கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனின் குடும்பத்தினர், பாதுகாப்புக் காரணங்களுக்காக, புங்குடுதீவை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கொழும்பு ஆங்கில நாளிதழிடம் தகவல் வெளியிட்டுள்ள வித்தியாவின் தாய், சரஸ்வதி சிவலோகநாதன், தமது பாதுகாப்புக் கருதி, வவுனியாவில் தனது உறவினர்களுடன் குடியேறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தனது மகளின் படுகொலைக்குக் காரணமான சந்தேக நபர்களின் குடும்பத்தினர், புங்குடுதீவில் தமது வீட்டுக்கு அருகே வசிக்கின்ற நிலையிலேயே, அச்சம் காரணமாக தாம், அங்கிருந்து வெளியேறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வித்தியாவின் 45வது நாள் இறுதி சமயக் கிரியைகள் முடிந்தவுடன், தனது ஏனைய இரு பிள்ளைகள் மற்றும் கணவரின் பாதுகாப்புக் கருதி, புங்குடுதீவை விட்டு உடனடியாகவே வெளியேறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.