யாழ். மாவட்டத்தில் முச்சக்கரவண்டிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான ஏற்பாடுகளை யாழ். அரசாங்க அதிபர் மேற்கொண்டுள்ளதுடன் கட்டண விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் முச்சக்கரவண்டிகளுக்கான கட்டணத்தில் முதல் கிலோ மீற்றருக்கு 70 ரூபாவும் இரண்டாவது கிலோ மீற்றர் தொடக்கம் பத்தாவது கிலோ மீற்றர் வரை ஒவ்வொரு கிலோ மீற்றருக்கும் 43 ரூபாவும் பத்தாவது கிலோ மீற்றருக்கு அப்பால் ஒவ்வொரு கிலோ மீற்றருக்கும் 34 ரூபாவும் அறவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி தொடர்பாக வரையறை இல்லை என்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் தமது விருப்பத்திற்கு ஏற்ப கட்டணங்களை அறவீடு செய்து பொதுமக்களோடு முரண்படுவது தொடர்பாகவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கு அமைய மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு சபையினால் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதிகள் பொதுவான சீருடை அணிய வேண்டும். முச்சக்கர வண்டிகளின் தூரத்தை அறிந்து கொள்வதற்கு மீற்றர் பொருத்த வேண்டும்.
ஓட்டுநர்கள் தமது ஆள் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் சாரதிகளுக்கான அடையாள அட்டையை அணிந்து கொள்ள வேண்டும்.
முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் சேவைக்கென நிறுத்தப்பட்டிருக்கும் வண்டிகளின் இலக்கங்கள் பொதுமக்கள் பார்வைக்கு ஏற்புடைய முறையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஒழுங்கு முறையை அனுசரிக்காமல் நடந்து கொள்வோர் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.