பிரான்சில் மிதிவண்டி விபத்தில் சிக்கி அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி படுகாயமடைந்துள்ளார். அவரது கால் முறிந்த நிலையில் ஜெனிவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சுவிஸ் எல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள பிரான்சின் சியோன்சியர் நகரில் இந்த விபத்து நேற்றுக்காலை இடம்பெற்றது.
ஜோன் கெரியின் மிதிவண்டி நடைபாதை ஓரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும், அந்த வேளையில் எந்த வாகனமும், அங்கு இருக்கவில்லை என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்து அவரது கால் முறிந்த போதிலும், ஜோன் கெரி சுயநினைவை இழக்கவில்லை.
உடனடியாக அவ்விடத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர்,ஜோன் கெரி ஜெனிவாவில் உள்ள மருத்துவமனைக்கு உலங்குவானூர்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சத்திரசிகிச்சை செய்யப்பட்ட இடமொன்றிலேயே இந்த முறிவு ஏற்பட்டுள்ளதால், அவர் இன்று அமெரிக்காவின் பொஸ்டனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளார்.
காலில் ஏற்பட்ட காயம் ஆறுவதற்கு ஆறு மாதங்களோ அதற்கு அதிகமான காலமோ தேவைப்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிதிவண்டி ஓட்டுவதில் பிரியமுள்ள ஜோன் கெரி, ஏற்கனவே 1992ம் ஆண்டு நிகழ்ந்த மிதிவண்டி விபத்து ஒன்றில் தோளில் காயமடைந்தார்.
ஜோன் கெரி விபத்தில் சிக்கியதால், இன்றும் நாளையும், மட்ரிட் மற்றும் பாரிசில் நடக்கவிருந்து மிக முக்கியமான பல பேச்சுக்கள் மற்றும் உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வுகள் கைவிடப்பட்டுள்ளன.