சிறிலங்காவில் பரவி வரும் இன்புளூவென்சா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாகவும், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுகாதார அமைச்சு வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிடுகையில், சிறிலங்காவில் அண்மைய நாட்களாகப் பரவி வரும் எச் 1 என் 1 இன்புளூவென்சா வைரஸ் காய்ச்சலினால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை இந்த வாரம் 32 ஆக அதிகரித்துள்ளது.
இந்த தொற்றினால் வவுனியா, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கண்டி ஆகிய இடங்களில் புதிதாக மரணங்கள் நேர்ந்துள்ளன.
இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 30 இற்கும் அதிகமானோருக்கு வவனியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார் இந்த நோயினால் இலகுவாக பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்புளூவென்சா வைரசினால் உயிரிழந்தோரில் கர்ப்பிணித் தாய்மாரும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.