மதுரை: பெண் போலீசுடன் போலீஸ்காரர் உல்லாசமாக இருந்ததோடு, தட்டிக்கேட்ட கணவரின் மண்டையை உடைத்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, சுப்பிரமணியபுரம் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் சசிக்குமார் (32).  ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி பாண்டியம்மாள் தேவி (30)  கரிமேடு காவல்நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீசாக உள்ளார். இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லை.

இதே காவல்நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருபவர் ஜெயக்குமார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றிய ெஜயக்குமாருக்கும், பாண்டியம்மாள் தேவிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

கணவர் காஷ்மீரில் இருந்ததால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டனர். பல இடங்களுக்கு சென்றுள்ளனர். கடந்த மாதம் 25ம் தேதி சசிக்குமார் விடுமுறையில் ஊருக்கு வந்தார்.

வீட்டில் இருந்தபோது, பாண்டியம்மாள் தேவி செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார். யாரிடம் பேசுகிறாய் என்று கேட்டதற்கு, வேலை விஷயமாக பேசுவதாக கூறியுள்ளார்.

நள்ளிரவிலும் செல்போன் அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த சசிக்குமார், செல்போனில் இருந்த நம்பரை நாசுக்காக எடுத்து, தனது போனில் இருந்து பேசினார்.

இதில், தனது மனைவிக்கும் ஜெயக்குமாருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கண்டித்தார். ஆனாலும், இருவரும் தங்களது தொடர்பை நிறுத்துவதாக இல்லை.

இந்நிலையில், சசிக்குமார் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது மனைவியும், ஜெயக்குமாரும் உல்லாசமாக இருந்ததை பார்த்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், இருவரையும் தாக்க முயன்றார். அப்போது ஜெயக்குமார் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து, சசிக்குமாரின் மண்டையில் ஓங்கி அடித்தார்.

பாண்டியம்மாள் தேவியும் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த சசிக்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் அளித்த புகாரின்பேரில், ஜெயக்குமார், பாண்டியம்மாள் தேவி மீது சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ தொடர்பு
கரிமேடு காவல்நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டருக்கும், பெண் எஸ்ஐக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஷயம் எஸ்ஐயின் கணவருக்கு தெரியவரவே இன்ஸ்பெக்டரும், எஸ்ஐயின் கணவரும் நடுரோட்டில் மோதிக் கொண்டனர். இந்தக் கள்ளத்தொடர்பால் பெண் எஸ்ஐயை அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.

இதுபோல் கடந்த 10 நாட்களுக்கு முன் ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

காவல்துறையில் சமீபகாலமாக அதிகரித்து வரும் கள்ளத்தொடர்பு விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply