துடன் இருந்தாலும் இறுதியில் சஹானா ஜகத்துடன் தொடர்பை துண்டித்துள்ள நிலையில் குடும்பப்பிரச்சினை காரணமாக அநுர திலீப்புடனும் சேர்ந்து வாழாது, தனது தாய் வீட்டில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவேறு சந்தர்ப்பங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட 48 மணிநேர தடுப்புக்காவல் அனுமதியின் பிரகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் விசாரணைகளின் பின்னர் கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட ஜகத் தரப்புக்கும் சந்தேக நபர்கள் தரப்புக்கும் நீண்டகாலமாக நிலவிய பகைமை, குரோதம், வைராக்கியம் மற்றும் ஜகத்தின் சஹானாவுடனான கள்ளக்காதலும் கொலைக்கு காரணமானதாக பொலிஸாரின் விசாரணைகளில் கண்டு பிடிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
கள்ளக்காதல் அது என்றும் ஆபத்தானது.