வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் மக்களால் பிடிக்கப்பட்ட சந்தேகநபரான சுவிஸ் குமார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் எவ்வாறு கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து மீண்டும் பொலிஸாரினால் பிடிக்கப்பட்டார் என்பது குறித்து முழுமையான விசாரணை அறிக்கையினை மன்றுக்கு வழங்குமாறு நீதவான் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போது, கடந்த 17 ஆம் திகதி சுவிஸ் குமார், மக்களால் பிடிக்கப்பட்டு சந்தேக நபராக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என பொலிஸாரின் முதல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் மீண்டும் அவர் வெள்ளவத்தை பொலிஸாரினால் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் வைத்து கடந்த 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டார் என்றும் முதலறிக்கையில் குறிப்பிட்டு பொலிஸார் மன்றில் சமர்ப்பித்தனர்.
அதனையடுத்து முரண்பாடான முதல் அறிக்கை என்றும் சுவிஸ் குமாரைப் பாதுகாக்க பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர் என மாணவி சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி தவராசா மன்றில் தெரிவித்திருந்தார்.
அத்துடன் குறித்த நபர் எவ்வாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இருந்து வெள்ளவத்தைக்குச் சென்றார் என்றும் அதற்கு யார் உதவினார்கள் என்பது தொடர்பிலான விசாரணைக்கு மன்று உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதவான் விடயம் குறித்து முழுமையான விசாரணை நடாத்தப்பட்டு அறிக்கை அடுத்த விசாரணையின் போது ஒப்படைக்க வேண்டும் என்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
இதேவேளை , கடந்த 17 ஆம் திகதி இரவு மக்களால் சந்தேகநபராக பிடிக்கப்பட்ட சுவிஸ் குமார் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் தொடர்பில் சாட்சியங்கள் இல்லை என குறிப்பிட்டு பொலிஸார் அவரை விடுதலை செய்திருந்தனர்.
மறுநாள் மக்களின் குழப்பதற்கு அமைய புலனாய்வுப் பிரிவினருடன் புங்குடுதீவுக்கு வந்த சட்ட விரிவுரையாளர் வி.ரி தமிழ்மாறன் குறித்த சந்தேக நபரை தான் பொலிஸாரிடம் ஒப்படைப்பதாக மக்களிடம் கூறி அழைத்து வந்துள்ளார்.
அதற்கமைய 18 ஆம் திகதி குறித்த நபர் யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்தார் என்பது ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
எனினும் அவர் குற்றவாளி இல்லை என்றும் பாதுகாப்புக்காரணங்களுக்காகவே தாம் சுவிஸ் குமாரை பொலிஸ் நிலையத்தில் வைத்திருப்பதாகவும் முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர் 19 ஆம் திகதி வெள்ளவத்தையில் நடமாடுவதாக தகவல் கிடைக்கப்பெற்றது. அதனையடுத்து அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டன.
அதன்படி துவாரகேஸ்வரன் என்பவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் வெள்ளவத்தைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும் மக்களால் தாக்கப்பட்ட காயம் காரணமாக சிகிச்சைக்கு உட்படுமாறு தாம் அவரை அனுப்பியதாகவும் அவர் தொடர்பில் சாட்சியம் இல்லை என்று பொலிஸ் தரப்பு கூறிவருகின்றது.
இருப்பினும் எவ்வாறு வெள்ளவத்தைக்குச் சென்றார் என்பது தொடர்பில் பொலிஸார் எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.