யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் அதிகரிக்கும் தன்மை நிபுணர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டத்துக்குப் பணிவாக நடந்து கொள்ளும் பிரஜைகளைக் கொண்ட இடமென அறியப்பட்ட யாழ்.குடாநாடு இன்று குற்றவாளிகளினதும் சட்டத்தை மீறுபவர்களினதும் வேட்டைக் களமாக மாறியிருப்பதையிட்டு நிபுணர்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.

“குற்றச்செயல்கள் இப்போது மிக உயர்மட்டத்தில் இருக்கின்றன. 

தினமும் யாழ்நகரில் மட்டும் 20 தொடக்கம் 30 சைக்கிள்கள் திருடப்படுகின்றன. 70 சதவீதமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதிப்பத்திரம் கிடையாது.

பொலிஸாரில் அதிகமானவர்கள் தமிழர்கள் அல்லாதவர்கள் ஆவர். அவர்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கின்றனர்.

போதியளவு சிறைச்சாலைகள் இல்லாததால் நீதிமன்றங்கள் பிணை வழங்குகின்றன“ என்று பிரிட்டிஷ் பொலிஸ் துறையில் பணியாற்றியிருந்தவரும் யாழ்.வாசியுமான செபஸ்டியன் நேரு எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்திருக்கிறார்.

வேலை வாய்ப்பின்மை அதியுயர்மட்டத்தில் இருப்பது ஒரு காரணமாகும் என்று பருத்தித்துறை அபிவிருத்தி நிறுவனத்தைச் சேர்ந்த கலாநிதி முத்துகிருஷ்ணா சர்வானந்தன் கூறுகிறார்.

இலங்கை முழுவதும் வேலைவாய்ப்பின்னை 18 சதவீதமாக இருக்கின்றது. அதேவேளை தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாகாணத்தில் தொழில்வாய்ப்பின்மை 31.2 சதவீதமாக இருக்கின்றது.

வட மாகாணத்தில் நிதித் துறை அபிவிருத்தித் திட்டங்கள் 76 சதவீதமாக அதிகரித்துள்ளன. ஆனால் இந்த முதலீடுகளால் தொழில்வாய்பு 5 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது என்று சர்வானந்தன் கூறியுள்ளார்.

ஆனால் இளைஞர்கள் அலுவலக உத்தியோகத்தையே பார்க்க விரும்புகின்றமை வேலைவாய்பின்மைக்கு ஒரு காரணம் என யாழ்ப்பாணத்திலுள்ள முதலீட்டுச் சபையைச் சேர்ந்த ஜெயமனோன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து உறவினர்கள் அனுப்பும் பணத்தை அங்குள்ள இளைஞர்கள் அழிக்கின்றனர். அவர்கள் அலுவலக உத்தியோகத்தையே விரும்புகின்றனர். இதன் விளைவாக தொழிற்துறை இங்கு வருவதில்லை என்று ஜெயமனோன் கூறியுள்ளார்.

ஆனால் யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் முன்மாதிரியாக விளங்குபவர்களோ அல்லது கொள்கைகளோ குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என சமூக செயற்பாட்டாளர் தியாகராஜா நிரோஸ் கூறியுள்ளார்.

போர்க்காலத்தில் விடுதலை இயக்கம் கொள்கைகளையும் இலக்குகளையும் முன்வைத்திருந்தது யுத்தத்திற்கு பின்னர் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த வெற்றிடத்தை ஆரோக்கியமற்ற அல்லது குற்ற நடவடிக்கைகள் நிரப்பியுள்ளன. உயர்கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இளைஞர்களை அவற்றில் ஈடுபடுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை அரசாங்கமும் சிவில் சமூகமும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தலைவர்களை உருவாக்குவதற்கான சந்தர்ப்பங்களைத் தோற்றுவிக்க வேண்டும். இதன்மூலம் மற்றவர்கள் அதனைப் பின்பற்றுவார்கள் என்று யாழ். பல்கலைக்கழகத்தின் உளவியல் மருத்துவ நிபுணர் தயா சோமசுந்தரம் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply