வித்தியா வன்புணர்வுக் கொலையுடன் புங்குடுதீவில் இது மூன்றாவது சம்பவமாக இடம்பெற்றுள்ளது. எனவே, இதற்கு ஒரேவழி குற்றவாளிகளுக்கான தண்டனையினை துரிதமாக வழங்குவதேயாகும். தண்டனை கடுமையாகவும், விரைவாகவும் இருந்தால் குற்றச்செயல்களை குறைக்கமுடியும்.
மக்களுக்கு சட்டத்தின்மீது நம்பிக்கை ஏற்படவேண்டுமாயின் தண்டனைகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்று வித்தியாவின் குடும்பத்தினர் சார்பில் ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வி முழுமையாக கீழே தரப்படுகின்றது.
கேள்வி: வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நலன் கருதி நீதிமன்றில் ஆஜராகும் சட்டத்தரணி என்ற வகையில் இந்த கொலையின் பின்னணி என்னவென்று நீங்கள் கருதுகின்றீர் கள்?
பதில்: கடந்த மே மாதம் 13 ஆம் திகதி ஊர்காவற்றுறையில் உள்ள புங்குடுதீவில் சிவலோகநாதன் வித்தியா என்ற 18 வயது பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
யுத்தத்தின் பின்னர் வடக்கில் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்தபோதும், வித்தியாவின் இந்த படுகொலை நிலத்திலும், புலத்திலும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியை பார்க்கின்றபோது,
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நலன் கருதி நீதிமன்றில் ஆஜராகும் சட்டத்தரணி என்ற வகையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஆகியோரினால் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணைகளின் முதல் அறிக்கையையும், மேலதிக அறிக்கைகளையும், புலனாய்வுப் பிரிவின் மேலதிக அறிக்கையினையும் பார்வையிட்டேன்.
மேலும், வித்தியாவின் தாயார் சிவலோகநாதன் சரஸ்வதி, வித்தியாவின் சகோதரன் சிவலோகநாதன் நிசாந்தன் ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களுடன் புங்குடுதீவு ஊர் மக்களுடன் கலந்துரையாடியதுடன், சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் இடத்தையும் பார்வையிட்டதன் மூலமும் அறிந்துகொண்ட விடயங்கள் வருமாறு,
சம்பவ தினத்தன்று வழமைபோல் காலை 7 மணிக்கு பாடசாலைக்குச் சென்ற வித்தியா, மாலையாகியும் வீடு திரும்பாத காரணத்தினால் பதற்றமடைந்த அவரது தாயும், சகோதரரும், உறவினர்களும் வித்தியாவை தேடியலைந்துள்ளனர்.
பாடசாலையில் சென்று விசாரித்தபோது, வித்தியா பாடசாலைக்கு செல்லவில்லை என்பதனையும் அவர்கள் அறிந்துள்ளார்கள்.
இதனையடுத்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவென குறிகட்டுவான் பொலிஸ் சோதனை நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு முறைப்பாடு செய்யமுடியாததனால். பின்னர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு அன்று மாலை 6.30 மணியளவில் சென்றுள்ளனர். அங்கு பெண்பொலிஸார் வரும்வரை காக்கவைத்து இரவு 9 மணியளவில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
பின்னர் வித்தியா இளம் பிள்ளையாகயிருப்பதால் யாராவது பையனுடன் ஓடிப்போயிருக்க வேண்டுமென அலட்சியமாக ஒரு பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.
அன்றைய தினம் இரவு 11 மணியளவில் வீடு திரும்பிய வித்தியாவின் தாயாரும் சகோதரனும் உறவினர்களும் கிராமத்தவர்களும் ஒன்று சேர்ந்து 14ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் வித்தியாவைத் தேடஆரம்பித்துள்ளனர்.
அவர்களது வீட்டிற்கு சிறிது தொலைவில் உள்ள பிரதான வீதியில் தேடிச் சென்றுள்ளனர். குறித்த வீதியின் இருபுறத்திலும் 150 மீற்றர்வரை பற்றைக்காடாக காணப்படுகின்ற இடத்தில் தேடிச் சென்றபோது, அவர்களுடன் சென்ற வளர்ப்பு நாய் குரைக்க ஆரம்பித்ததுடன் வித்தியாவின் சப்பாத்தையும் கண்டுபிடித்துள்ளது.
தொடர்ந்து நாய்க்குப் பின்னால் வித்தியாவின் சகோதரன் நிசாந்தன் சென்றபோது பாழடைந்த கிணற்றுக்கு அருகாமையில் ஒதுக்குப் புறத்தில் ஆடைகள் அற்ற நிலையில் இரண்டு கால்களும் மரத்தில் இழுத்துக் கட்டப்பட்ட நிலையில் வித்தியாவின் இறந்த உடலை கண்டபொழுது ‘வித்தியா’வென கத்தியவாறு மயக்கமடைந்துள்ளார்.
கேள்வி: பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் இறப்பிற்கான காரணமும் பொலிஸாரினால் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்களும் எவையெனக் கூறமுடியுமா?
பதில்: சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கிருந்த வித்தியாவின் உடலை பார்வையிட்ட பொழுது வித்தியா அணிந்திருந்த பாடசாலை சீருடையால் கைகள் இரண்டும் கட்டப்பட்டிருந்தன மற்றும் இரு கால்களும் மரத்தில் கட்டப்பட்டிருந்தன.
இறந்த வித்தியாவின் உடல் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதன் பின் சட்ட வைத்திய அதிகாரி உடற்கூற்று பரிசோதனை செய்ததில், மரணத்திற்கான காரணமாக மூளையில் இருந்து இரத்தம் வந்துள்ளதாகவும், உள்ளாடை வாய்க்குள் அடைக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதனால் மூச்சுத் திணறி மரணம் அடைந்ததாகவும் வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து கொலை செய்யப்பட்ட வித்தியாவின் துவிச்சக்கர வண்டி உட்பட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டன. அத்துடன், வித்தியாவின் கொலையில் சந்தேக நபர்களாக 9 பேர் கைது செய்யப்பட்டனர் அவர்களது பெயரும் விலாசமும்,
1) பூபாலசிங்கம் இந்திரகுமார் அல்லது சின்னாம்பி, 10ஆம் வட்டாரம் புங்குடுதீவு
2) பூபாலசிங்கம் ஜெயகுமார் அல்லது ரவி, 10ஆம் வட்டாரம் புங்குடுதீவு
3) பூபாலசிங்கம் தவகுமார் அல்லது செந் தில் 10ஆம் வட்டாரம் புங்குடுதீவு
4) முகாலிங்கம் சஜிந்திரன், 10ஆம் வட்டா ரம் புங்குடுதீவு
5) தில்லைநாதன் சந்திரகாந் அல்லது சந்திராஸ், 10ஆம் வட்டாரம் புங்குடுதீவு
6) சிவாதேவன் குகாந்தன் அல்லது பெரியப்பன், 10ஆம் வட்டாரம் புங்குடுதீவு
7) பழனி ரூபசிங்கம் குகநாதன் அல்லது நிஷாந்தன், 155/10 தவசிங்கராம மாவ த்தை
8) ஜெயதரன் கோகிலன் அல்லது கண்ணா, 10ஆம் வட்டாரம் புங்குடுதீவு
9) மகாலிங்கம் சசிகுமார் அல்லது குமார், 10ஆம் வட்டாரம் புங்குடுதீவு
கேள்வி: இந்தக் வழக்கு விசாரணை தொடர்பில் போதியளவு சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளனவா?
பதில்: இடம்பெறும் விசாரணைகளுக்கு ஏதாவது இடையூறுகள் ஏற்படக்கூடும் என்பதால், விசாரணை அதிகாரிகள் பொதுவாக சாட்சியங்களை வெளிப்படுத்துவதில்லை.
மேலும், இந்த வழக்கில் புலன் விசாரணைகளை முதலில் நடத்திய ஊர்காவற்றுறை பொலிஸாரும் ஊர்காவற்றுறை பொலிஸாரை வழிநடத்தி கட்டளைகளை வழங்கிய வடமாகாண உயர் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து இந்த வழக்கின் புலன்விசாரணை, கொழும்பு புலனாய்வுத் திணைக்களத்திற்கு பாரமளிக்கப்பட்டுள்ளமை முக்கிய நிகழ்வாகும் .
இந்த வழக்கில் முக்கிய சான்றாக மரபணுச் சான்றை எடுத்துக்கொள்ளலாம். சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகள், மரபணு (DNA) பரிசோதனைக்காகவும் அனுப்பப்பட்டுள்ளன. வித்தியாவின் வழக்கில் அறிவு சார் சான்று என்று கூறப்படுகின்ற மரபணுச் சான்றுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
ஒரு வழக்கை நிரூபிப்பதற்காக நேரடிச் சான்று, சூழ்நிலைச் சான்றுகளுடன் தற்போது அறிவுசார் சான்றான மரபணுச் சான்றும் முக்கியத்துவம் பெறுகின்றது.
தற்போதும் புலன் விசாரணை இடம்பெற்று கொண்டிருக்கும் பட்சத்தில் வித்தியா படுகொலை தொடர்பான சான்றுகள் தொடர்பில் நான் அறிந்திருக்கும் முழு விபரங்களையும் வெளியிடுவது புலன்விசாரணைக்கு பாதகமாகலாம்
கேள்வி: பொதுமக்களால் பிடிக்கப்பட்டு வேலணை பங்களா பகுதியில் பொலிஸா ரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவிஸ் பிரஜையான ஒன்பதாவது சந்தேக நபர் வெள்ளவத்தையில் எவ்வாறு கைது செய்யப்பட்டார்? அதன் பின்னணி என்ன? இது தொடர்பில் நீங்கள் நீதிமன்றத்திலும் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தீர்கள். இது தொடர்பில் விபரிக்கமுடியுமா?
பதில்: ஒன்பதாவது சந்தேக நபரான மகாலிங்கம் சசிகுமார் என்ற சுவிஸ் வதிவாளர் வேலணை பங்களா பகுதியில் வைத்து பொதுமக்களால் பிடிக்கப்பட்டு கட்டிவைக்கப்பட்டார். அந்த இடத்திற்கு பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வருகைதந்துள்ளார்.
மேலும் பல அதிகாரிகளும் அந்த இடத்திற்கு வந்துள்ளனர். பொதுமக்கள் குறித்த சுவிஸ் வதிவாளரை பொலிஸாரிடம் பாரம் கொடுப்பதற்கு முனைந்துள்ளபோது, பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பொலிஸாருக்கு சம்பவ இடத்திற்கு வரும்படி தகவல் கொடுத்த போதிலும் மூன்று மணித்தியாலம் வரை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லையென பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது சந்தேக நபரை பொலிஸாரிடம் பாரம் கொடுப்பதற்கான பொறுப்பை தீவகத்தைச் சேர்ந்த பிரபலமான சட்டத்துறையைச் சேர்ந்த ஒருவர் ஏற்றுள்ளார் எனவும் அவரிடம் சந்தேக நபரை மக்கள் பாரம் கொடுத்ததாகவும் வித்தியாவின் தாயார் ஆங்கில பத்திரிகையொன்றிற்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.
ஆனால், பொலிஸாரிடம் பாரங்கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட சுவிஸ் குமார் எவ்வாறு வெள்ளவத்தைக்கு சென்றார் என மக்கள் கேள்வி எழுப்பினர். தீவக மக்களின் போராட்டத்தையடுத்து கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமார் கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் பாரம் கொடுக்கப்பட்டார்.
கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட ஒன்பதாவது சந்தேகநபர் தொடர்பில் கொடிகாமம் பொறுப்பதிகாரி மேலதிக அறிக்கை ஒன்றினை மே மாதம் 21ஆம் திகதி தாக்கல் செய்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தார். அதன்பின்னர் நீதிமன்றத்தின் பணிப்பின்பேரில் அவர் விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பொறுப்பதிகாரி தாக்கல் செய்திருந்த மேலதிக அறிக்கையை நோக்கும்போது, இந்த அறிக்கை ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமாரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டதாக அமைந்துள்ளது.
அவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், வித்தியாவின் கொலை வழங்கில் சுவிஸ் குமாருக்கு எதிராக எந்தவிதமான சான்றுகளும் இல்லையெனவும் மேலும், வழக்குச் சான்றுப் பொருளும் இல்லையெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், வேலணை பங்களா சந்தியில் பாரங்கொடுக்கப்பட்ட சுவிஸ் குமார் எவ்வாறு வெள்ளவத்தை சென்றார் என்ற கேள்விக்கும் குறித்த அறிக்கையில் எந்தப் பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
இவை அனைத்தும் அந்த அறிக்கையில் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன.
கடந்த முதலாம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நலன் கருதி நான் சில விடயங்களை முன்வைத்திருந்தேன்.
அதில் நான் முதலாவதாக நீதிமன்றத்தில் முன்வைத்து விடயம் ஒன்பதாவது சந்தேக நபரை பாதுகாக்கும் நோக்கத்தோடு பொலிஸார் சந்தேக நபருக்கு சார்பாக மேலதிக அறிக்கையினை தாக்கல் செய்து நீதிமன்றத்தினையும் மக்களையும் திசை திருப்பும் வகையில் செயற்பட்டுள்ளார்கள் என்ற விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன்.
இதனை நீதிபதி உன்னிப்பாகக் கவனித்தார்.
இந்தச் சம்பவத்திலிருந்து விசேடமாக ஒன்பதாவது சந்தேக நபரை பாதுகாக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற மக்க ளின் சந்தேகத்திற்கு கொடிகாமம் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் 21.-5-.2015ஆம் திகதி வெளியிடப்பட்ட மேலதிக அறிக்கையும் இதற்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.
இதனை நான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தமையையடுத்து, நீதிபதி ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமார் பொது மக்களால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தினத்திலிருந்து கொடிகாமம் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் 21-.5-. 2015ஆம் திகதி வெளியிடப்பட்ட மேலதிக அறிக்கைமூலம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நாள்வரை முற்றுமுழுதான விசாரணை நடத்தி விசாரணையில் எவராவது சட்டரீதியற்ற செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் அவர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யும்படி குற்றப் புலனாய்வு அதிகாரிக்கு கட்டளையிட்டார்.
நீதிபதியின் உத்தரவிற்கமைய தற்பொழுது விசாரணைகள் நடைபெறுகின்றன.
கேள்வி: இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் குற்றவாளிகளுக்கான தண்டனைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் உங் கள் கருத்து என்ன?
பதில்: மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டு மூன்று வாரங்களைக் கடந்துள்ள நிலையில் புலன்விசாரணைகள் முழுமையாக நிறைவடையாமலும், பொலி ஸார் தமது விசாரணைகளை நிறைவு செய்யாமலும் இருக்கின்றார்கள்.
ஒருவழக்கின் தீர்ப்பு எப்பொழுது வரும் என்றால், புலன் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, அந்த விசாரணை முடிவை பொலிஸார் சட்டமா அதிபருக்கு அனுப்பி, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் ஆய்வு செய்யப்பட்டு அதன் பின்னர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
அந்தக் குற்றப்பத்திரம் நீதிமன்றத்திற்கு வந்தபின்னர் அதுதொடர்பில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தினால் சந்தேக நபர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே தண்டனை விதிக்க முடியும்.
ஆனால், தற்போது சில இணையத்தளங்களில், ஐவருக்கு மரண தண்டனையும் ஏனையவர்களுக்கு 10 தொடக்கம் 30 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என்றும் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது மிகவும் கண்டனத்துக்குரியது.
இவ்வாறான ஒரு சூழலில் பொதுமக்கள் மத்தியில் தவறான சட்டரீதியற்ற விடயங்களை முன்வைப்பது ஏற்புடையதல்ல. இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளார்கள். ஐந்து பேருக்கு மாத்திரம் மரண தண்டனையா? என்று கேட்பவர்களும் இருக்கின்றார்கள்.
எனவே, சந்தேகநபர்களுக்கான தண்டனையினை குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தால் மாத்திரமே விதிக்க முடியும்.
கேள்வி: சிரேஷ்ட சட்டத்தரணியான நீங் கள் உங்கள் அனுபவத்திற்கமைய எவ்வாறான தீர்ப்பு வழங்கப்படும் என்று கருதுகின்றீர்கள்? விசேட நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது எந்த அளவிற்கு சாத்தியமாகும?
பதில்: வழமையான வழக்குகள் போன்று புலன்விசாரணை உட்பட ஏனைய படிமுறைகளை செய்யும் போது காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
ஆனால், வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கானது, இந்த நாட்டில் சட்டமிருக்கின்றது, அது விரைவாக செயற்பட வேண்டும் என்ற மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காக விசேடமான சில செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஏனெனில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. புங்குடுதீவில் இது மூன்றாவது சம்பவமாக இடம்பெற்றுள்ளது. எனவே இதற்கு ஒரேவழி குற்றவாளிகளுக்கான தண்டனையினை விரைவாக வழங்க வேண்டும்.
இதன்மூலம் இந்த நாட்டில் இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறாமல் குறைக்கமுடியும். தண்டனை கடுமையாகவும் விரைவாகவும் இருந்தால் குற்றச் செயல்களை குறைக்கமுடியும். மக்களுக்கு சட்டத்தின்மீது நம்பிக்கை ஏற்படவேண்டுமாயின், தண்டனைகள் விரைவாக வழங்கப்பட வேண்டும்.
தற்போதைய சூழலில் இந்தச் சம்பவம் தொடர்பில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி விசேட நீதிமன்றத்தினை அமைத்து விசாரணைகளை விரைவுபடுத்துவதாகக் கூறியுள்ளார். நீதிமன்ற நடைமுறைகள் என்று எடுத்துக்கொண்டால், இதில் மூன்று விடயங்கள் காணப்படுகின்றன.
(1) கொலை வழக்கு ஒன்று சம்பவம் நடைபெற்ற இடத்தில் நியாயாதிக்கம்முள்ள மேல் நீதிமன்றத்திலேயே நடைபெறும்.
பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணைகளின் முடிவில் வழக்குக்கோவை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டு பின்னர் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று மேல் நீதிமன்றம் தண்டனை வழங்கும். இதற்கு சாதாரண நடைமுறையின் பிரகாரம் கால தாமதமாகும்
(2) விசேட நீதிமன்றம் என்றால் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருக்கும் நீதிமன்றங்களில் ஒரு நீதிமன்றத்தினை விசேடமாக ஒரு வழக்கை மாத்திரம் விசாரணை செய்வதற்காக விசேட அமர்வாக நீதிபதி அல்லது நீதிபதிகளை நியமித்து வழக்கினை விசாரணை செய்வதாகும்.
ஏற்கெனவே இவ்வாறான நடைமுறை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டு கொழும்பு முதலாவது நீதிமன்றத்தில் அந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதாவது, குறித்த வழக்கை துரிதப்படுத்தும் செயற்பாடாகவே இது அமையும்.
ஆனால் இதனை புரிந்துகொள்ளாத சட்ட ரீதியான அனுபவம் இல்லாத பொதுபல சேனாவைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பில் தவறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
வடக்கில் இடம்பெற்ற பிரச்சினைக்கு மாத்திரம் ஏன் விசேட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது வடக்கா? தெற்கா? என்பதில் பிரச்சினை இல்லை. சமூகத்தில் இடம்பெற்ற மனிதநேயம், சட்டம் தொடர்பான பிரச்சினையாகும். பாதிக்கப்பட்டவர்கள் வடக்கில் இருக்கலாம் தெற்கிலும் இருக்கலாம்.
விசேட நீதிமன்றம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியாமலேயே பொதுபல சேனா இந்த கருத்தை வெளியிட்டுள்ளது. சட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் அறிக்கை விடுவது மிகவும் பாரதூரமான செயலாகும்.
(3) நீதி ஆயம் (TRIAL AT BAR) ஒன்றை அமைத்து தீர்ப்பு வழங்கும் செயற்பாடாகும். இந்த நீதி ஆயம் என்பது என்னவென்று நோக்கும்போது, தண்டனைச் சட்டக்கோவை 450(2) ஆம் பிரிவின் கீழ் இந்த நீதி ஆயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த நீதி ஆயம் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்து அந்த மூன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைகளை மேற்கொள்ளும் செயற்பாடாகும். இதன்மூலம் விரைவாக வழக்கை நிறைவு செய்ய முடியும். இவ்வாறு பல வழக்குகள் இடம்பெற்றுள்ளன.
குற்றத்தின் தன்மையினையும் சூழ்நிலைக்கும் ஏற்ப பிரதம நீதியரசர்தான் இந்த நீதி ஆயத்தை அமைக்க வேண்டும். என்னுடைய கணிப்பின்படி வித்தியாவின் வழக்கிற்கு நீதி ஆயம்தான் நியமிக்கப்படும் என்று நான் கருதுகின்றேன்.
நீதி ஆயம் அமைத்தால் விரைவாக இந்த வழக்கினை நிறைவு செய்ய முடியும். கிருசாந்தி கொலை வழக்கிலும் ஜோன் ரீட்டா கொலை வழக்கிலும் எதிரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபர்களுடன் மேலதிக விசாரணையில் இன்னும் சிலர் கைது செய்யப்படலாம் இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக சான்றுகளின் அடிப்படையில் கொலை, குளுவாக பாலியல்வன்புணர்வு, கடத்தல், சட்டரீயற்ற ஒன்றுகூடல், சித்திரவதை, சதிசெய்தமையென பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படலாம்
கேள்வி: இந்த வழக்கு மே மாதம் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் வழங்கிய கட்டளைகளை விபரிக்க முடியுமா?
பதில்: நீதிபதி ஆறு கட்டளைகளை வழங்கியிருந்தார். முதலாவதாக, கைது செய்யப்பட்டவர்களின் புலன் விசாரணையில் மிகவும் முக்கிய சான்றாகக் கருதப்படுவது அவர்களால் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள்.
கையடக்கத் தொலைபேசிகளை பரிசோதனைக்கு உட்படுத்தும்போது, குறித்த சந்தேக நபர்கள் வித்தியாவின் உடல் மீட்கப்பட்ட இடத்திலிருந்து யாரையெல்லாம் தொடர்பு கொண்டார்கள் என்ற விடயங்களை அறிவது மிகவும் இலகுவானதாகும்.
இவ்வாறு செயற்பட்டால் இந்த விசாரணைகளில் மிகவும் முக்கியமான சாட்சிகள் உள்வாங்கப்படும். எனவே, இதனை செய்யுமாறு நீதிபதி பணித்திருந்தார். இதனை தாங்கள் செயற்படுத்தி வருவதாகவும். விரைவில் கையடக்கத் தொலைபேசி அழைப்புகளை பரி சோதித்து அறிக்கை சமர்ப்பிப்பதாக பொலிஸார் உறுதியளித்திருந்தனர்.
அத்துடன், சந்தேக நபர்களுடைய இரத்த மாதிரிகளை எடுத்து, அதனை சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பும் படியும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
கொல்லப்பட்ட மாணவி வித்தியாவின் உடலை பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி, வித்தியாவின் வாயிலே அவரது உள்ளாடையை அடைத்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும் வாயில் அடைத்த உள்ளாடை வயிற்றுக்குள் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. அந்த உள்ளாடையினை பரிசோதனைக்கு அனுப்பும்படியும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
மேலும், ஒன்பதாவது சந்தேகநபர் வங்கி ஒன்றில் பணப்பரிமாற்றம் செய்துள்ளார். அதனையும் பரிசோதிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த கட்டளைகள் உட்பட ஆறு கட்டளைகளை நீதிமன்றம் பணித்துள்ளது.
ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணப் பொலிஸாரும் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். ஒன்பதாவது சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் மீது மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகமும் தொடர்ச்சியான போராட்டங்களும் விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இப்பொழுது வித்தியாவின் கொலை தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரி நிசாந்த சில்வா தலைமையில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீதி நிலை நாட்டப்பட வேண்டுமாயின், நாம் உணர்வு ரீதியாக செயற்படாமல் அறிவு ரீதியாக செயற்படவேண்டியதும் நாம் பொறுமைகாக்க வேண்டியதும் காலத் தின் கட்டாயமாகும்.