லண்டன் நகரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது தேசியப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் குறித்தோ சர்வதேச விசாரணை குறித்தோ லண்டனில் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்குவது தொடர்பாகவோ பேசவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் லண்டனில் புலம்பெயர் அமைப்புக்களுடன் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வெளியான செய்தியையடுத்து பல்வேறு கருத்து முரண்பாடுகளும் கேள்விக் கணைகளும் அரசியல் மட்டத்தில் எழுந்து வருகின்றன.
இது குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக் கையில்,
லண்டனில் புலம்பெயர் அமைப்புக்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது முக்கியமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் வட கிழக்கு மக்களுக்கு செய்யவேண்டிய உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதங்களை எவ்வாறு நீக்குவது மற்றும் அப்பகுதிகளில் மீள்கட்டமைப்புக்கு புலம்பெயர் அமைப்புக்களின் உதவிகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்கு எதிராக சர்வதேச விசாரணையை கொண்டு வரவேண்டும் என்பதில் நான் எவ்வளவு தூரம் ஈடுபாடு கொண்டிருந்தேன் என்பது கூட்டமைப்பிலுள்ள ஏனைய உறுப்பினர்களை விட சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு நன்றாக தெரியும்.
அம்முயற்சிகளை நாம் மேற்கொண்ட போது சர்வதேச நாடுகளுடன் கலந்துரையாடிய போது எடுத்துக்கூறிய வேளையில் எல்லாம் சுரேஷ் பிரேமச்சந்திரன் என்னுடன் உடன் இருந்திருக்கிறார்.
இவையெல்லாவற்றையும் தெரிந்து கொண்டே போர்க்குற்ற விசாரணையை மழுங்கடிப்பதற்காக, லண்டன் பேச்சுவார்த்தைக்கு நான் போயுள்ளேன் என அவர் சந்தேகம் கொள்வது மிகமிக விசித்திரமான ஒரு கூற்றாகும்.
அவர் இவ்வாறு கூறியதற்குரிய காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. தேர்தல் அண்மிப்பது ஒரு காரணமாக இருக்கலாமென நான் கருதுகிறேன்.
இப்பேச்சுவார்த்தை பற்றி விமல் வீரவன்ச தென்னிலங்கையில் நாட்டை பிரித்தெடுப்பதற்காக மங்கள சமரவீரவும் சுமந்திரனும் வெளிநாடு போய் பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டு வந்திருக்கின்றார்கள் என பொய் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.
மறுபுறம் எதிர்க்கட்சி தலைவரோ புலிகள் மீதான தடையை நீக்கவே இவர்கள் வெளிநாடு சென்றார்களா என பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஆகவே தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல விடயங்களை இரகசியமாகவே செய்து வந்துள்ளது. இந்த விடயம் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவருக்கும் தெரியும்.
குறிப்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் சம்பந்தமாக பல சந்திப்புக்கள், பேச்சுவார்த்தைகள் பகிரங்கப்படுத்தாமலே நடைபெற்று வந்துள்ளன.
இவையெல்லாவற்றையும் தெரிந்து கொண்டு என் மீது குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு, நெருங்குகின்ற தேர்தல் தான் காரணமாக இருக்கலாமென நினைக்கத் தோன்றுகின்றது.
லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைகள் பகிரங்கப்படுத்தப்படாத பேச்சுவார்த்தைகளாக இருக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாக இருந்தது.
தற்பொழுது தென்னிலங்கையில் எழுந்திருக்கின்ற சர்ச்சையிலிருந்து இது புரிந்திருக்கும். விமல் வீரவன்ச, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் சுமந்திரனும் லண்டனுக்கு சென்று நாட்டை எவ்வாறு பிரிப்பதென்று புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்திருக்கின்றார்கள் என இனவாதத்தை கக்கியுள்ளார்.
கடந்த வியாழனன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவா? லண்டன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது என வினாவெழுப்பியிருந்தார்.
நாங்கள் மேற்படி லண்டன் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்தபோது சர்வதேச விசாரணை பற்றியோ உள்நாட்டு பொறிமுறை பற்றியோ பேசுவதற்கு இச்சந்திப்பை ஒழுங்கு செய்யவில்லை. அதுவுமன்றி அரசியல் தீர்வு சம்பந்தமாக பேசுவதற்கும் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படவில்லை.
இப்பேச்சுவார்த்தையின் முக்கியம், வட கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களுடைய உடனடிப் பிரச்சினைகள், தேவைகள் சம்பந்தமானவையாகவே இருந்தது.
அதிலும் குறிப்பாக நிலங்கள் விடுவிக்கப்படும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை முன்னெடுப்பதிலே மிகுந்த தாமதம் ஏற்பட்டு கொண்டிருப்பது அனைவரும் அறிந்த விடயம்.நிலங்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது.
சம்பூரில் பொருளாதார வலயத்துக்கொன ஒதுக்கப்பட்ட 818 ஏக்கர் காணி மற்றும் கடற்படை முகாம் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயக்காணி 237 ஏக்கர் நிலம் ஆகியவற்றை மக்களிடம் திருப்பி ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்திருந்த போதிலும் தனியார் நிறுவனமான கேற்வே வழக்குக்கு சென்ற காரணத்தினால் நிலங்களை கையளிப்பதில் தாமதங்கள் ஏற்படுகின்றன.
வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகள் கூட 25 வருடங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதன் காரணமாக மக்கள் அங்கு சென்று உடனே குடியேற முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது.
ஆனால் தற்பொழுது விடுவிக்கப்படும் நிலங்களில் இந்திய வீட்டுத்திட்டம் நிர்மாணிக்கப்பட மாட்டாது.
ஆகையினால் இலங்கை அரசாங்கத்திடமிருந்து போதிய நிதியை பெறமுடியாத நிலை காணப்படுவதனால், வெளிநாடுகள் சிலவற்றுடன் அது குறித்து பேசவும் புலம்பெயர்ந்த மக்களிடமிருந்து ஏதாவது உதவிகளைப் பெற்று நிலங்கள் விடுவிக்கப்படுவதன் பயனை மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவும் சில வேலைத்திட்டங்களை வகுக்க வேண்டியிருந்தது.
ஆனால் ஜனாதிபதி தேர்தல் முடிந்த இரண்டு மூன்று மாத காலங்களில் ஒரு குறித்த சூழ்நிலை நாட்டிலே நிலவியிருந்தபோதும், அதற்குப் பின்னரான காலத்திலே குறிப்பாக தற்பொழுது இனவாதத்தை மீண்டும் தூண்டுகின்ற செயற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக நிலங்களை மீளக் கையளிப்பதனாலும் அரசியல் கைதிகளை விடுவிப்பதனாலும் ஏதோ நாட்டின் பாதுகாப்புக்கு சவால் ஏற்பட்டுள்ளது என பாரிய விடயமாக தெற்கிலே இப்பொழுது சித்தரிக்கப்படுகின்றது.
ஆகையினால் தான் இந்த விடயங்கள் குறித்து நாம் பேசுகின்ற போது, தெற்கிலுள்ள சிங்கள மக்கள் மத்தியில் தேவையில்லாத ஒரு பயத்தை உருவாக்கிவிடும்.
எதை நாங்கள் அடைய நினைக்கின்றோமோ அதை அடைய முடியாத வகையில் தடைகள் ஏற்படக்கூடாது என்ற காரணத்தினால் தான் லண்டன் பேச்சுவார்த்தையை பகிரங்கப்படுத்தாத பேச்சுவார்த்தையாக நடத்த வேண்டுமெனத் தீர்மானித்தோம்.
இப்படி பல பேச்சுவார்த்தைகளை நாம் நடத்தியிருக்கிறோம். ஆனால் கட்சித் தலைவருக்கு தெரியாமல் எதுவும் நடப்பதில்லை.
இந்த சந்திப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் பணிப்பின் பேரில்தான் மேற்படி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டேன்.
அதுபோல் தான் பிரதமரின் பணிப்பின் பேரில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பணிப்பின் பேரில் அவரின் செயலாளரும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்கள். வெளிநாட்டு அரசாங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.
இதில் முக்கியமாக வடக்கிலும், கிழக்கிலும் ஆயிரம் ஆயிரம் வீடுகள்(2000) நிர்மாணிப்பதற்கான பண உதவிகளை பெறும் விடயங்கள் குறித்தும் பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடப்பட்டன.
தொடர்ச்சியாக எதிர்வரும் நாட்களில் கொழும்பிலும் இக்கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இதுபோலவே கைதிகளின் விடுதலை சம்பந்தமாக எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமெனவும் பேசியுள்ளோம்.
அத்துடன் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும், தனிநபர்களுக்கும் கடந்த அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்தும் அதற்குரிய நிகழ்ச்சி நிரலை எவ்வாறு அமைக்கலாமெனவும் கலந்துரையாடியுள்ளோம்.
இதன்பெறுபேறு என்னவென்பது குறித்து பகிரங்கமாக நான் கூறவிரும்பவில்லை. நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தைகளினால் எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே சில சமயங்களில் விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை.
என்னைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் பணிப்பின் பேரிலேயே மேற்படி பேச்சுவார்த்தையில் நான் கலந்துகொண்டேன்.
இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நீண்ட விளக்கமான பதிலை கடந்த வௌ்ளியன்று பாராளுமன்றத்தில் அளித்திருந்தார் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.