பிரேசில் நாட்டில் 3 பெண்களை கொலை செய்து அவர்களை சமைத்து சாப்பிட்ட ஒரு கணவனும் இரு மனைவி மார்களும் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொலை செய்யப்பட்ட பெண்களில், ஒரு பெண்ணின் மாமிசத்தை அப் பெண்ணின் குழந்தைக்கும் உண்பதற்கு கொடுத்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
பிரேசில் நாட்டின் குவாரன்ஹன்ஸ் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஜோர்ஜ் பெல்ட்ரோவ் நீகுரோமாண்ட் மற்றும் 54 வயதுடைய அவருடைய மனைவி இசபெல் ஆகியோருக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக குழந்தை இல்லை.
இந்நிலையில் ஜோர்ஜ் மற்றொரு பெண்ணை 2ஆவது மணம் முடிப்பதற்கு அவரது மனைவி இசபெல் உதவி செய்துள்ளார்.
இதனையடுத்து இளம் மனைவி (வயது 28) புரூனா மற்றும் முதல் மனைவி இசபெல் ஆகியோருடன் ஜோர்ஜ் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
எனினும், புரூனா வழியாகவும் கடந்த சில வருடங்களாக ஜோர்ஜுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், வீட்டிற்கு முன் உள்ள வீதி வழியே செல்லும் இளம்பெண்களை அவர்கள் தங்களது பேச்சாற்றலால் ஈர்த்து தங்களது வீட்டிற்கு அழைத்து வந்து பழகியுள்ளனர்.
இதன்பின்பு ஜோர்ஜ் மற்றும் அவரது 2 மனைவிகளும் சேர்ந்து குறித்தப் பெண்களை கொலை செய்து சமைத்து உண்டுள்ளனர். பெண்களை கொலை செய்தபின் அவற்றை வெங்காயம், பச்சை காய்கறிகளை சேர்த்து சமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவர்களது பேச்சாற்றலுக்கு ஈர்க்கப்பட்டு கொலையான அனைவரும் 17, 20 மற்றும் 21 வயது கொண்ட இளம்பெண்கள் ஆவர்.
கொலை செய்தவர்களில் 17 வயதுடைய ஜெசிகா என்ற இளம்பெண்ணுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையை அவர்களது வீட்டிற்கு அழைத்து வந்து பாசம் காட்டி வளர்த்து வந்துள்ளனர்.
அதனை தங்களது குழந்தையாக மாற்ற முயற்சி செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே ஜெசிகாவை அவர்கள் கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளனர்.
இதற்கு அடிப்படை காரணம் 2ஆவது மனைவி புரூனா என ஜோர்ஜ் குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் சமைத்த பின் ஜெசிகாவின் மாமிசத்தை அவரது குழந்தைக்கும் ஊட்டியுள்ளனர்.
ஜோர்ஜின் முதல் மனைவி இசபெல் மாமிசத்தை சந்தேகப்படாமல் கடைகளில் விற்று வந்துள்ளார். 3ஆவது பெண்ணை கொன்ற பின் அவரது கடன் அட்டையை பயன்படுத்தியபோது பொலிஸாரிடம் குறித்த 3 பேரும் அகப்பட்டனர்.
ஜோர்ஜ் கைது செய்யப்பட்டு 23 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். ஜோர்ஜ், பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றியவர்.
இதேவேளை கராத்தேவில் கறுப்பு பட்டியும் வாங்கியுள்ளதோடு இக்கலை தொடர்பாக மாணவர்களுக்கு வகுப்புகளையும் நடாத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.