லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் 6 வயது சிறுவனை கடிக்க வந்த நாயை விரட்டிய பூனைக்கு “ஹீரோ பூனை” விருது வழங்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேக்கர்ஸ்பீல்டில், தங்களது வீட்டுக்கு அருகே 6 வயது சிறுவனான ஜெரெமி டிராய்ன்டபிலோ சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய், அவனை சைக்கிளில் இருந்து கீழே தள்ளியதுடன் கடிக்க முயன்றது.
தனது சின்ன முதலாளி ஜெரெமியை, நாய் இழுத்து கீழே தள்ளுவதை பார்த்த, ஜெரெமி வீட்டின் வளர்ப்பு பூனை தாரா நாயை பாய்ந்து விரட்டியது.
தாராவை கண்ட நாய், துண்டை காணோம், துணியை காணோம் என அங்கிருந்து ஓடியது. 2014 ஆம் ஆண்டு மே மாதம் இந்நிகழ்வு நடைபெற்ற போது, அங்கிருந்த வீடியோவில் அக்காட்சிகள் பதிவானது. இந்த வீடியோ சமூக ஊடங்களில் வெளியானவுடன் இதுவரை 6.5 லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர்.
அந்த அளவுக்கு பலராலும் ஹீரோவாக பார்க்கப்பட்ட தாராவுக்கு நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் விலங்குகள் வதை தடுப்பு அமைப்பு “ஹீரோ டாக்” என்ற விருதை வழங்கி கவுரவித்தது.
இந்த விருது வழங்கும் விழாவின் போது தாராவுக்கு வழங்கப்பட்ட கோப்பையில் இருந்த “ஹீரோ டாக்” என்ற வார்த்தை “ஹீரோ பூனை” யாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தாராவின் துணிச்சலான வீடியோவை நீங்களும் கண்டு மகிழுங்கள்.