தீபன், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியான இவருக்கு நான் வைத்த பெயர். புலிகளின் நிதிப்பிரிவில் உயர் பொறுப்பில் இருந்தவர்.
இதனால் 2 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டு 7 தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். தற்போது புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் வாழ்ந்துவருகிறார்.
இருந்தும், தடுப்பில் தான் இராணுவத்தால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் குமார், அதனால், முள்ளந்தண்டில் இரண்டு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார். அத்தோடு, சிறுநீரகத்திலும் கோளாறு உள்ளதாகவும் கூறுகிறார்.
“புனர்வாழ்வுக்கு உட்படுத்தியதால என்ட வாழ்க்கையில ஒரு முன்னேற்றமும் ஏற்படல்ல என்டுதான் சொல்லனும்.
நான் அவ்வளவு வேதனைகளை சந்திச்சுதான் வெளியில வந்தனான். அதால திருப்பி அவைக்கிட்ட போகவும் மாட்டன், கையேந்தவும் மாட்டன்.
ஒரு டென் மினிட்ஸ் (10 minute) , பிப்டீன் மினிட்ஸ்தான் (minute) இப்படி இருக்கலாம். இல்லாட்டி எழுந்து நிற்கனும், அதுவும் பிப்டீன் மினிட்ஸ்தான். என்ட உடல் நிலைய அப்படி ஆக்கிட்டுதான் விட்டிருக்காங்க.
பெரலைஸ் (paralysie) ஆன ஆக்கள் நிறைய பேர் வெளிய வந்திருக்கினம். அவங்கட நாளாந்த வாழ்க்கைய கொண்டு போறதே கஷ்டமா இருக்கு” இதுதான் இலங்கை அரசின் புனர்வாழ்வு என்கிறார் தீபன்.
தற்போது வாழ்வாதாரத்துக்காக மாணவர்களுக்கு புவியியல் பாடம் கற்பிப்பதாகக் கூறும் குமார், புனர்வாழ்வின்போது திறமைக்கேற்ப தொழில் பயிற்சி வழங்கப்படவில்லை என்றும் கூறுகிறார்.
“புனர்வாழ்வு நடக்கும்போது தெரிவு செய்து தொழிற்பயிற்சி வழங்கியிருக்கனும். அப்படி நடக்கல்ல. ஆயிரம் பேரென்டா, அவங்க எல்லோருக்கும் மேசன் தொழில் கத்துக்கொடுத்தால் சரியா?
அவங்கவங்க திறமைக்கு ஏற்ப தெரிவுசெய்து தொழிற்பயிற்சி கொடுத்திருந்தா வீட்டுக்குப் போய் ஏதாவது செய்திருக்கலாம்.
சும்மா எழுந்தமானமா பயிற்சி கொடுத்திட்டு 2 இலட்சம் லோனையும் கொடுத்தா அவன் என்ன செய்வான்? ஒரு இலக்கும் இல்லாம எப்படி செயற்படுவான்? மக்கள் வங்கி, இலங்கை வங்கியெல்லாம் ரெட் நோட்டீஸ் அடிச்சி இப்ப வழக்கு நடக்குது?
இந்த லோன் திட்டம் புனர்வாழ்வு அமைச்சின் மேற்பார்வையின் ஊடாகத்தான் வழங்கப்படுது. அதுவும் முழுமையா குடுக்கப்படுறதில்ல” – முன்னாள் போராளிகள் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்து குறிப்பிடுகிறார் தீபன்.
இருப்பினும், இராணுவமும் முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்க முன்வந்துகொண்டுதான் இருக்கிறது என்று கூறும் தீபன், இருந்தாலும் அது பலவந்தமாக இடம்பெறுகிறது என தான் உணர்ந்ததாகவும் கூறுகிறார்.
“இயக்கத்துல பெரிய இடத்தில இருந்த ஆக்கல, எட்மினிஸ்ட்ரேஸன்ல இருந்த ஆக்கல தங்களோட வச்சிருக்கனும் என்ட எண்ணம் இராணுவத்துக்கு இருக்குது.
சி.எஸ்.டியால நடத்துற பண்ணைகள்ள வேலைக்கு அமர்த்த முயற்சிக்கினம்.
இது எங்கட திறமைய பொறுத்து வழங்குறதா நான் நினைக்கல்ல. ஏனென்டா, நான் இன்னொரு இடத்தில நல்ல ஜொப்ல இருந்தா என்ன டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. இது அப்படி இல்ல.
என்னையும் வேலைய விடச் சொன்னவ. இல்லையென்டா நான் படிப்பிக்கிறத நிப்பாட்டுவன் என்டு சொன்னவங்க.
நான் அவைக்கு ஒரே கதையாச் சொன்னன், நீ என்ன போர்ஸ் பண்ண ஏலாது. உன்ட அதிகாரத்த பயன்படுத்தி ஏதாவது செய்தாலும், கூலி வேலை செஞ்சாவது குடும்பத்த காப்பாத்துவேனே தவிர உன்னிட்ட வரமாட்டன், இது என்ட மனநில என்டு சொன்னன்” என்கிறார் தீபன்.
அசௌகரியமாக தீபன் உட்கார்ந்திருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. திடீரென எழுந்து நின்றார். “இருங்க வாரன்” என்றவர், வீட்டினுள் சென்று விட்டு மீண்டும் வந்தார்.
ஏதாவது பிரச்சினையா இருக்குமோ என எடுத்த எடுப்பில் யோசித்த நான் பிறகு புரிந்துகொண்டேன். தொடர்ந்து 15, 20 நிமிடங்கள் குமாருடன் கதைத்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.
வந்தவருடன் வேறு விடயங்கள் பற்றி பேசிவிட்டு, இலங்கை அரசின் நல்லிணக்க முயற்சிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டேன்.
தமிழர்களுக்கு உள்ள பிரச்சினைகளை விளங்கிக் கொண்டால் நல்லிணக்கம் சாத்தியப்படும் என்கிறார் தீபன். ஆனால், இதுவரை விளங்கிக் கொள்ளப்படவில்லை என்பதை தான் அனுபவிக்க நேர்ந்த சம்பவம் உணர்த்தியதாகக் குறிப்பிடுகிறார் தீபன்.
“இந்தப் பிரச்சின என்னென்டு ஆரம்பிச்சது? என்னென்டு வந்ததென்டு இன்டக்கு வரைக்கும் இந்த அரசாங்கம் விளங்கிக் கொள்ளல என்டுதான் நினைக்கிறன்.
ஏனென்டா, எங்கள ரிலீஸ் பண்ணேக்க ஒரு போம் ஒன்டு தந்தவங்கள், அதில 72 கேள்வி இருக்கு. எங்கட மனநில எப்படி இருக்கு என்டதுக்காகத்தான் அந்த போம்.
அந்த போம்ல 67ஆவது கேள்வி என்டுதான் நினைக்கிறன், “நீங்க ரிலீஸ் ஆகி போகேக்க இந்த சமூகம் உங்கள ஏற்றுக் கொள்ளுமா?” என்டு இருந்தது அந்தக் கேள்வி.
தமிழ் பேசக்கூடிய கப்டன் தர அதிகாரிதான் போம்ம நிரப்பிக்கொண்டிருந்தவர். இந்தக் கேள்விய கேட்டவுடன் பெரிசா சிரிச்சுப் போட்டன். சிரிச்சதால பேனயால இந்த கைக்கு குத்தினவர்.
குத்தின பேன கை மறுபக்கம் வந்திட்டு. சிரிச்சதுக்கு காரணம் என்னன்டா, சமூகம் உங்களை ஏற்றுக்கொள்ளுமா? நான் ரைபிள் எடுத்தது என்ட வீட்டு எல்லைப் பிரச்சினைக்கா? எங்கட சமூகத்தின்ட பிரச்சினைக்காகத்தான் எடுத்தம்.
சிரிச்சுப் போட்டு சொன்னன், நான் போவன், என்ட சமூகம் என்ன ஏற்கும் என்டு. இதுல என்ன விளங்குது, எங்கட பிரச்சினைய பற்றி அவர் இப்பவும் தெளிவில்லாம இருக்கார்.
இப்பவும் நான் சொல்ற விஷயம், எங்கட மக்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள விட மனுசனுக்கு உள்ள உரிமைகள் மதிக்கப்படவேண்டும்.
அதன் பிறகுதான் அடிப்படை தேவைகள். இதுலதான் இந்த கவர்ன்மன்ட வெற்றி இருக்குது” – தீபனின் பேச்சில் ஏக்கமும் கலந்தே வருகிறது.
தென்னிலங்கை சிங்கள மக்களை மாறி மாறி வரும் அரசுகள் தமது அரசியல் நலனை நோக்காகக் கொண்டு தமிழர்கள், விடுதலைப்புலிகள் குறித்து உண்மைக்குப் புறம்பானவைகளை கூறி வருவதாகக் கூறுகிறார் தீபன். அதை நான் நேரில் கண்டுணர்ந்ததாகவும் கூறுகிறார்.
“சிங்கள ஆக்கள மாத்தி வச்சிருக்கது இந்த அரசாங்கம்தான். இத எப்படி விளங்கிக் கொண்டேன் என்டா, தடுப்பில இருந்து வந்தவுடன் இந்த கச்சேரி பில்டின்ல கட்டுமான வேலைக்குச் சேர்ந்தனான்.
அந்த பில்டின்ல வேலை செய்யும்போது சிங்கள ஆக்களோட பழக சான்ஸ் கிடைச்சது. அப்போதான் நான் விளங்கிக் கொண்டன், இந்த ஆக்கள எப்படி இந்த அரசாங்கம் வச்சிருக்கினம் என்டு.
இங்க இருக்கிற ஆக்கள் எல்லாம் எல்டிடிஈ, அங்களுக்கு சுடத்தான் தெரியும், வெட்டத்தான் தெரியும், அடிக்கத்தான் தெரியும். மற்றது இங்க படிப்பில்ல, அரச நிர்வாகம் இல்ல, எல்லாமே எல்டிடிஈ, இங்க இருக்கிற ஆக்கள் எல்லாம் கொலவெறி பிடிச்ச ஆக்கள்தான் இருக்கினம் என்டு அவங்க நினைச்சி கொண்டு இருந்தினம்.
நான் பிறகு விளங்கப்படுத்தினன். அங்க இருக்கிற சிங்கள ஆக்களுக்கு பிழையா விளங்கப்படுத்தியிருக்காங்க” என்கிறார் தீபன்.
புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பு அடிக்கடி புலனாய்வுப் பிரிவினர் தன்னை வந்து சந்தித்து தொல்லை கொடுத்ததாக தீபன் கூறுகிறார்.
அவ்வாறு வரும் அநேகர்கள் தன்னை மரியாதைக் குறைவாகப் பேசுவதாகக் கூறும் தீபன், அவர்களின் கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்ப்பதாகவும் கூறுகிறார். அதனால் வந்த விளைவை இவ்வாறு குறிப்பிடுகிறார்,
“சில பேர் மரியாதை குறைவா வாடா, போடா என்டு கதைப்பாங்க. அப்படி கதைக்கிற ஆக்களோட நான் பேச மாட்டன். பிறகு என்ன பற்றி கொழும்புக்கு ரிப்போர்ட் குடுத்திருக்காங்க.
இப்படி ஒருத்தர் இங்கு இருக்கினம் என்டு. கொழும்பில இருந்து ரெண்டு பேர் வந்து என்னிட்ட பேசினாங்க. என்னை சீண்டும் வகையிலயும் அவங்க பேசினாங்க. கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் பேசியிருப்பாங்க.
கடைசியிலதான் சொன்னாங்க, “உங்கள பற்றி கெம்லய்ன் வந்திருக்கு. ஆனா பிரச்சின எதுவும் இல்ல. நீங்க ஓகே” என்டு. அப்ப நான் சொன்னன், எனக்கு மனுசனா மரியாதை குடுத்து பேசினா நானும் அப்படித்தான்.
நீங்க மரியாதையா பேசினீங்க, நானும் பேசினன் என்டு சொன்னன்” – தனக்குள்ள உரிமையை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்பதை தீபனின் கண்களில் காணக்கூடியதாக இருந்தது.
“யுத்தம் முடிஞ்சது. ஆனா, இன்டக்கும் துன்பத்த அனுபவிச்சிக்கிட்டுதான் இருக்கம். மகளுக்கு ஒரு கண் தெரியாது. காரணம், பொஸ்பரஸ் குண்டு அடிச்சது. இன்டக்கு சொன்னா யாரும் கேப்பாங்களா? ரிப்போர்ட்ல பொஸ்பரஸ் பற்றி எதுவும் எழுதல்ல.
பொக்கனையில பங்கருக்குள்ள இருக்கிற போதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கு. இதெல்லாம் அழியாத வடு. அவ எவ்வளவு கஷ்டப்படுறா என்டு பாத்துக்கொண்டிருக்கிற எங்களுக்குத்தான் தெரியும்.
பொஸ்பரஸ் அடிக்கலன்டு சொல்றாங்க. இதோ இந்தக் காயத்தப் பாருங்க, இது பொஸ்பரஸ் பீஸ் பட்டது” – பட்டனைக் கழற்றி வலது கையின் கீழ்புறமாக சேட்டை இழுத்தவாறு கையில் உள்ள காயத்தை காட்டுகிறார்.
அவருடன் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்துக்கு மேல் கதைத்திருப்பேன். அவர் பேச்சில் மீண்டும் மீண்டும் ஒலித்தது, “எங்களையும் மனுசனா மதிக்கனும், உரிமைகள கொடுக்கனும்”.
“இப்ப நாங்க தமிழீழம் கேட்கல்ல. ஒரு மனுசனுக்கு என்ன உரிமை இருக்கோ, அத எங்களுக்கும் தரனும். அதற்கடுத்ததா எங்கட வாழ்க்கைத் தரத்த முன்னேற்றனும்” அவரை பிரிந்து வரும்போது கடைசியாக குறிப்பிட்டதும் அதுவாகத்தான் இருந்தது.
by Selvaraja Rajasegar