மூடப்பட்டிருந்த சிலாபம் கொழும்பு வீதியின் மெரவல புகையிரதக் கடவையின் ஊடாக சைக்கிள் ஒன்றில் பயணிக்க முயற்சித்த கணவன் மனைவி ஆகிய இருவர் ரயலில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 7 மணியளவில் கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த புகையிரதத்திலேயே இத்தம்பதியினர் மோதி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த தம்பதியினரிடம் இரண்டு சட்டவிரோத கசிப்பு போத்தல்கள் இருந்திருந்த நிலையில் பொலிஸாருக்குப் பயந்து வேகமாக மூடப்பட்டிருந்த புகையிரதக் கடவையின் ஊடாகக் கடக்க முற்பட்ட போதே இவர்கள் இருவரும் ரயிலில் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

111406_2இவ்விபத்தில் சிலாபம் கொட்டமுறிச்சா பிரதேசத்தைச் சேர்ந்த காமினி ஜான்ஸ் (வயது 52) மற்றும் அவரோடு வாழும் சட்ட ரீதியற்ற மனைவியான அனுலாவதி (வயது 56) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே வேறு திருமணங்கள் செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது சில காலமாக சட்டபூர்வமற்ற முறையில் கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு இன்று திங்கட்கிழமை பிரேத பரிசோதனை இடம்பெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. சிலாபம் பொலிஸார் இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply