தேனிலவுக்காக சென்றிருந்தபோது நள்ளிரவு 12 மணியுடன் காணாமல் போன மணமகன், தாராஓயா பிரதேச வீதியில் திரிந்துகொண்டிருந்த நிலையில் நான்கு நாட்களுக்கு பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே அவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரை கைதுசெய்யும் போது அவர் மயக்கமடைந்த நிலையில் இருந்ததாகவும் வைத்திய பரிசோதனைக்காக அவரை பேராதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
தெல்தோட்ட பிரதேச விடுதியொன்றில் தேனிலவை களிப்பதற்கு சென்றிருந்த போதே தெல்தோட்ட, ரெலிமங்கொடயைச் சேர்ந்த 33 வயதான ஜி.தர்மசேன என்ற மணமகன் காணாமல் போனார். இவர் இராணுவத்தில் 10 வருடங்கள் பணியாற்றியவராவார்.
முல்கம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது யுவதியொருவரை கடந்த 29ஆம் திகதி கரம்பிடித்த இவர், திருமண வைபவத்தின் பின்னர் தேனிலவுக்காக தெல்தோட்டையில் உள்ள ஹோட்லொன்றுக்கு சென்றுள்ளனர்.
அறையை விட்டு நள்ளிரவு வேளையில் வெளியேறிய மணமகன் விடிய விடிய வரவேயில்லை. விடியும் வரை காத்திருந்த மணமகள் இதுதொடர்பில் கலஹா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸ் நாயை பயன்படுத்தி காணாமல்போன நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் முடுக்கிவிட்டபோதிலும் அவர் தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையிலேயே அவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, ‘தனக்கு பணப்பிரச்சினை இருந்தமையால் மணமகளை வீட்டுக்கு அழைத்துசெல்வதில் பிரச்சினை ஏற்பட்டது. இது என் இதயத்துக்கு பெரும் வேதனையாக இருந்தது.
ஆகையால் ஹோட்டலைவிட்டு வெளியேறி, லுல்கந்துர தேயிலை தோட்டத்தில் உள்ள கற்குகையில் நாட்களை கழித்தேன். அந்த நாட்களில் எந்த உணவையும் உட்கொள்ளவில்லை’ என்று கூறினார்.