கிளிநொச்சி – சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் நேற்று (புதன்கிழமை) அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டார்.
அதன்போது 15 வயது சிறுவன் ஒருவனை பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டியுள்ளார்.கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் சந்தேக நபரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த உத்தரவிப்பட்டிருந்தது.
அதற்கமைய நேற்று இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது குறித்த 15 வயது சிறுவன் அடையாளங் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த வழக்கு சிறுவர் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த வாரம் பாடசாலைக்குச் சென்ற குறித்த சிறுமி, வீடு திரும்பியதும் சுகயீனமுற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.
அதனையடுத்து சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி மீதான பாலியல் வன்புணர்வினை அடுத்து, கிளிநொச்சி வலய கல்வி பணிமனையினால் மாணவர் பாதுகாப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது, மாணவர்களின் செயற்பாடுகள், குறிப்பாக பாடசாலை செல்லும்போது மற்றும் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போது மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோருக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும் குறித்த குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.