படைக்குறைப்பு அல்லது படைவிலக் கம் குறித்த விவகாரம் இப்போது மீண்டும் சூடுபிடித்திருக்கிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம், ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், இந்த விவகாரம், அவ்வப்போது சூடுபிடிப்பதும், பின்னர் தணித்து போவதுமாகவே இருந்து வந்துள்ளது.
வடக்கில் செறிவாக நிறுத்தப்பட்டுள்ள படையினரை அங்கிருந்து விலக்க வேண்டும் என்று கடந்த வாரம் கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதற்கு முன்னதாக, அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தளமாக கொண்ட ஒக்லன்ட் நிறுவகம் என்ற ஆய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலும், ஆயுத மோதல் முடிவுக்கு வந்த பின்னரும், வடக்கில் இராணுவமயமாக்கல் சூழல் முடிவுக்கு வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தது.
கடந்த மே மாத துவக்கத்தில் கொழும்பு வந்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியும் கூட, வடக்கிலிருந்து படையினரைக் குறைக்க வேண்டும், என்பதைத் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமன்றி, இந்தியாவில் பிரபலமான ஊடகங்கள் அண்மையில் எழுதிய ஆசிரியர் தலையங்கங்களிலும் இதனை வலியுறுத்தியிருந்தன.
இந்தப் பின்னணியில் தான், கடந்த வாரம் பலாலிப் படைத்தளத்துக்கு கொழும்பு ஊடகவியலாளர்களின் குழுவொன்று அழைத்துச் செல்லப்பட்டது.
வடக்கில் அதிகமாக குவிக்கப்பட்டுள்ள படையினரை விலக்க வேண்டும் என்ற கருத்து வெளியுலகினாலும், தமிழர் தரப்பினாலும் வலியுறுத்தப்பட்டு வந்த சூழலிலும்- உயர் பாதுகாப்பு வலய நிலங்கள் ஒப்படைக்கப்பட்டு, தீவிரவாதம் மீண்டும் தலையெடுக்கும் அச்சம் எழுந்துள்ளதாகவும், வடக்கில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தென்னிலங்கையில் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வந்த நிலையிலும் தான் இந்தச் செய்தியாளர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது.ஒரே நேரத்தில் வடக்கிற்கும் தெற்கிற்கும் பதிலடி கொடுக்க வேண்டிய நிலை இராணுவத் தரப்புக்கு ஏற்பட்டிருந்தது.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில், இராணுவம் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், படிப்படியாக பொதுமக்களின் நிலங்களைக் கையளித்து வந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, இது முன்னைய அரசாங்கத்தின் நடவடிக்கையின் தொடர்ச்சிதான் என்பதை மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த விபரித்திருந்தார்.
அதேவேளை, பொதுமக்களிடம் கையளிக் கப்பட்ட நிலங்களின் பரப்பளவைச் சுட்டிக் காட்டியும், பலாலிப் படைத்தளத்தின் முன்னைய, தற்போதைய பரப்பளவைச் சுட்டிக்காட்டியும், தமிழர் தரப்பையும் அவர் திருப்திப்படுத்த எத்தனித்திருந்தார்.
அடுத்து, அளவுக்கதிகமாகப் படையினர். குவிக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டை நிராகரிக்க முனைந்த அவர், அதற்கு ஆதாரமான தகவல்கள் – புள்ளிவிபரங்கள் எதையும் வெளியிடத் தயாராக இருக்கவில்லை.
2009ஆம் ஆண்டில் 152 இராணுவ முகாம்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்ததாகவும், அவற்றில் 59 முகாம்கள் அகற்றப்பட்டு, தற்போது 93 படைமுகாம்கள் மட்டுமே பேணப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். படைவிலக்கத்தை அல்லது படைக்குறைப்பை வெளிப்படுத்த அவர் கூறிய ஒரே புள்ளி விபரம் இது தான்.
ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், 2010 ஜனவரி தொடக்கம், 2014 ஜனவரி வரை, யாழ். படைகளின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அடிக்கடி ஒரு புள்ளிவிபரத்தைக் கூறுவார்.
தான் யாழ். படைகளின் தளபதியாகப் பொறுப்பேற்றபோது, 27 ஆயிரமாக இருந்த படையினரின் எண்ணிக்கை, 13,200 ஆக குறைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறி வந்தார்.
கடந்த ஆண்டில் அவர், யாழ்ப்பாணத்தில் இருந்து விலகிச் செல்ல முன்னர், தற்போது படையினரின் எண்ணிக்கை 12,000 ஆகக் குறைக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுபோல இப்போதைய யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த எந்த புள்ளி விபரங்களையும் ெவளியிட்டிருக்கவில்லை.
ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்த 152 இராணுவ முகாம்களில், 59 முகாம்களை மூடியிருக்கிறோம் என்று மட்டும் கூறியிருக்கிறார். இதன்படி, யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து 39 சத வீதமான இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன.
ஆனாலும், 93 இராணுவ முகாம்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் மொத்த தரைப் பரப்பளவு – கடலேரிகளின் பரப்பு போக, 930 சதுர கி.மீ மட்டும் தான்.
இதன்படி பார்த்தால், யாழ்ப்பாணத்தில் இப்போது 10 சதுர கி.மீற்றருக்கு ஒன்று என்ற அடிப்படையில் இராணுவ முகாம்கள் இருக்கின்றன.
இது படைச்செறிவின் தீவிரத்தை தெளிவாக எடுத்துக் காட்டக்கூடிய ஒரு தரவாகும்.
இதனை யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவத் தளபதி தான் கூறியிருக்கிறாரே தவிர, இது ஒன்றும் குத்து மதிப்போ, மிகைப்படுத்தலோ அல்ல.
நாட்டின் ஏனைய பகுதிகளைப் போலவே, வடக்கிலும் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அடிக்கடி கூறிவருகிறது.
அந்தவகையில் பார்த்தால், இலங்கையின் மொத்த தரை நிலப்பரப்பான 64,740 சதுர கி.மீற்றரில், மொத்தமாக 6,474 இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அந்தளவுக்கு இராணுவ முகாம்கள் அமைக்கப்படவில்லை என்பது தெளிவு.
கடந்த ஆண்டு மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கூறியது போல, 12,000 படையினரும், 93 இராணுவ முகாம்களுமே இருப்போது இருப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு இராணுவ முகாமின் ஆளணிப்பலம், 129 ஆக குறைந்திருக்க இருக்க வேண்டும்.
இதன்படி, தற்போது யாழ்ப்பாணத்தில் சதுர கி.மீ ஒன்றுக்கு 13 படையினர் இருக்கின்றனர் என்று கருத வேண்டும்.
இதேபோன்று நாடெங்கும், சதுர கி.மீ ஒன்றுக்கு 13 படையினரை நிறுத்துவதானால், இலங்கை இராணுவத்துக்கு 841,620 படையினர் தேவைப்படுவர்.
ஆனால் இலங்கை இராணுவத்தின் ஆளணிப்பலம் இரண்டு இலட்சத்துக்கும் குறைவானது. கடற்படை விமானப்படையையும் சேர்த்தால் கூட 3 இலட்சம் பேர் வரை தான் வரும்.
எனவே நாட்டின் பிறபகுதிகளைப் போலவே, யாழ்ப்பாணத்தில் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது அப்பட்டமான பொய்.
யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி, வடக்கில் உள்ள இராணுவத்தினரின் செறிவைக் குறைத்துக் காட்டுவதிலேயே அரசாங்கமும் படையினரும் குறியாக இருக்கின்றனர்.
இதில் முன்னைய அரசாங்கம், இப்போதைய அரசாங்கம் என்ற வேறுபாடுகள் இல்லை.
வடக்கில் இருந்து படையினரை வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை என்பது தான், இரண்டு அரசாங்கங்களினதும் ஒரே நிலைப்பாடு.
அதுபோலவே, வடக்கில் நிறுத்தப்பட்டுள்ள படையினர் பற்றிய சரியான தரவுகளை வெளியிடுவதில் முன்னைய அரசாங்கத்தைப் போலவே இப்போதைய அரசாங்கமும், ஏமாற்றியே வருகிறது.
வடக்கில் நிலைகொண்டுள்ள படையினரின் எண்ணிக்கை பற்றிய விபரங்களை வெளியிட முடியாது என்று திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர.
இப்போது, ஆயுத மோதல்கள் இல்லை. வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை.
இதைக் கூறும் அரசாங்கம் தான், வடக்கில் நிறுத்தப்பட்டுள்ள படையினரின் சரியான எண்ணிக்கையை வெளியிடவும் மறுக்கிறது.
பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, படையினரின் எண்ணிக்கையை வெளியிட மறுப்புத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்றால், எதற்காக இராணுவத்தினரின் தொகையை அரசாங்கம் மறைக்க வேண்டும்?
அரசாங்கமும், படைத்தரப்பும் வடக்கில் உள்ள படையினரின் எண்ணிக்கையை வெளியிட மறுப்பதில் இருந்தே, இந்த விவகாரத்தில் அவர்கள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
அனைத்துலக மட்டத்திலும் தமிழ் மக்கள் தரப்பிலும், படைக்குறைப்பு குறித்து வலியுறுத்தப்பட்டாலும், அதனை நிராகரிக்கும் அரசாங்கம் எதற்காக இந்த தரவுகளை மட்டும் மறைக்க வேண்டும்.
அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன், இந்த விவகாரத்தை கையாளும் ஒன்றாக இருந்தால், துணிச்சலுடன் தமது படைவலிமை மற்றும் படைத்தளங்கள் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடலாம்.
இல்லாவிட்டால், தமிழ் மக்கள் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் கூட அரசாங்கத்தின் நேர்மையின் மீதும் வாக்குறுதிகள் மீதும் சந்தேகம் கொள்வதைத் தவிர்க்க முடியாது.
அந்த சந்தேகம் உள்ளவரை இலங்கையில் முழுமையான நல்லிணக்கமும் சாத்தியப்படாது.
-சுபத்திரா-


