சூடானிய ஜனாதிபதியை நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தது குறித்து நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தென் ஆபிரிக்கா
‘
எப்போது கடித்துக் குதறலாம் என தருணம் பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சிங்கத்தின் குகைக்குள் பிரவேசித்து உடலில் சிறு சிராய்ப்புக் காயமுமின்றி அலுங்காமல் குலுங்காமல் ஒருவர் திரும்பி வந்தால் எப்படியிருக்கும்?
அவ்வாறுதான் தென் ஆபிரிக்காவிலிருந்து தாய்நாடு திரும்பியிருக்கிறார் சூடானிய ஜனாதிபதி ஓமர் அல்–பஷீர்.
தன் மீது வகை தொகையின்றி சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுகளின் கீழ் தன்னை சிக்க வைக்க கழுகுப் பார்வையுடன் சர்வதேச நீதிமன்றம் குறி வைத்துக்கொண்டிருக்கிறது என்பது தெரிந்தும் அந்த நீதிமன்றத்துடன் உடன்படிக்கை செய்து கொண்ட அதன் செல்வாக்கிற்கு உட்பட்ட நாடொன்றுக்குள் பிரவேசிப்பதற்கு உண்மையிலேயே கடும் நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்.
கடின சிந்தையுள்ள இராணுவ வீரராக வாழ்க்கையை ஆரம்பித்து இராணுவ அதிகாரியாக இராணுவ சதிப்புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி வலிய கரம் கொண்டு ஆட்சி நடத்திய ஓமர் அல் பஷீருக்கு அந்த நெஞ்சழுத்தம் கொஞ்சம் அதிகப்படியாகவே இருந்ததில் வியப்பில்லை.
தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற ஆபிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள அவர் ஜொஹன்னஸ் பேர்க் நகருக்கு புறப்படுகிறார் என்றவுடனேயே அவர் அங்கு எந்நேரமும் கைது செய்யப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆபிரிக்க ஒன்றிய உச்சிமாநாடு ஆரம்பமாவதற்கு முன்பே சூடானிய ஜனாதிபதி பஷீரை கைது செய்வதற்கான பிடியாணை நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தென் ஆபிரிக்காவை வலியுறுத்தியிருந்தது.
அத்துடன் பஷீரை கைது செய்வதற்கு சர்வதேச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மேற்படி நீதிமன்ற அந்தஸ்து தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள நாடுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் நாடு என்ற வகையில் அந்த நீதிமன்றத்தால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட எவரையும் கைது செய்ய வேண்டிய கடப்பாடு தென் ஆபிரிக்காவுக்கு உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் ஆபிரிக்க ஒன்றிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பஷீர் தென் ஆபிரிக்கா செல்வதற்கு எடுத்த தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்றால் மிகையாகாது.
உச்சிமாநாட்டில் பஷீர் கௌரவமிக்க ஒரு தலைவராக நடத்தப்படுவார் எனவும் அவருக்கு எதிராக எதுவும் இடம்பெறாது எனவும் தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் ஸுமா உறுதியளித்திருந்தமையும் பஷீர் தென் ஆபிரிக்க பயணத்தை தைரியமாக மேற்கொண்டமைக்கு காரணமாக அமைந்தது எனலாம்.
எனினும் மேற்படி தென் ஆபிரிக்க ஜனாதிபதியின் இந்த உறுதியளிப்பு சர்வதேச நீதிமன்றத்தின் பிடிக்குள் சிக்காமல் இருக்கும் அவரை பொறிக்குள் சிக்க வைக்கும் முயற்சியாக இருக்கலாம் என சந்தேகங்களும் நிலவின.
ஆனால் கடந்த காலங்களில் பஷீர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்திற்கு ஆதரவு வழங்குவதில்லை என்றே பல ஆபிரிக்க நாடுகள் தீர்மானித்திருந்தன.
இந்நிலையில் பஷீர் ஆபிரிக்க ஒன்றியத்தின் ஆசீர்வாதத்துடனேயே தென் ஆபிரிக்காவை விட்டு வெளியேறியுள்ளதாக தோன்றுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பஷீரை கைது செய்வதற்காக தன்னால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நடை முறைப்படுத்த தென் ஆபிரிக்காவை ஏற்கனவே வலியுறுத்தியிருந்த நிலையில் தென் ஆபிரிக்கா அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த தவறியமை சர்வதேச ரீதியில் கடும் கண்டனத்தை அந்நாட்டிற்கு சம்பாதித்து தந்துள்ளது.
பஷீரை சர்வதேச நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கைது செய்வதா அல்லது இல்லையா என்பதை தீர்மானிக்க முடியாது திணறிய தென் ஆபிரிக்கா அது தொடர்பான தீர்மானம் எடுக்கும் வரை பஷீர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என அவருக்கு தடை உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் பஷீர் தென் ஆபிரிக்காவிலிருந்து தாய்நாடு செல்வதற்காக விமானத்தில் புறப்பட்டு பல மணி நேரம் கழித்தே அவருக்கு நாட்டிலிருந்து வெளியேறத் தடை விதிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை சர்வதேச ரீதியில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
தனக்கு தென் ஆபிரிக்காவை விட்டு வெளியேற தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என ஊகித்து அவர் தானாகவே உரிய நேரத்தில் அந்நாட்டை விட்டு புறப்பட்டாரா அல்லது அவர் நாட்டை விட்டு தப்பிச்செல்லும் வரை காத்திருந்து தென் ஆபிரிக்கா மேற்படி தடை உத்தரவை பிறப்பித்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பஷீர் தென் ஆபிரிக்காவை விட்டு வெளியேறியமை பிரதான அரசியலமைப்பு மற்றும் ராஜதந்திர நெருக்கடியொன்றை தோற்றுவித்துள்ளதுடன் சர்வதேச நீதிமன்றத்திலான தென்னாபிரிக்க அங்கத்துவத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென் ஆபிரிக்கா பெருந்தொகையான ஆபிரிக்கர்களின் படுகொலைகளுடன் தொடர்புடைய தேடப்படும் ஒருவரை தப்பிச்செல்வதற்கு அனுமதித்ததன் மூலம் சர்வதேச நீதிமன்றத்தையும் உள்நாட்டு நீதிமன்றத்தையும் வெட்கக்கேடான வகையில் உதாசீனப்படுத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் கென்னத் ரொத் தெரிவித்தார்.
பஷீரை கைது செய்யத் தவறியமை நாட்டின் அரசியலமைப்பை மீறும் செயல் என தென் ஆபிரிக்க நீதிபதி டஸ்டன் மலம்போ குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும் நீதிமன்ற ஆணையை அலட்சியப்படுத்தும் வகையில் பஷீரை தப்பிச்செல்ல அனுமதித்ததற்காக தென் ஆபிரிக்கா மீது உடனடியாக சர்வதேச தடைகள் விதிக்கப்படும் அபாயம் இல்லை என கருதும் அரசியல் அவதானிகள், இந்த விவகாரத்தால் அந்நாட்டின் ஜனாதிபதி ஜாகொப் ஸுமா கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடலாம் என தெரிவிக்கின்றனர்.
பஷீரை கைது செய்யத்தவறியமை ஏமாற்றம் தருவதாக உள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூறுகிறது.
இந்நிலையில் சூடானிய வெளிநாட்டு அமைச்சர் இப்ராஹீம் கன்டோர், பஷீருக்கு தென் ஆபிரிக்காவை விட்டு வெளியேற அந்நாட்டு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை நாட்டின் இறைமையை மீறும் செயல் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
உலகமெங்கும் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை அலட்சியம் செய்யும் அதேசமயம் ஆபிரிக்க மக்களை தண்டிக்க மேற்குலக நாடுகளால் விசேடமாக உருவாக்கப்பட்ட கருவியே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என சூடானிய தகவல் அமைச்சர் அஹ்மெட் பிலால் தெரிவித்தார்.
2003 ஆம் ஆண்டு சூடானில் மோதல்கள் ஆரம்பமானது முதற்கொண்டு அந்நாட்டில் சுமார் 300, 000 பேர் பலியானதுடன் 1.4 மில்லியன் பேர் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
சூடானில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரின் போது அந்நாட்டு அரசாங்கப்படையினரும் அதன் நேச அரபுப் படையினரும் கறுப்பு ஆபிரிக்க இனத்தவர்களை வகை தொகையின்றி படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
திங்கட்கிழமை மாலை சூடானிய கார்டொம் விமான நிலையத்தில் வந்திறங்கிய பஷீரை அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
டாபூரில் இடம்பெற்ற மோதல்களின் போது வகை தொகையின்றி படுகொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் மனித உரிமை மீறல்களும் மேற்கொள்ளப்பட தூண்டியதாக பஷீர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் சூடானிய மக்களில் பெரும்பான்மையானோர் பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்துவதை தமது நாட்டின் இறைமையை மீறும் செயலொன்றாகவே கருதுகின்றனர்.
1960 ஆம் ஆண்டு சூடானிய இராணுவத்தில் இணைந்து படிப்படியாக பதவி நிலைகளில் உயர்ந்த பஷீர், 1989 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி மோசமான இராணுவப் புரட்சியின் மூலம் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதமர் சாதிக் அல்-–மெஹ்டியை ஆட்சியிலிருந்து வெளியேற்றி அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
மூன்று தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்த அவர், 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் அதிகாரத்திலிருந்த போது குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட முதல் ஜனாதிபதி என்ற பெயரைப் பெற்றார்.
2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சூடானில் இரண்டாவது உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பஷீரின் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் களம் இறங்கியதன் விளைவாக சூடானிலிருந்து தென் சூடான் தனி நாடாக பிரிந்தது.
ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து தனது அதிகாரத்தை பெருமளவில் அதிகரித்துக் கொண்ட பஷீர், அந்நாட்டின் அதிகாரத்துவம் பொருந்திய தேசிய மீட்புக்கான புரட்சிகர கட்டளை சபையையும் எதிர் அரசியல் கட்சிகளையும் கலைத்து முழுமையான நிறைவேற்றதிகாரம் பொருந்திய ஜனாதிபதியாக மாறினார்.
படுகொலைகள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் போர் குற்றங்கள் என்பன போன்ற சர்வதேச குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாக 2002 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சந்தித்த தோல்விகளில் ஒன்றாக பஷீரை கைது செய்யத்தவறிய விவகாரம் உள்ளது.
அந்த நீதிமன்றம் குற்றச்சாட்டுக்குள்ளானவர்களை நேரடியாக கைது செய்ய முடியாது தனது 123 அங்கத்துவ நாடுகளின் நீதிமன்றங்கள் மூலம் தனது செயற்கிரமங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளமை அதற்கு பல சந்தர்ப்பங்களில் எதிர்மறையான பெறுபேறுகளையே தந்துள்ளது.
இந்நிலையில் தென் ஆபிரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு மாறாக பஷீர் தப்பிச் செல்ல அனுமதித்துள்ளமை அந்த நீதிமன்றத்தின் அங்கத்துவ நாடுகளிடையே நிலவும் ஒத்துழைப்பின்மையையே சுட்டிக்காட்டுவதாக உள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சூடானிய விவகாரத்தில் ஏற்பட்ட பின்னடைவை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளுமா? இல்லையா? என்பதை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.