திருச்சி: தனியார் பள்ளியின் தமிழாசிரியர் ஒருவர் 6ஆம் வகுப்பு மாணவி ஒருவரை கழிவறையில் சில்மிஷம் செய்து சிக்கியிருக்கும் சம்பவம் திருச்சி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் அருகே உள்ளது அரபிந்தோ இன்டர் நேஷ்னல் மெட்ரிக்குலேசன் பள்ளி. இந்தபள்ளியில் திருச்சி பால்பண்ணையை சேர்ந்த வினிதா (பெயர் மாற்றம்) இப்பள்ளியில் படித்து வந்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் இந்த பள்ளியில் சேர்ந்த வினிதா இப்போது 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரை நேற்று காலை இந்த பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரியும் மணப்பாறை அருகேயுள்ள அம்மாபேட்டையைச் சேர்ந்த ரூபன் என்பவர், கழிவறையில் வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்த சர்ச்சையில், நேற்றிரவு உறையூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

father balaji
father balaji

சம்பவம் குறித்து அச்சிறுமியின் தந்தையிடம் பேசினோம். “ஒன்றாம் வகுப்பிலிருந்து என் மகள் இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கிறாள்.

இன்று காலை வழக்கம் போல எனது மகள் பள்ளிக்கூடத்துக்கு வீட்டிலிருந்து கிளம்பி போனாள். மாலை வீட்டுக்கு வந்து பள்ளிக்கூட பையை கீழே வைத்ததும், அம்மா எங்க.

ஸ்கூல் தமிழ்சார் ரூபன், காலையில நான் பாத்ரூம் போகும்போது, என்னை கட்டிபிடிச்சி, உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும், என்னை உனக்கு புடிச்சிருக்கான்னு கேட்டார். நான் தட்டிவிட்டேன்.

எனக்கு பயமா இருக்கு. இனி ஸ்கூலுக்கே போகமாட்டேன்னு சொல்லிட்டு கதறி அழுதா. அதன்பிறகுதான் நேராக பள்ளிக்கூடத்துக்குபோய் சேர்மன் ரவிச்சந்திரனிடம் முறையிட்டோம்.

தகவலறிந்து போலீஸ் அங்கு வந்தாங்க. அவர்கள் முன்னிலையில் அந்த பள்ளியில் அன்று பதிவான சிசிடிவி காட்சிகளை போட்டு காண்பிச்சாங்க. அதில் வனிதா 10.34 மணிக்கு கழிவறைக்கு உள்ளே போகிறாள்.

அவரை பின் தொடர்ந்து அந்த ரூபனும் கழிவறைக்குள் போகிறார். போன அடுத்து 10.38 மணிக்கு முதலில் ரூபன் வெளியே வருகிறார். பின்னாடியே வினிதா நடுக்கத்தோடு வெளியே வருவது அந்த வீடியோவில் தெரிகிறது.

இதில் கொடுமை என்னவென்றால் அந்த ரூபன் அந்த ரூமில் இருந்து வெளியே வரும்போது அந்த பக்கம் உள்ள ஹாலில் அந்த பள்ளிக்கூடத்தின் சேர்மன் ரவிச்சந்திரனும் நிற்கிறார். அவருக்கு தெரியாதபடி, பதுங்கியபடி ரூபன் போவது தெரிகிறது.

இதைக்கேட்டால் அந்த பள்ளிக்கூட நிர்வாகம், ரூபன் அப்படிப்பட்டவர் இல்லைன்னு சொல்லி சமாளிச்சாங்க. பிரச்னையை பெரிசு பண்ணாதீங்க. உங்க பொண்ணு வாழ்க்கை போயிடும்னு சொன்னாங்க.
tiruchy schooltiruchy school
வருசத்துக்கு 35 ஆயிரம் ரூபாய் பணம் கட்டுகிறோம். ஆனால் ஒரே பாத்ரூமை டீச்சர், பெண் பிள்ளைகள், ஆண்கள் என எல்லோரும் பயன்படுத்தியிருக்கிறாங்க.

அங்குள்ள மற்ற பிள்ளைகளுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும். கேட்டால் அந்த சாரை கைது பண்ணிட்டாங்க. பிறகு எதுக்கு பள்ளிக்கூடத்தை வம்புக்கு இழுக்கிறீங்கன்னு கேட்கிறாங்க.

விவரமறியாத என் பொண்ணுக்கிட்ட அந்த பாவி அப்படி நடந்த பிறகு அன்னைக்கு நாள் முழுக்க என் மகள் எப்படி கூனிக்குறுகி கிளாஸ்ல இருந்திருக்கும். இதை நினைத்தாலே அவ்வளவு கஷ்டமாக இருக்கு” என்றார் வேதனையுடன்.

ஒரே கழிவறையை மாணவியரும், ஆசிரியர்களும் பயன்படுத்தும் அவலம்

advacate arunதொடர்ந்து பேசிய அவரது வழக்கறிஞர் அருண், சம்பவம் குறித்து தகவறிந்த உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன்,ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் கபிலன் மற்றும் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினாங்க.

விசாரணையில் உண்மை என்று ஆசிரியர் ரூபனை கைது செய்திருக்காங்க. வினிதாவுக்கு நேற்றிரவு திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இவ்வளவு நடந்த பிறகும் இன்றுகூட பள்ளியை வழக்கம்போல நடத்துகிறார்கள்.

பாதிக்கப்பட்டவள் அந்த பள்ளி மாணவிதானே. இன்டர்நேஷ்னல் பள்ளிக்கூடம் என சொல்லி கணக்கில்லாமல் பணம் வசூலிக்கும் அந்த பள்ளிக்கூடத்தில் ஒரே அறையில் உள்ள தனித்தனி கழிப்பிடத்தில் ஆண் ஆசிரியர், பெண் ஆசிரியர், ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என அனைவரும் பயன்படுத்துவது எவ்வளவு கொடுமை.

இதை இந்த கல்வி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக காரணம் என்ன. இவ்வளவு நடந்தும் இந்த அதிகாரிகள் யாரும் பேருக்குகூட ஆய்வு நடத்தவில்லை ஏன்?

பிள்ளை பாதிக்கப்பட்டிருக்கு என சொல்லும்போது, ‘சார், பாத்ரூம்தான் போயிருப்பார் அவர் அப்படிப்பட்டவர் இல்லை!’ என சொன்னார்கள்.

ஒரு பெண்பிள்ளை அந்த வாத்தியார், தன்னிடம் எப்படி நடந்துகொண்டார் என்பதை சொல்லுமா? அந்த பள்ளிக்கூட சேர்மன் பொண்ணுக்கு இதுபோல நடந்திருந்தா இப்படி நடந்துக்குவாங்களா…? இந்த பிரச்னையை இதோடு விடமாட்டோம்” என்றார்.

இந்த சம்பவம் குறித்து பள்ளி தாளாளர் லயன் ரவிச்சந்திரனை சந்திக்க நேரில் சென்றோம். கேட்டில் இருந்த வாட்ச்மேன், நான் கேட்டுட்டு சொல்லுகிறேன்னு போனவர், “சார் நீங்க போகலாம்… பேசறதுக்கு ஒண்ணுமில்லை!” என்றார்.

தொடரும் சம்பவங்கள்

சில நாட்களுக்கு முன் திருச்சி ஜியபுரம் அருகே உள்ள மதுரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியின் சேர்மன் காரை சுரண்டியதாக, மாணவர்களை முட்டிப்போட வைத்ததோடு, கடுமையாக தாக்கினார்களாம்.

இப்படி தண்டனை கொடுத்ததை கண்டித்து, பாதுகாப்பில்லாத பள்ளியில் பிள்ளைகள் படிக்க வேண்டாம் என 80 மாணவர்களின் பெற்றோர் டிசி வாங்கிய சம்பவம் நடந்தது. இது திருச்சியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதேதான் நிலைமை.

தனியார் பள்ளிகளுக்கு அரசும், நீதிமன்றங்களும் எவ்வளவோ விதிமுறைகள் விதித்தாலும் அதையெல்லாம் குப்பையாய் தூக்கிப்போடுவது தொடர்கிறது.

தமிழகத்தில் இதேபோன்ற மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளதை இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகிறது.

கல்வித்துறை அதிகாரிகள் இனியாவது கண் விழிப்பார்களா?

-சி.ஆனந்தகுமார்

Share.
Leave A Reply