16 வயதுடைய தனது காதலிக்கு கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற காதலனைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

கத்திக்குத்துக்கு இலக்காகி சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதியின் வைலது கையில் பல இடங்களில் கத்திக் குத்துக் காயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிக்கவெரட்டி பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் குறித்த மாணவி நிக்கவெரட்டி மீவெல்லாவ, எலகம்வில பிரதேசத்தைச் சேர்ந்தராவார்.

குறித்த மாணவிக்கும் தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபருக்குமிடையில் காதல் தொடர்பு ஏற்பட்டிருந்துள்ளது.

இதன் காரணமாக சந்தேக நபர் குறித்த மாணவியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆனமடு நகருக்கு அழைத்துள்ளார்.

பின்னர் சந்தேக நபர் வந்த மோட்டார் சைக்கிளில் இருவரும் ஆனமடு கோன்வல பிரதேசத்திற்குச் சென்றிருந்த வேளை அங்கு வைத்து இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்கபட்டுள்ளதோடு அதன் பின்னர் தன்னை சந்தேக நபர் கத்தியால் குத்தி காயமேற்படுத்திவிட்டு அங்கிருந்து தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக கத்திக்குத்துக்கு இலக்கான யுவதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையில் உள்ள காதல் தொடர்பை நிறுத்திக் கொள்ளுமாறு சந்தேக நபர் கூறியதாகவும் அதன் பின்னரே இவருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் மாணவி பொலிஸாரிடம்  மேலும் தெரிவித்துள்ளார்.

வெட்டுக் காயங்களுடன் வீதியில் நின்றிருந்த குறித்த மாணவியை அங்கிருந்த ஒருவர் ஆனமடு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். பின்னர் மாணவி மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆனமடு பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply