நெல்லை அருகே கங்கை கொண்டான் ராஜபதி சுடலை மாடசாமி கோயிலில் நள்ளிரவில் இரத்தக்குளியல், மண்டை ஓட்டில் பிரசாதம் சாப்பிடும் நிகழ்வுகள் என்பன நடைபெற்றுள்ளன.
இந்த திகில் திருவிழாவை திரளான கிராம மக்கள் பார்த்து ரசித்தனர். நெல்லை அருகே கங்கை கொண்டான் ராஜபதிகிராமத்தில் காலாங்கரை சுவாமி, மாரியம்மன் கோயில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையன்று இந்த கோயில் கொடை விழா நடத்தப்படும்.
இந்த கொடை விழாவின் முக்கிய அம்சமே ரத்தக்குளியலும், மண்டை ஓடு பிரசாதமும் தான். நேற்று முன்தினம் நடைபெற்ற இந் நிகழ்வில் இரவு 8 மணி முதல் நள்ளிரவு முழுவதும் கொடை விழாவின் முக்கிய அம்சமான இரத்தக் குளியலுக்காக குழி தோண்டப்பட்டது.
அந்த குழி முழுவதும் தண்ணீர் நிரப்பப்பட்டது. தொடர்ந்து ஆடுகள் பலியிடப்பட்டு அந்த ரத்தம் முழுவதும் குழியில் கலக்கப்பட்டது. முதலில் பலியிடப்படும் 11 ஆடுகளின் தலைகள் மட்டும் குழியில் போடப்பட்டன.
இவ்வாறாக 120 ஆடுகள் பலியிடப்பட்டன. இந்த குழியில் சாமியாடி இறங்கும் முன்பு இரத்தம் குடித்தார்.
பின்னர் குழியில் இறங்கி ரத்தக்குளியலும், தொடர்ந்து ஆட்டின் தலையை எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
முதலில் வெட்டிய ஆட்டின் தலையை எடுப்பது தான் விழாவில் பிரசித்தம். பின்னர் ஒவ்வொரு ஆட்டின் தலையும் வரிசையாக எடுத்து வைக்கப்பட்டது.
இரத்தக்குளியலை முடித்து வெளியே வந்த சாமியாடியிடம் மண்டை ஓடு வழங்கப்பட்டது. அந்த மண்டை ஓட்டில் பச்சரிசி, வெல்லம், கதலி வாழைப்பழம் கலந்து வைக்கப்பட்டிருந்தது.
அந்த பிரசாதத்தை சாமியாடி சாப்பிட்டார். இரவு முழுவதும் ஆடுகள் பலியிட்டு பூஜை, ரத்தக்குளியல், மண்டை ஓட்டு பிரசாதம் என ராஜபதி கோயில் கொடை விழா இந்த ஆண்டும் களைகட்டியிருந்தது.
20க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.