சேர் நான் ஹங்வெல்ல இறப்பர் தோட்டத்தில் பணிபுரியும் கங்காணி கதைக்கின்றேன். எங்கள் இறப்பர் தோட்டத்திலுள்ள மடுவத்தில் இளம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாகக் கிடக்கின்றாள்.
எங்களுக்கு பயமாகவிருக்கின்றது. தயவுசெய்து உடனடியாக இங்கு வருவீர்களா?” என்று பெரும் பதற்றத்துடன் கங்காணி பொலிஸாருக்கு தகவலொன்றினை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து துரிதமாகச் செயற்பட ஆரம்பித்த ஹங்வெல்ல பொலிஸார் விரைவாக சம்பவ இடத்தினை வந்தடைந்தனர். (2015.04.08)
அங்கு சனநடமாட்டம் குறைந்த, அடர்ந்த இறப்பர் மரங்களைக் கொண்ட விசாலமான தோட்டத்தின் நடுவே தென்னம் தும்புகளைச் சேகரிக்கும் சிறிய மடுவமொன்று காணப்பட்டது.
அந்த மடுவத்தில் தான் கங்காணி கூறியது போல் குறித்த பெண்ணின் கால்கள் நிலத்தைத் தொட்டவாறும் முழங்கால்கள், மண்டியிட்டவாறும் தூக்கில் தொங்கியபடி மேற்படி பெண்ணின் சடலம் காணப்பட்டது.
மேலும் அவள் அருகிலேயே ஆடைகள் அடங்கிய பையொன்றும், கையடக்கத் தொலைபேசியொன்றும் காணப்பட்டது.
எனவே இது பொலிஸாருக்கு பல்வேறு சந்தேகங்களை மனதுக்குள் எழுப்பியது. குறித்த பெண் யார்? ஏன் இங்கு வந்தாள்? எங்கிருந்து இங்கு வந்தாள்?
அவளுடைய மரணம் கொலையா? தற்கொலையா? அதற்கான காரணம் என்ன? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை காணும் முகமாகப் பல்வேறு கோணங்களில் தமது விசாரணைகளை ஹங்வெல்ல குற்றப்பிரிவினர் முன்னெடுத்தனர்.
அதன்படி குறித்த பெண் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்கு சம்பவ இடத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட பெண்ணின் கையடக்கத் தொலைபேசி பேருதவியாகவிருந்தது.
எனவே குறித்த பெண்ணின் கையடக்கத் தொலைபேசியில் காணப்பட்ட வெளிச் செல்லும் அழைப்புகள், உள்வரும் அழைப்புகள், குறுந் தகவல்கள் போன்றவற்றை சோதனைக்குட்படுத்திய போது இரு தொலைபேசி இலக்கங்களிலிருந்து பெண்ணின் கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்திருந்தமை கண்டறியப்பட்டது.
அதுமட்டுமின்றி பொலிஸாரிடம் கையடக்க தொலைபேசி இருந்த போதும் அழைப்புக்கள் வந்த வண்ணமே இருந்தன.
எனவே, வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பொலிஸார் பதிலளித்த போது ஒரு தொலைபேசி இலக்கம் குறித்த பெண் பணிபுரிந்த வீட்டின் எஜமானின் தொலைபேசி இலக்கம் என்பதும், மற்றையது குறித்த பெண்ணின் மூத்த சகோதரியின் தொலை பேசி இலக்கம் என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் குறித்த பெண் உயிரிழந்து விட்டார் என்ற சோகமான செய்தியினை பொலிஸார் அறிவித்ததுடன், அவர்கள் இருவரையும் உடனடியாக ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்துக்கு வருமாறும் பணித்தனர்.
அதன்பின் இருவரிடமிருந்தும் குறித்த பெண் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர். அவ்வாறு மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்த தகவல்களின் அடிப்படையில்,
மலையகத்தின் நுவரெலியா, ஒலிபன் தோட்டத்தைப் பிறப்பிடமாக கொண்டவள் சீதா மேரி. (18 வயது) ஒலிபன் தோட்டத்தில் கல்வி, நாகரிகம், பொருளாதாரம் என்று அனைத்திலும் மிகவும் பின்தங்கியது சீதா மேரியின் குடும்பம்.
தந்தை இளம் வயதினிலேயே இறந்து போக தாயின் உழைப்பிலும், பராமரிப்பிலுமே சீதா மேரியும் அவளது மூத்த சகோதரியும் வளர்ந்துள்ளனர்.
இந்நிலையில், சீதா மேரியின் மூத்த சகோதரி கொழும்பு பகுதியில் பணிபுரிந்ததுடன், விடுமுறை நாட்களில் மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வாள்.
எனவே, பெரும்பாலும் சீதா மேரி தாயுடன் தனிமையில் வீட்டிலிருந்தாள். அவள் பாடசாலை கல்வியையும் ஒழுங்காகப் பூர்த்தி செய்யவில்லை.
எனவே மூத்த சகோதரி தங்கை சீதா மேரியை கொழும்புக்கு கூட்டி வந்து வேலைக்கு அமர்த்துவதற்கான திட்டமொன்றைத் தீட்டினார்.
அதன்படி, ஹோமாகம கட்டுவான பிரதேசத்திலுள்ள பிரபல வைத்தியர் ஒருவரின் வீட்டில் சீதா மேரியை வேலைக்கு அமர்த்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள்.
அதன்படி மூன்று மாதங்களுக்கு முன் சீதா மேரியை அவ்வைத்தியரின் வீட்டில் வேலைக்கு அமர்த்தினார்.
சீதா மேரி வேலைக்கு அமர்த்தப்பட்ட வைத்தியரின் குடும்பத்தில் வைத்தியர், அவர் மனைவி, வைத்தியரின் தாயார், இரு சிறு குழந்தைகள் மட்டுமே இருந்தனர்.
வைத்தியரும் அவருடைய மனைவியும் அதிகாலையில் வேலைக்கு சென்றால் மாலையில் தான் மீண்டும் வீட்டுக்கு வருவார்கள்.
எனவே, இரு குழந்தைகளையும் வைத்தியரின் தாயார் கவனித்துக் கொள்வதால் அவருக்கு உதவி ஒத்தாசையாக இருப்பதுடன், வீட்டு வேலைகளை செய்வதற்குமே சீதா மேரி அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டாள்.
அங்கு சென்று மிக குறுகிய நாட்களுக்குள்ளே வைத்தியரின் குடும்பத்தினர் சீதா மேரியை மிக அன்பாகக் கவனித்து வந்ததுடன், அவளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வீட்டில் செய்து கொடுத்தனர்.
சரியான நேரத்தில் சம்பளம், மூன்று வேளை உணவு, அவளுக்கென்று தனியான அறை என்று எந்தக் குறையும் இருக்கவில்லை.
ஆயினும், அவளுக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற சீதா மேரி தவறினாள்.
வேலை நேரத்திலும் கையில் கையடக்கத் தொலைபேசியுடன் வலம் வந்ததுடன், பெரும்பாலான நேரத்தை தொலை பேசி உரையாடல்களிலேயே கழித்துள் ளாள்.
அதுமட்டுமின்றி, ஒரு நாள் சீதா மேரிக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக் குள் வைத்தியரின் சிறிய குழந்தை சென்றதால் வைத்தியரின் தாயார் சீதா மேரியின் அறைக்குள் சென்றிருக்கின்றாள்.
அப்போது அந்த அறையின் சுவரில் “ஐ லவ்யூ யூ” (I love you) என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்தது. உடனே வைத்தியரின் தாயார் சீதா மேரியை அழைத்து ” என்ன இது இப்படி சுவரில் எழுதியுள்ளாய்” என்று வினவியுள்ளாள்.
எனினும் சீதா மேரி அதற்கு எந்த வித பதிலும் தெரிவிக்கவில்லை. மௌனமாகவே இருந்துள்ளாள்.
அதுமட்டுமின்றி சீதா மேரியின் படுக்கை விரிப்பிலும் தொலை பேசி இலக்கங்கள், ஐ லவ்யூ யூ (I love you) என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.
எனினும், வைத்தியரின் தாயார் இது பற்றி வைத்தியரிடம் எதுவுமே முறையிடவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி நண்பகல் 1.30 மணியளவில் வைத்தியரின் தாய் குழந்தைகளுக்கு உணவூட்டி நித்திரை செய்து விட்டு மதிய உணவினை உட்கொள்வதற்காக சீதா மேரியைத் தேடியுள்ளார்.
பலத்த குரலில் பெயர் சொல்லி அழைத்தவாறே வீட்டின் மூலை மூடுக்கெல்லாம் தேடிய போதும் சீதா மேரி எங்கும் இருக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து பதற்றமடைந்த வைத்தியரின் தாயார் வைத்தியருக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளார்.
அதன்பின் வைத்தியர் சீதா மேரியின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்திய போதும் அவள் அதற்கு பதிலளிக்கவில்லை.
எனவே உடனடியாக சீதா மேரியின் மூத்த சகோதரிக்கு நடந்த அனைத்தையும் ஒன்றும் விடாது வைத்தியர் கூறியுள்ளார்.
இதனால் பெரும் குழப்பமடைந்த சீதா மேரியின் மூத்த சகோதரி, அவளுக்கு அழைப்பை ஏற்படுத்தி இது தொடர்பாக கேட்ட போது “தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லையென்றும் தான் நுவரெலியாவுக்கு சென்று கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளாள்” அது தான் மூத்த சகோதரி சீதா மேரியுடன் கதைத்த கடைசி வார்த்தை.
அதன் பின் சீதா மேரியின் சகோதரி அவளுடைய தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பையேற்படுத்திய போது ஆணொருவரே கதைத்துள்ளான். அவனும் பெரிதாக எதுவுமே தெரிவிக்கவில்லை.
“ நான் ஒரு அவசர வேலையிலிருக்கின்றேன் பிறகு எடுக்கின்றேன்” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளான்.
இவ்வாறு வைத்தியரிடமிருந்தும், சீதா மேரியின் சகோதரியிடமிருந்தும் பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் சீதா மேரிக்கு காதல் தொடர்பு ஒன்று இருந்துள்ளமையும், அதன் விளைவாகவே சீதா மேரிக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதையும் பொலிஸாரால் ஊகிக்கக் கூடியதாகவிருந்தது.
ஆயினும் சீதா மேரியுடன் காதல் தொடர்புகளைப் பேணி வந்தவர் யார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.
எனவே, மேலும் சீதா மேரியின் தொலைபேசி அழைப்புகள், அவர் யாருடன் அதிகளவான நேரம் தொலைபேசியில் கதைத்துள்ளார் ? போன்ற விடயங்களைச் சேகரிக்கும் முகமாக தொலைபேசி வலையமைப்புகளை மையப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்த போது தான் ரிகில்லகஸ்கட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான திருமணமான ஆணொருவரே இவ்வாறு சீதா மேரியுடன் காதல் தொடர்புகளைப் பேணி வந்தவர் என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக குறித்த இளைஞனைக் கைது செய்து விசாரணைகளை மேறகொண்ட போது குறித்த இளைஞன் தெரிவித்த வாக்குமூலத்தின் படி, ஹோமாகம ஹபரகட பிரதேசத்திலுள்ள பேக்கரி ஒன்றில் நடமாடும் உணவு விற்பனை வண்டியில் விற்பனையாளராகப் பணிபுரிந்த நிலையில் தினமும் மாலை 3 மணியளவில் கட்டுவான பிரதேசத்தில் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த போதே சீதா மேரியின் அறிமுகம் குறித்த இளைஞனுக்கு கிடைத்தது.
இதனை தொடர்ந்து இருவருக்குமிடையில் தொலைபேசி இலக்கங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டமையால், இருவரும் தொலை பேசி உரையாடல்கள் மூலம் தங்களுடைய காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஏப்ரல் மாதம் 6ஆம் திகதிக்கு முன்னைய நாள் குறித்த இளைஞன் சீதா மேரியுடன் கதைத்த போது 6ஆம் திகதி இருவரும் வெளியில் போவோம், நீ ஆடைகளையும் எடுத்துக் கொண்டு ஹோமாகம பிரதேசத்துக்கு வந்து விடு எனக் கூறியுள்ளான்.
அதன்படி சீதா மேரி பணிபுரிந்த வீட்டின் எஜமானுக்கு தெரியாமல் ஆடைகளுடன் கூடிய பையுடன் ஹோமாகம பிரதேசத்துக்கு குறித்த இளைஞனை சந்திப்பதற்காக வந்துள்ளாள்.
அதன்பின் இருவரும் தெஹிவளைக்கு சென்று மறு நாள் விடியும் வரை தெஹிவளை பஸ்தரிப்பிடத்தில் தமது பொழுதைக் கழித்துள்ளனர்.
பின்னர் கண்டிக்கு சென்று மறுபடியும் அவிஸ்ஸாவல பிரதேசத்துக்கு வந்து அங்கு ஹங்வெல்ல இறப்பர் தோட்டத்தில் காணப்பட்ட தென்னந் தும்புகளைச் சேகரிக்கும் மடுவத்தில் இருவரும் சில மணி நேரங்கள் உல்லசாமாகவிருந்துள்ளார்கள்.
அதன்பின்னே குறித்த இளைஞன் தனக்கு திருமணமாகி, தனது மனைவி குழந்தை கிடைப்பதற்கு இருக்கின்றாள் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை சீதா மேரிக்கு கூறியுள்ளான்.
அதுமட்டுமின்றி, சீதா மேரியை மீண்டும் அவள் பணி புரிந்த வீட்டுக்கோ அல்லது நுவரெலியாவுக்கோ சென்று விடுமாறு கூறியுள்ளான்.
இதனால் இருவருக்குமிடையில் மிக நீண்ட நேரங்கள் வாக்கு வாதங்கள் தொடர்ந்த நிலையில் குறித்த இளைஞன் அங்கிருந்து சென்றுள்ளான்.
எனினும் சிறிது நேரம் கழித்து மீண்டும் குறித்த இளைஞன் அங்கு வந்து பார்க்கும் போது அவள் மடுவத்தில் தூக்கில் தொங்கியவாறு சடலமாகக் கிடந்துள்ளாள், அதன்பின் அவன் பயத்தில் அவளை அவ்விடத்திலேயே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளான்.
எனினும் பொலிஸாருக்கு சீதா மேரியின் மரணம் கொலையா? தற்கொலையா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
சீதா மேரியின் சடலம் வழமைக்கு மாறாக தூக்கில் தொங்கிய நிலையில் கால்களிரண்டும் மண்டியிட்டிருந்த நிலையில் இருந்ததால் பொலிஸாருக்கு மேலும் சந் தேகத்தை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி சீதா மேரியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்திய போது அவர் 14 வயதில் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளமையும், அக்குழந்தை 2 மாதங்கள் மட்டும் உயிருடன் இருந்துள்ளமையும் தெரிய வந்தது.
இந்நிலையில் சீதா மேரியின் உடல் பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக இரசாயன பகுப்பாய்வுகளுக்குட்படுத்தப்பட்டிருக்கின்றன.
அதுமட்டுமின்றி, குறித்த இளைஞன் தொடர்ந்து விளக்கமறியலில் விசாரணைகளுக்காக வைக்கப்பட்டுள்ளான்.
எது எவ்வாறாயினும், சீதா மேரி போன்ற அப்பாவி பெண்களின் அறியாமையே இவ்வாறான துயர சம்பவங்களுக்கு காரணங்களாக அமைகின்றன.
-வசந்தா அரசரட்ணம்-