இரத்தினபுரியிலிருந்து எம்பிலிபிட்டியை கடந்து செல்லும் போது உள்ளது கொலம்பகே ஆர எனும் அழகியகிராமம்.
உடவலவ பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் தனது தாய் தந்தை மற்றும் இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வந்தான் 16 வயதான ஹசித்த நெரஞ்சன்.
கொலம்பகே ஆர மகா வித்தியாலயத்தின் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயின்று வந்த ஹசித்த நெரஞ்சன் அமைதியான சாதுவான பையன்.
அன்று ஜூன் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை க.பொ.த சாதாரண தர மாணவர்களைப் பொறுத்தவரை ஓய்வற்ற நாள். தொடரான வகுப்புக்களால் நிரம்பிய நாள்.
ஆம் அந்த பொதுவான விடயத்துக்கு ஹசித்த நெரஞ்சன் கொலம்பகே ஆர எனும் கிராமமோ விதிவிலக்கல்ல. அங்கும் அதே வழமைதான். நிலைமைதான்.
அன்று பின்நேரமானது. ஹசித்த நெரஞ்சன் மேலதிக வகுப்புக்காக வீட்டிலிருந்து சென்றான். அந்த மேலதிக வகுப்பு கொலம்பகே ஆர மகா வித்தியாலயத்தில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் உள்ளது.
இன்னும் தெளிவாக சொல்வதென்றால் ஹசித்த நெரஞ்சனின் வீட்டிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள மிரிஸ்வெல்பென சந்திக்கருகில் உள்ளது.
இந்த மேலதிக வகுப்புக்கு சென்ற ஹசித்த நெரஞ்சன் மாலையாகியும் வீடு திரும்பவில்லை. ஹசித்தவின் பெற்றோர் தமது மகன் இன்னும் வீடு வராததால் மேலதிக வகுப்பு இருக்கும் இடம் வரை சென்று தேடினர்.
அங்கு யாரும் இருக்கவில்லை. வகுப்பு முடிந்திருந்தது. எனினும் தேடலை கைவிடாத பெற்றோர் ஹசித்த நெரஞ்சனின் நண்பர்களை நாடி விசாரித்தனர்.
அதிலும் பலனில்லை. ஹசித்த நெரஞ்சன் வகுப்புக்கே வரவில்லை என நண்பன் ஒருவரின் கூற்று பெற்றோருக்கு மேலும் பயத்தை உண்டு பண்ணியது.
நேரம் செல்லச் செல்ல அச்சம் அதிகரித்தது. அதன் பலன் இறுதியில் உடவலவ பொலிஸ் நிலையத்திற்கு பெற்றோரை அழைத்துச் சென்றது.
”சேர்… மேலதிக வகுப்புக்குச் சென்ற மகனை காணவில்லை சேர்…. எனக்குள்ள ஒரே மகன் சேர்…. எப்படியாவது கண்டு பிடித்துக் கொடுங்கள்.. சேர்….” என பெற்றோர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கெஞ்சினர்.
அந்த கெஞ்சல் முறைப்பாட்டை யடுத்து பொலிஸாருடன் சேர்ந்து ஊர் மக்களும் ஹசித்த நெரஞ்சனை தேடி விசேட வேட்டை ஒன்றை ஆரம்பித்தனர். எனினும் உடனடியாக எந்த பலனும் கிடைக்கவில்லை.
நேரமோ நள்ளிரவு 12.00 மணியைக் கடந்தது. ஊரார் நித்திரைக்கு செல்லவில்லை. தொடர்ச்சியாக ஹசித்தவை தேடினர்.
அப்போது 15ஆம் திகதி திங்கள் அதிகாலை 3.50 மணி இருக்கும். ஹசித்த நெரஞ்சனின் வீட்டிலிருந்து சுமார் ஒன்றரைக் கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஒரு குறுக்குப் பாதையில் சந்தேகத்துக்கு இடமான இரத்தக் கறைகள் இருப்பது ஊராரால் அவதானிக்கப்பட்டது.
பிரதான வீதியில் இருந்து உள் நோக்கி செல்லும் அந்த குறுக்கு வீதியின் 500 மீற்றர்களுக்கு அப்பாலேயே அந்த இரத்தக் கறை இருந்தது.
விடயம் உடனடியாக உடவலவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஜி. பண்டாரவிற்கு அறிவிக்கப்பட்டது.
பொலிஸ் பரிசோதர் பண்டார உடன் செயற்பட்டு விடயத்தை எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித்த சிறிவர்தன உடவலவ பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் தர்மரத்ன ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்து அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் ஸ்தலத்துக்கு விரைந்தார்.
கூடவே உடவலவ பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அமரசிறி பெரேரா உள்ளிட்ட குழுவினரையும் அவர் அழைத்துச் செல்ல தவறவில்லை.
ஸ்தலத்துக்கு விரைந்த போது குறித்த இரத்தக் கறை இருந்த இடத்திலிருந்து சுமார் 30 மீற்றர் தூரத்துக்கு தொடர்ச்சியாக பாதையில் இரத்தம் வழிந்திருப்பது அவதானிக்கப்பட்டது.
அந்த 30 மீற்றருக்கு அப்பால் பாதையில் எந்த அடையாளமும் இல்லை. அப்போது நேரம் அதிகாலை 4.30 மணியைக் கடந்திருந்தது.
இரத்தக் கறை முடிவடைந்த இடத்திலிருந்து பாதையின் வலது பக்கமாக தேக்கு மரக் காட்டினுள்ளே 3 அடிக்கு மேல் அடர்ந்து வளர்ந்த பற்றைகளுக்குள் யாரும் எதிர்பார்க்காத அந்த விடயம் பொதிந்திருந்தது.
ஆம். ஹசித்த நெரஞ்சன் இரத்த வெள்ளத்தில் கிடந்தான். பெற்றோர் கதறினர். மற்றோர் சோகத்தில் மயங்கினர். பயன் என்ன? அப்போது ஹசித்த நெரஞ்சன் இவ் உலகிற்கு விடை கொடுத்திருந்தான்.
அணிந்திருந்த இளம் சாம்பர் நிற முக்கால் காற்சட்டையில் தொடைப் பகுதியை ஊடறுத்து ஒரு வெட்டுக் காயம். இரு கைகளும் கழுத்தை நோக்கி மடக்கி இருக்க கழுத்தோ அறுக்கப்பட்டிருந்தது.
அணிந்திருந்த டீ சேட் நெஞ்சுப் பகுதிவரை மேல் உயர்ந்திருக்க முதுகுப் பகுதியிலும் வயிற்றுப் பகுதிகளிலும் கீறல்கள், இரத்தக் கறைகள்.
அடக் கடவுளே… எப்படிப் பார்ப்பது அந்த நிலைமையை. பதறிப் போனது கொலம்பகே ஆர கிராமம். திணறினர் உறவினர்கள். உடன் செயற்பட்டார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார.
ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த கதைகளை கதைத்துக் கொண்டிருக்க பொலிஸ் பரிசோதகர் பண்டாரவோ தனது கடமையை செய்யலானார்.
வாக்கு மூலங்களை பதிந்து காணாமல் போயுள்ளார் என வழங்கிய முறைப்பாட்டில் சடலமாக மீட்கப்பட்டார் என்பதை இணைக்க பெற்றோரை உடன் அழைத்துச் சென்றார் அவர்.
உடவலவ பொலிஸ் நிலையத்துக்கு போகும் வழியில் பொலிஸ் பரிசோதகர் ஹசித்தவின் அம்மாவிடம் கதை கொடுத்தார்.
அம்மா….. குற்றவாளிகளை நாம் எப்படியேனும் பிடிப்போம்…. என்ன செய்வது உங்களுக்கு ஆறுதல் கூற எனக்குத் தெரியவில்லை….. என கூறியவாறு சிறிது நேரம் அமைதி காத்த பொலிஸ் பரிசோதகர் பண்டார தனக்குத் தேவையான அந்தக் கேள்வியைக் கேட்டார்.
அம்மா…. மகனுக்கு யாருடனாவது பிரச்சினைகள் இருந்ததா? அந்தக் கேள்விக்கு ஹசித்தவின் அம்மா தந்த பதில் நடந்தது என்ன என்பதை அம்பலப்படுத்தியது.
சேர்… எனக்கு தெரிந்த அளவில் பெரிய பிரச்சினைகள் என்று எதுவும் இல்லை. அவன் ஜீவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை காதலிக்கிறான். அது தொடர்பில் ஒரு ஆட்டோக்கார பையனுடன் பிரச்சினைப்பட்டான். அவ்வளவுதான் என ஹசித்தவின் அம்மா பொலிஸ் நிலையம் போவதற்கு முன்பாகவே முக்கியமான தகவலை வழங்கினார்.
பொலிஸ் பரிசோதகர் பண்டாரவின் மூளை உடன் இயங்கியது. தனது தொலைபேசியை எடுத்தார். பொலிஸ் பரிசோதகர் அமரசிறி பெரேராவை அழைத்தார். மூன்று குழுக்களை அழைத்தார்.
அதனுடாகவே முச்சக்கரவண்டி சாரதி சுஜீவவை தேடினார். பெற்றோரின் வாக்கு மூலம் எடுத்து முடிவதற்குள் சுஜிவவை பொலிஸ் நிலையம் கொண்டு வந்து சேர்த்தார்.
சூரியன் உதித்து வெளிச்சம் படர்ந்திருந்த அவ்வேளையில் எம்பிலிப்பிட்டிய நீதிவான் காஞ்சனா என்.சில்வாவும் ஸ்தலத்துக்கு விரைந்து பரிசோதனை மேற்கொண்டு விட்டு சடலத்தை பிரேதபரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அனுப்பினர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வருவதற்குள் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸாரால் முடிந்தது.
“சேர்……அடிக்காதீர்கள்…நான் தான் அனைத்தையும் செய்தேன். அவளுக்காகத்தான் …அவனைதீர்த்துக்கட்டினேன்… சேர்…அவன் இருந்தால் எனக்கு அவள் கிடைக்கமாட்டாள்” என சுஜீவ உண்மைகளை உளறினான்.
அதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கையையும் பெற்ற பொலிஸார் கழுத்தை அறுத்ததில் ஏற்பட்ட ஆழமான காயம் மரணத்துக்கான காரணம் என தெரிந்து கொண்டதுடன் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தனர்.
பொலிஸ் விசாரணைகளில் சந்தேக நபரான சுஜீவ வெளிப்படுத்திய தகவல்களின்படி ஹசித்த நெரஞ்சனும் ஜீவாவும் ஒரே வகுப்பு மாணவர்கள்.
ஹசித்தவுக்கு ஜீவா மீது காதல். ஜீவாவுக்கும் ஹசித்த மீது ஒரு கண்ணிருந்தாலும் அவள் தனது விருப்பத்தை வெளிப்படையாக ஹசித்தவுக்கு கொடுத்திருக்கவில்லை. எனினும் ஜீவாவுக்கும் ஹசித்தவுக்கும் இறுக்கமான ஒரு நட்புடன் கூடிய உறவு இருந்து வந்துள்ளது.
எந்தளவுக்கு எனில் ஜீவாவை எவரும் பகிடி செய்தால் அவர்களுடன் சண்டையிடும் அளவுக்கு அது நீண்டது. அப்படியான பின்னணியில் ஒருநாள் 21 வயதான சுஜீவ தனது முச்சக்கரவண்டியில் வந்தவாறே ஜீவாவுக்கு தனது தொலைபேசி இலக்கத்தை கொடுத்து காதல் விண்ணப்பம் செய்துள்ளான்.
இவ் விடயத்தை ஜீவா ஹசித்தவுக்கு கூறவே அவன் சுஜீவவுடன் சண்டையிட்டுள்ளான். இது தான் ஹசித்தவின் அம்மா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு சொன்ன அந்த முறைப்பாடு.
இந்த நிலையில் தான் கடந்த 14 ஆம் திகதி மேலதிக வகுப்புக்கு செல்லும் போது ஹசித்தவை கடத்தும் நாடகம் அரங்கேறியுள்ளது. இந்த கடத்தலுக்கு இந்திகவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். என பொலிஸார் சந்தேகிக்கும் நிலை அங்குதான் உருவானது.
18 வயதான இந்திகவுடன் ஹசித்த கதைத்துக்கொண்டிருந்ததை பலர் அவதானித்துள்ள நிலையில் அதன் பின்னரே அவன் மாயமாகியுள்ளான்.
இந்நிலையில் இந்திகவையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்தனர். சுஜீவ, இந்திக இருவரையும் கைது செய்தனர்.
இந்திக தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்க சுஜீவவோ தான் மட்டுமே தனது முச்சக்கரவண்டியில் சென்று இந்த கொடூரக்கொலையை செய்ததாக ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளான்.
“சேர் நான் மட்டும் தான் இதனை செய்தேன்… ஜீவா தொடர்பான பிரச்சினையை தீர்த்துக்கொள்வோம் எனக் கூறி ஆட்டோவில் கூட்டிக்கொண்டு போனேன்.
ஹசித்தவின் வீட்டின் முன்னால் அவனை அழைத்துச்சென்றேன். சிறிது தூரம் சென்று அவனை கத்தியால் வெட்டிக் கொன்றேன். சடலத்தை காட்டுக்குள் இழுத்து சென்று வீசினேன் என சுஜீவ பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளான்”
எனினும் பொலிஸார் இதனை முழுமையாக நம்பத்தயாராக இல்லை. தனியாக இதனை செய்திருக்க முடியாது என கூறும் பொலிஸார் இந்திக துணையும் அதற்கு பெறப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகித்தனர்.
இதனை விட மேலும் ஒருவருக்கோ அல்லது சிலருக்கோ தொடர்பு இருக்க வேண்டும் எனவும் அவர்கள் நம்புகின்றனர்.
இந்நிலையில் கழுத்துப்பகுதியில் உள்ள சிராய்ப்பு காயங்கள் சுஜீவவுடனான அவனது தொடர்பு ஆகியவற்றை வைத்தே அவனை கைது செய்த பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கொலையின் போது சுஜீவ அணிந்திருந்த ஆடைகள் முச்சக்கரவண்டி என்பனவற்றை இவ் வழக்கின் தடயப் பொருட்களாக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதான சுஜீவவும் இந்திக்கவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜீவாவிடம் பொலிஸாரால் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.
இக்கொலையுடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கருதும் பொலிஸார் சந்தேக நபர்களின் வாக்கு மூலத்துக்கு மேலதிகமாக அறிவியல் தடயங்களை வைத்து விசாரித்து வருகின்றனர். எது எப்படியோ காதலால் உயிர் பறிக்கப்பட்டோர் பட்டியலில் ஹசித்த நெரஞ்சனின் பெயரும் பதிவாகி விட்டது.