ஆரம்பகாலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற போர்வையில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமோக வெற்றிபெற்ற தமிழ்த்தலைவர்கள் பலர் கட்சிக்குள் ஏற்பட்ட சாதி, சமூக வேறுபாடுகள் காரணமாக பிளவுபட்டனர்.

இதன் விளைவாக அவர்கள் காலத்திற்கு காலம் புதிய புதிய லேபள்களில் தேர்தல்களைச் சந்தித்து வந்தனர்.

ஒருகட்டத்தில் இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய பரிமாணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரேநேரத்தில் இலங்கை அரசாங்கத்தினையும், தமிழ்த்தலைவர்களையும் துப்பாக்கி முனையில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் எதுவுமில்லை.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சமர்வரை தமிழ்த்தலைவர்கள் ஒரு அரசியல் மற்றும் இராணுவ அழுத்தத்தின் கீழே இருந்து அரசியல் செய்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற குறைப்பிரசவக் குழந்தை இன்றுவரை சரியான முறையில் வளரவில்லை. அது அரைகுறை அவயங்களுடன் தேர்தல் காலத்தில் மட்டும் தமிழ்மக்கள் முன்னிலையிலே ஒருபொம்மைபோலே தொழிற்படுகிறது.

இதனை நன்கு அறிந்திருந்த தமிழ்த்தலைவர்கள் விடுதலைப்புலிகள் காலத்தில் அதனை விமர்சிக்கப் பயந்திருந்தாலும், அவர்களின்  இருப்பகற்றலுக்குப்பிறகு ஓரளவு விமர்சனம் செய்துகொண்டு வந்தனர்.

சம்மந்தன், மாவை போன்ற மூத்தமிழ்த்தலைவர்கள் முன்னிலையிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விமர்சித்த திரு.ஆனந்தசங்கரி கழட்டிவிடப்பட்டது மற்றைய கூட்டமைப்புத் தலைவர்களுக்கு விடுக்கப்பட்ட அரசியல் அச்சுறுத்தலாகும்.

indexஅரசியலுக்கு புதியவராகவும், ஆனால் நீதித்துறையிலே போர்ந்து பொலிந்தவராகவும், கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவரும், சிங்கள மக்களுக்கு நெருக்கமானவருமாகிய நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாணசபைத் தேர்தலில் பெற்ற அமோக வாக்குகள் சம்மந்தன், மாவை ஆகியோருக்கு மட்டுமல்ல மற்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுக்கும் வயிற்றைக் கலக்கியது.

ஒரு பொம்மைபோல முதலமைச்சரை வைத்து வடமாகாணசபையை நடத்த நினைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முதலமைச்சருடைய அதிரடிப்பேச்சுக்கள், நடத்தைகள், அறிக்கைகள் பற்றி விசனமடைந்து அவரை விமர்சிக்கும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது.

மாவை சேனாதிராசா முதலமைச்சருக்கு கடிதம் எழுதுவதும், முதலமைச்சர் அவருக்கு பதில் எழுதுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஒரு கட்டமைப்போ அல்லது கட்டுக்கோப்போ இல்லையென்பதனை கோடிட்டுக் காட்டுகின்றது.

வடமாகாணசபை என்பது ஒரு தனித்துவமானது. பாராளுமன்ற உறுப்பினர்கள் செலவழிக்கும் எந்தநிதியும் மாகாணசபை ஊடாகவே செலவழிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொள்வது சில விடயங்களில் உண்மையானாலும் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய சிறப்புத் தன்மையில் முதலமைச்சர் கைவைக்க முடியுமா? என்ற கேள்வியினை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாகவே கேட்டுள்ளனர்.

வருடாந்தம் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதிமூலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கபட்ட நிதியை பாராளுமன்ற உறுப்பினர்கள் செலவு செய்கின்ற போது சில சந்தர்ப்பங்களில் மாகாண அமைச்சுக்களின் கீழ் வருகின்ற திணைக்களங்களின் ஊடாக செய்து வருகின்றனர்.

உதாரணமாக மாகாணப் பாடசாலைகளுக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வாங்கிக் கொடுக்க வேண்டுமெனில், மாகாணக்கல்வி அமைச்சின் ஊடாகத்தான் செய்ய வேண்டும்.

உள்ளூராட்சி சபையின் கீழுள்ள வீதியை திருத்த வேண்டுமெனில், மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாகத்தான் செய்ய வேண்டும்.

வடமாகாணசபை முதலமைச்சர் கூறுவதுபோல 50 வருடகால அரசியல் அனுபவம் உடைய மாவை சேனாதிராசா வடமாகாண முதலமைச்சரை உதாசீனம் செய்து, நிதியைச் செலவழிக்க முடியுமா?

இதேவேளை யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்களில் ஒருவராகிய முதலமைச்சரின் அங்கீகாரம் இல்லாமல் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது நிதியை செலவழிக்க முடியாது.

இது தெரிந்துதான் த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்சமயம் அரசிடமிருந்து பெற்ற நிதியினை மக்கள் அபிவிருத்திக்குப் பயன்படுத்தாமல் தங்களுடைய சட்டைப்பைகளில் நிரப்பிக் கொண்டமையினை முதலமைச்சர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

த.தே.கூ வின் மூத்ததலைவர் மாவை தனது அரசியல் அனுபவம், தலைமைத்துவப் பதவி அந்தஸ்து ஆகியவற்றை மறந்து தனது பிழையை உணர்ந்து வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்குச்சென்று மண்டியிட்டு, மன்னிப்புக்கோரி வாருங்கள் இருவரும் சேர்ந்து தமிழ் மக்களை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஏமாற்றலாம் என்றும் கோரியபோது, தனக்கே உரித்தான நீதியரசர் தோரணையில் வழங்கிய தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை என்ற கோதாவில் முதலமைச்சர் பதிலளித்தமை மாவைக்கு கிடைத்த புதிய அரசியல் அனுபவம்.

nallur_building_open_017வெளியில்வந்து மாவை பிரபாகரன் கூட இப்படியில்லை. முதல்வர் தான் பிடித்த முயலுக்கு மூன்றுகாலென நிற்கிறார். இந்த மனுஷனை வைத்துக்கொண்டு பாராளுமன்றத் தேர்தலுக்குச்சென்றால் தோல்வி நிச்சயம்.

என்னையே பத்திரிகையாளர் மாநாடு வைக்கச்சொல்லி சொல்கிறாரே என அழுது புலம்பியுள்ளார்.

சட்டம், தர்மம், நியாயம், பன்மொழிப்புலமை, அரசியல் அறிவு, ஆன்மீகம், விஞ்ஞானம், மெய்ஞானம், சமயம் எனப் பன்முகப்படுத்தப்பட்ட அறிவினைக் கொண்ட நீதியரசர் விக்கினேஸ்வரனிடம் வழக்கமாக மாவை சேனாதிராசா விடுகின்ற கதைகள் அல்லது அச்சுறுத்தல்லள் இன்றல்ல என்றும் எடுபடாதென்பது மாவை சேனாதிராசாவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் மூலம் வெளிப்படுகிறது.

வடமாகாண முதலமைச்சருடைய கொள்கைப்படி 13வது சட்டத்திருத்தத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும் இருப்பதைக்கொண்டு வடமாகாண மக்களுக்கு உண்மையான சேவையை செய்ய வேண்டும்.

மாறாக அரசியல் உள்நோக்கங்களுக்காக வடமாகாண மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்துவதனை அவர் அனுமதிக்கமாட்டாரெனத் தெரிகிறது.

இதேவேளை மாவை சேனாதிராசா ஒரேமேசையில் வைத்து மாகாணசபை, உள்ளூராட்சி சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் பேசி சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணலாம் வாருங்களென அழைத்தபோது முதலமைச்சர் வேண்டுமென்றே தட்டிக்கழித்ததாகவும் கூறப்படுகிறது.

முதலமைச்சர்  தன்னுடைய அரசியல் எதிரிகளாக முன்னர் மஹிந்த ராஜபக்ஷவையும், தற்சமயம் ரணில் விக்கிரமசிங்கவையும் பார்க்கிறார்.

தற்சமயம் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருப்பதனால் அவரிடம் பணம்பெற்ற த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்களையும் எதிரிகளாகவே பார்க்கின்றார்.

த.தே.கூ ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை பக்கமாகவும், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் பக்கமாகவும் நிற்கக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது.

எதிர்வரும் சில தினங்களில் அமெரிக்காவில் நடைபெறவிருக்கின்ற தென்னிந்திய நடிகைகள் கலந்து கொள்ளவிருக்கின்ற கலாச்சார நிகழ்ச்சியொன்றிற்கு பிரதம விருந்தினராக கலந்து கொள்கின்றமையை காரணம் காட்டியே  த.தே.கூ ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை முதல்வர் புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.

த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சரின் இந்தச்செயல் அதிர்ச்சி அளித்துள்ளது. கட்சி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தைவிட நடிகைகள் விழா பெரிதாகிப் போய்விட்டதா? என விசனம் அடைந்துள்ளார்கள்.

முன்னைய ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாவரினதும் நிதி ஒழுங்கான முறையில் மாகாண மற்றும் மத்திய அமைச்சின் கீழ்வருகின்ற திணைக்களங்களினால் மக்களுக்காக செலவழிக்கப்பட்டது.

அப்போதிருந்த மத்திய அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இணைத்தலைவர்களில் ஒருவராகிய அமைச்சர் ஒருவரும், வடமாகாண முதலமைச்சரும் சேர்ந்து யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் அபிவிருத்தித் திட்டங்களை மீளாய்வு செய்து முடிவுகளை எடுத்திருந்தனர்.

அப்போது மத்திய அரசு எந்தவிதமான நிதிப்பங்களிப்புக்களையும் அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைகளில் நேரடியாக வழங்கியதில்லை. அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் அபிவிருத்திக்காக நிதியை செலவழிக்காமல் தங்கள் சட்டைப்பைகளிற்குள் போடவில்லை.

யுத்தத்திற்குப்பின் யாழ்மாவட்டம் பாரிய அபிவிருத்தியை கண்டுள்ளதென்பதனை வடமாகாண முதலமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரியிடம் தடைப்பட்டிருக்கின்ற அபிவிருத்திக்கு மேலதிக நிதிப்பங்களிப்பை கேட்டிருக்கின்ற நிலையில், முதலமைச்சரை ஏமாற்றி இடைக்குள் புகுந்து ரணில் விக்கிரமசிங்க மூலம் வடமாகாண அபிவிருத்திக்கென நிதியைப்பெற்று தம்முடைய சொந்த நலனுக்காக த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்துவதை நீதியரசர் மன்னிக்கமாட்டார் என்பது புலனாகிறது.

இந்த நிலையில் முதலமைச்சரின் அமெரிக்க விஜயம் புலம்பெயர் தமிழர்களை கட்டாயம் சந்திக்கவைக்கும். அதன்மூலம் முதலமைச்சர் த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்களின் தற்போதைய செயற்பாடுகளைக் கூறுவார்.

இதனால் புலம்பெயர் தமிழர்களுடைய நிதிப்பங்களிப்பு த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் தேர்தலுக்குக் கிடைக்காது. ஆனால் வடமாகாண அபிவிருத்திக்கென பெரியளவு நிதியினை அமெரிக்காவில் இருந்து முதலமைச்சர் கொண்டுவருவாரென நம்பலாம்.

யாழ்மாவட்டத்தில் ஜனநாயக மற்றும் முற்போக்கு கட்சிகள் சில தமது அலுவலகங்களை பிரதேசங்கள் தோறும் அமைத்து மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற நிலையில் த.தே.கூ வினருடைய அலுவலகங்கள் அந்தளவிற்கு திறக்கப்பட்டு அங்கு மக்கள் சேவை நடைபெறவில்லை.

இதுமட்டுல்ல த.தே.கூ வில் இருக்கின்ற கட்சிகளுடைய அலுவலகங்களில் கூட மக்கள் பணி நடைபெறவில்லை.

உண்மையில் மக்கள் சேவை செய்ய வேண்டுமென்ற மனமிருந்தால் மட்டுமே அலுவலகங்களைத் திறந்து நாளாந்தம் மக்கள் சந்திப்பு நடைபெறும்.

தேர்தலை மட்டும் மையமாகக்கொண்டு கட்சி நடத்துபவர்கள் தமது நாடாளுமன்ற ஆசனம் மூலம் கிடைக்கின்ற எந்தநிதியையும் தங்கள் பிரதேச மக்கள் தொடர்பகங்கள் மூலம் செலவழிக்கமாட்டார்கள்.

ஏனெனில் மக்கள் தொடர்பு அலுவலகங்களைத் திறந்தால் நாளாந்தம் மக்களைச் சந்திக்க வேண்டும், அலுவலகத்திற்கு வாடகை கொடுக்க வேண்டும், அலுவலர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் இவையெல்லாவற்றிற்கும் நிதி வேண்டும்.

வரவை மட்டுமே விரும்பும் த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் செலவழிப்பதென்பது அவர்களுக்கு ஒவ்வாமை ஆகும்.

வழமையாக தேர்தல் வருகின்றபோது ஆட்சியாளர்களை விமர்சித்து பழக்கப்பட்ட த.தே.கூ வினர் இம்முறை தாங்களே ஆட்சியார்களாக இருப்பதனாலும், ஆட்சியாளர்களிடம் பெருமளவு பணத்தை பெற்றிருப்பதாலும் பாறாங்கல்லை கட்டிக்கொண்டு தேர்தல் கடலை நீந்த வேண்டியுள்ளது.

அவர்கள் கரையேற வேண்டுமெனில், சட்டம், தர்மம், நியாயம், பன்மொழிப்புலமை, அரசியல் அறிவு, ஆன்மீகம், விஞ்ஞானம், மெய்ஞானம், சமயம் எனப் பன்முகப்படுத்தப்பட்ட அறிவினைக் கொண்ட நீதியரசர் முதலமைச்சர் விக்னேஸ்வரனை முன்னிலைப்படுத்தி பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் ஏழை மக்களின் கதாநாயகர்களாக இருக்கின்ற, அபிவிருத்தி பாதையின் முன்னோடிகளாகத் திகழ்கின்ற, மாறாத கொள்கையுடைய, இனங்களுக்கிடையே நல்லிணக்கம் கொண்ட, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஜனநாயக மற்றும் முற்போக்கு வாதிகளிடம் அதிர்ச்சித் தோல்வி அடைய நேரிடும்.

ஸ்ரீ இராஜ ராஜ சோழன்

Share.
Leave A Reply