உலகிலேயே முதல் முயற்சியாக நடைபெற்ற ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர் விரைவில் தந்தையாகப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் வாழும் சில பிரிவை சேர்ந்த மக்களிடையே தங்கள் வீட்டில் பிறக்கும் ஆண் வாரிசுகளின் ஆண்குறியின் நுனித்தோலை அகற்றுவது வழக்கமாக உள்ளது.
அவ்வாறு நடைபெறும் முறையற்ற சிகிச்சையால் பல இளைஞர்கள் தங்கள் ஆண்குறியையே இழக்க நேரிடுகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 250 பேர் தங்கள் ஆண்குறியை இழந்து விடுவதாக கூறப்படுகிறது.
இவ்வகையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்நாட்டை சேர்ந்த ஒரு இளைஞருக்கு அவரது 18-வது வயதில் நுனித்தோல் அகற்றும் முயற்சி நடைபெற்றது. அப்போது அவரது ஆண்குறி துண்டிக்கப்பட்டு விட்டது.
இதனால் வேதனையடைந்த அவர், இதற்கு தீர்வே இல்லையா..? என்று எண்ணியிருந்த நிலையில், கேப்டவுனில் உள்ள ஸ்டெல்லன்போஷ் பல்கலைக்கழகம் அவருக்கு கைகொடுக்க முன்வந்தது. அந்த இளைஞருக்கு வேறொரு இளைஞர் தானமாக கொடுத்த ஆண்குறியை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி தென் ஆப்பிரிக்க மருத்துவர்கள் மிகவும் சிக்கலான 9 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் மாற்று ஆண்குறியை இணைத்து சாதனை படைத்தனர்.
கேப்டவுன் அருகேயுள்ள பெலிவில்லேவில் டைகர்பெர்க் மருத்துவமனையில் ஸ்டெல்லன்போஷ் பல்கலைக்கழக சிறுநீரக பிரிவு தலைவரான பேராசிரியர் ஆண்ட்ரே வான் டெர் மெர்வே தலைமையில் இந்த ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
தானம் அளித்தவரின் பெற்றோரின் ஒப்புதலுடன் அவரது ஆண்குறியை துண்டித்து, இந்த மாற்று ஆண்குறி அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
பொருத்தப்பட்ட ஆண்குறி வெற்றிகரமாக செயல்படுவதாகவும், சிறுநீர் மற்றும் இனப்பெருக்க செயல்பாடுகளில் அது இயல்பாக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் அப்போது தெரிவித்திருந்தன.
உலகின் முதல் ஆண்குறி மாற்று அறுவைச் சிகிச்சை என்ற வகையில் மருத்துவத்துறையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இந்த ஆபரேஷன் கருதப்பட்ட நிலையில், அதைவிட பெரிதான அடுத்தகட்ட திருப்புமுனையும் தற்போது நிகழ்ந்துள்ளது.
தற்போது, 21 வயது வாலிபராக இருக்கும் அந்நபரின் காதலி 4 மாத கர்ப்பமாக உள்ளதாக அவருக்கு இந்த ஆபரேஷனை செய்து வைத்த டாக்டர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆபரேஷனின் வெற்றி மற்றும் அதையும் தாண்டிய அடுத்தகட்ட வெற்றி ஆகியவற்றை பார்த்து, ஏற்கனவே தவறுதலான மேல்தோல் நீக்கும் சிகிச்சையால் தங்களது ஆண்குறிகளை இழந்துவிட்ட ஒன்பது பேர் தங்களுக்கும் இதைப்போன்ற ஆபரேஷனை செய்து உதவிட வேண்டும் என டாக்டர் ஆண்ட்ரே வேன் டெர் மெர்வே-விடம் இதுவரை பதிவு செய்து வைத்துள்ளனர்.
ஆனால், மற்ற உறுப்புகள் போல் தானமாக ஆண்குறிகள் கிடைப்பது கடினம். ஒருவேளை இந்த வாலிபரின் சாதகமான முன்னேற்றத்தை பார்த்த பின்னர் சிலர் இனிமேலாவது இத்தகைய தானங்களுக்கு முன்வரலாம் என கருதுகிறேன் என்று இந்த டாக்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.