யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் பொலிஸ் குழுக்கள் துவிச்சக்கர வண்டிகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எவ்.யூ.பூட்லர் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் சமூகச் சீரழிவுகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டத்தை யாழ்;ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் மேற்கொண்டு வருகையின் அதன் ஒரு நிகழ்வை யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் வியாழக்கிழமை (18) நடத்தினர்.
இதன்போது மாணவிகள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், ‘ஒரு குழுவில் 4 பொலிஸார் இருப்பதுடன், இந்தக் குழு பாடசாலைகளுக்கு அண்மித்த பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு மாணவிகளின் பாதுகாப்பு, போதைவஸ்து விற்பனையை கட்டுப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
மாணவர்கள் தங்களுக்கான பிரச்சினைகளை ரோந்து பொலிஸாரிடம் தெரிவித்தால், அதற்கு பொலிஸார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
இதேவேளை, 3 பொலிஸ் குழுக்கள் மாலை வேளைகளின் யாழ்.நகரப் பகுதியில் ரோந்து நடவடிக்கையை செய்யவுள்ளனர்.
மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை கனம் பண்ண வேண்டும். மாணவர்கள் இணையத்தை பாவனை செய்யும் போது விழிப்புணர்வுடன் கையாள வேண்டும்.
குறிப்பாக சமூக வலைத்தளங்களை கவனமாக கையாள வேண்டும். மாணவர்கள் தங்கள் ஆளுமைகளை பாடசாலை பருவத்தில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கையடக்கத் தொலைபேசி பாவனையிலும் கவனமாகச் செயற்படவேண்டும். சக மாணவர்கள் வழிதவறிச் செல்கையில் அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்.
மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தினால், அதிபர்கள் எமக்கு அறிவித்து உரிய நடவடிக்கைளை சரியாக மேற்கொள்வோம்.
ஆசிரியர்கள் உங்கள் வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறையுமிடத்து வருகை தராத மாணவர்கள் பற்றி விசாரணை செய்து, அதற்கான காரணங்களை கண்டறிவது கட்டாயமாகும்.
பாடசாலைகளுக்கு அருகிலுள்ள அனைத்து பெட்டிக்கடைகளையும் அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அந்தக் கடைகள் மூலமே மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகின்றது’ என்றார்.