மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரதேசமே மண்டூர். அமைதியாக இருந்த அந்தப்பிரதேசத்தின் அமைதி கடந்த செவ்வாய்க்கிழமை முற்பகல் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் குலைக்கப்பட்டது.
ஆம், சத்தியானந்தம் மதிதயன் (42 வயது). மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூக சேவை அதிகாரியாக கடமையாற்றி வந்தவர். அமைதியானவர். வீண் வம்புக்கு செல்லாதவர்.
சமூகத்தை நேசித்தவர். இப்படியெல்லாம் கூறிக்கொண்டே செல்ல முடியுமான அவரை கடந்த செவ்வாயன்று முற்பகல் 9.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதவர்கள் சுட்டுக்கொலை செய்து மண்டூரில் பரபரப்பையும் அச்சத்தையும் விதைத்தனர்.
பிரதேசத்தில் அனைவராலும் அறியப்பட்ட மதிதயன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் ஊரெங்கும் பரவ உடனடியாக ஸ்தலத்திற் விரைந்த பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்தனர்.
மட்டக்களப்புக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் ஜயசிங்கவின் மேற்பார்வையின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் சிசிரவின் ஆலோசனையின் பிரகாரம் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத்தின் நேரடி கட்டுப்பாட்டில் அப்பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவினரால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
நேற்று காலை வரை இந்த படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பிச்சென்ற சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படாத போதும் பொலிஸாரின் விசாரணைகளில் குறிப்பிடத்தக்க அளவான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக மதிதயன் ஏன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கு விடை தேடும் பொலிஸார் இரு முக்கியமான விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது. அதாவது மதிதயனுடன் தொடர்புபட்ட இரு முரண்பாடுகளான விடயங்கள் தொடர்பிலேயே இந்த அவதானம் செலுத்தப்பட்டது.
அத்துடன் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய அறிவியல் ரீதியான தடயங்களை பெற்று வரும் பொலிஸார் இதுவரை சம்பவம் தொடர்பில் 10 முதல் 15 வரையான வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
அதன்படி கடந்த 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி கடந்த நிலையில் மண்டூரில் உள்ள மதிதயன் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் இருவர் வந்துள்ளார்கள். ஒருவர் தலைக்கவசம் அணிந்திருந்துள்ள நிலையில் மற்றையவர் கையில் தலைக்கவசம் இருந்துள்ளது.
இதனை மதிதயனின் மனைவி அவதானித்துள்ள போதும் தனது கணவர் அலுவலகம் செல்லாததால் அவரின் சேவையொன்றை நாடி எவரேனும் வந்திருக்கலாம் என எண்ணி வந்தவர்களை நோட்டமிடாது சமையலறைக்கு சென்று தேநீர் தயாரித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமையன்று கொழும்புக்கு வந்திருந்த மதிதயனின் கழுத்தில் ஒரு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனையடுத்தே அவர் செவ்வாயன்று அலுவலகம் செல்லாது வீட்டில் விடுமுறையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் மனைவி தேநீர் தயாரிக்கும் போது மதிதயனும் மோட்டார் சைக்கிளில் வந்தோரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை மதிதயனின் மனைவியால் முழுதாக கேட்கவோ அல்லது அனுமானிக்கவோ முடியா விட்டாலும் “அப்படி செய்ய முடியாது” போன்ற சில வார்த்தைகளை மதிதயன் கூறுவது மனைவி காதுகளில் விழுந்துள்ளதாக அறிய முடிகின்றது.
இந்நிலையிலே சில நிமிடங்களில் மதிதயனுடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
மதிதயனை 9 மில்லி மீட்டர் ரக துப்பாக்கியின் இரு சன்னங்கள் பதம் பார்த்துள்ளதுடன் வெற்றுத்தோட்டாக்களையும் சந்தேக நபர்கள் பொறுக்கி தடயமற்ற நிலையில் தம்முடனேயே எடுத்து சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. மதிதயனின் தலையின் பின்புறமாக இரு துப்பாக்கி குண்டுகளும் பாய்ந்துள்ளன.
இந்நிலையிலேயே சத்தம் கேட்டு சமையலறையிலிருந்து ஓடி வந்துள்ள மனைவி கணவனான மதிதயன் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு கதறி அழ முழு மண்டூரும் மதிதயனின் வீட்டில் கூடியது. இதனையடுத்தே பொலிஸார் அங்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த கொலையானது மிகத்திட்டமிட்ட முறையில் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. மதிதயன் அன்று அலுவலகம் செல்லாத நிலையிலேயே வீடு தேடி வந்து அவரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கும் படியான தகவல்களும் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
குறிப்பாக மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவரும் மதிதயன் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றுக்கு முன்பாக நீண்ட நேரம் காத்திருந்ததாகவும் பின்னர் வீடு தேடி சென்று அவர்கள் இந்த படுகொலையை அரங்கேற்றியுள்ளதாகவும் மண்டூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவான் குணசேகரவின் தகவல்களின் பிரகாரம் பெறப்பட்டுள்ள வாக்கு மூலங்கள், அறிவியல் தடயங்கள் மற்றும் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள சிற் சில தகவல்களை வைத்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அறிய முடிந்தது.
இந்நிலையில் வெல்லாவெளி பொலிஸார் தமது விசாரணைகளில் மதிதயனுக்கு இருந்த முரண்பாடுகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளனர். பொலிஸாரின் தகவல்களின்படி பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றின் பரிபாலனசபை மாற்றம் தொடர்பில் மதிதயன் முன்னின்று உழைத்துள்ளார்.
இதனால் மாற்றப்பட்ட பரிபாலன சபை உறுப்பினர்களுக்கும் மதிதயனுக்கும் ஆரோக்கியமானதொரு உறவு காணப்படவில்லை. இந்நிலையில் அது தொடர்பில் பொலிஸாரின் அவதானம் திரும்பியுள்ளது.
எனினும் அந்த முரண்பாடுகள் கொலைக்கான உறுதியான காரணம் என நேற்றுவரை கண்டறியப்பட்டிராத நிலையில் விசாரணைகள் தொடர்வதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக குறித்த ஆலய பரிபாலனம் பூஜைகள் தொடர்பான வழக்கொன்றும் நிலுவையில் உள்ளதாக அறிய முடிகின்றது. தற்போது ஒரு தற்காலிகமான பரிபாலன சபையொன்று அவ்வாலயத்தை நிர்வாகம் செய்வதாகவும் புதிய பரிபாலன சபை ஏற்படுத்தப்பட மதிதயன் முன்னின்று உழைத்தவர் எனவும் கருதப்படுகிறது.
எது எப்படி இருப்பினும் மதிதயன் கொலைக்கு இந்த ஆலயப்பிரச்சினை தான் காரணம் என இன்னும் பொலிஸார் கண்டறியவோ உறுதி செய்யவோ இல்லை. மாற்றமாக அதனை விசாரணையின் ஒரு அங்கமாகவே கொண்டுள்ளனர்.
பொலிஸாரின் தகவல்களின் பிரகாரம் முரண்பாடு அல்லது பகைமை என்ற ரீதியில் மதிதயனுக்கு மேற்குறிப்பிட்ட சம்பவம் மட்டுமே காணப்படும் நிலையில் வேறு காரணம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதாவது மண்டூர் தகவல்களின் பிரகாரம் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் நாவிதன்வெளி, மாவடி வேம்பு பிரதேசத்தில் மதுபானசாலையொன்றை அகற்றக்கோரி இடம்பெற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் மதிதயனின் பங்கு அளப்பரியதாக இருந்ததாக தெரியவருகிறது.
பிரதேசத்தின் மதகுருமார் கல்விமான்கள், புத்திஜீவிகள், அரசியல்வாதிகள் என பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 9 வருடங்களாக குறித்த மதுபான கடை இயங்கி வரும் நிலையில் அதற்கு அருகே பாடசாலை, வைத்தியசாலை, ஆலயங்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புக்கள் என பலவும் காணப்படுவதாகவும் அதனாலேயே அவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவ்வாறான சமூக விழிப்புணர்வு போராட்டங்கள் தொடர்பில் முன்னின்று உழைத்தமை தொடர்பில் இந்த கொடூர கொலை இடம்பெற்றதா எனவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இப்படிப்பட்ட பின்னணிகள் உள்ள நிலையிலேயே மதிதயன் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளின் இலக்கிற்கு இரையாகியுள்ளார்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி அம்மாவட்டத்தின் சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர்கள் கடந்த புதனன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்டூர் மதிதயனின் கொலை குற்றவாளிகளை உடன் கைது செய்யுமாறு இவ் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நல்லாட்சியில் எமது பாதுகாப்பை உறுதி செய் குற்றவாளிகளை உடன் கைது செய் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்து போன்ற சுலோகங்களை தாங்கியிருந்த அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்புவதற்கான மகஜர் ஒன்றை மேலதிக அரச அதிபர் கே. கிரிதரனிடமும் கையளித்தனர்.
உண்மையில் மண்டூரில் இடம்பெற்ற இந்த கொலை மிகவும் பயங்கரமானது. வீடு தேடி வந்து அதுவும் முற்பகல் வேளையில் ஒருவரை கொலை செய்து விட்டு தப்பி செல்வதென்பது மிகவும் ஆபத்தானது.
இவ்வாறான நடவடிக்கைகள் கிழக்கில் ஆயுத கலாசாரம் ஒன்று இன்னும் இருப்பதையும் நேர்மையான அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களாகவும் பார்க்கப்பட வேண்டியவை.
கிழக்கு மாகாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்ட பின்னர் கிழக்கில் சிற்சில ஆயுத குழுக்கள் இயங்கி வந்தமைக்கான சான்றுகள் உள்ள நிலையில் அப்போது அச்சமான சூழல் ஒன்றும் கிழக்கில் நிலவியது. அத்தகைய ஒரு அச்ச சூழலை மீண்டும் உருவாக்க மதிதயனின் கொலை மூலம் எவரேனும் முயற்சிக்கின்றனரா? என சந்தேகிக்க வேண்டியும் உள்ளது.
ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு பொது அமைதிக்கு பாரிய அச்சுறுத்தலாக திரியும் இத்தகைய கொலையாளிகளை களையெடுக்க வேண்டியது பாதுகாப்புதரப்பின் முக்கியமான பொறுப்பாகும்.
அந்த வகையில் சமூக சேவை உத்தியோகத்தரான மதிதயனின் கொலையின் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து அதன் பின்னணிகளையும் அம்பலப்படுத்தி குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் பொலிஸார் நிறுத்துவர் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அதுவரை கேசரியும் அவதானத்துடன்……….