ரிங் ரிங் ரிங்……………
“ஹலோ! நான் ரியாஸ் கதைக்கின்றேன்.. நீங்கள் யார்?” என்று வினவினார்.
அதற்கு மறுமுனையில் “ ஹலோ ! முதலாளி நான் யார் என்பது உனக்குத் தேவையில்லை. நான் சொல்லும் விடயத்தைக் கேளு. உன்னுடைய ஆசை மகன் இப்போது மொண்டசோரியில் இல்லை.
இப்போது எங்களிடம் தான் இருக்கின்றான். குழந்தை வேணுமென்றால் நீ எங்களுக்கு 30 இலட்சம் ரூபா தர வேண்டும். இதை மீறி நீ பொலிஸாருக்கு தகவலை வழங்கிக் குழந்தையை மீட்க நினைத்தால் நடப்பதோ வேறு!”
……………………………………………………………………….
தொடர்ந்து…
“கப்பம் பெறுவதற்காகவும், பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவும் சிறுவர், சிறுமியர் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுவது நாளைய எதிர்காலத்தையே கேள்விக் குறியாகியுள்ளது”
அன்று நண்பகல் 12 மணி யிருக்கும். பிரபல வர்த்தகர் ரியாஸின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) தொலைபேசி வழமையான ஒலி நாதங்களுடன் ஒலிக்கின்றது.
ரிங் ரிங் ரிங்…………….
பரபரப்பான வியாபார சூழலில் இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருந்த ரியாஸ் சட்டைப் பையிலிருந்த தனது தொலைபேசியைக் கையில் எடுத்துப் பார்க்கின்றார்.
அப்போது அது அடையாளம் தெரியாத தொலைபேசி இலக்கமாகவிருக்கின்றது. எனவே, யாராக இருக்கும் என்று சிந்தித்தவாறே தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கின்றார்
“ஹலோ! நான் ரியாஸ் கதைக்கின்றேன்.. நீங்கள் யார்?” என்று வினவினார்.
அதற்கு மறுமுனையில் “ ஹலோ ! முதலாளி நான் யார் என்பது உனக்குத் தேவையில்லை. நான் சொல்லும் விடயத்தைக் கேளு. உன்னுடைய ஆசை மகன் இப்போது மொண்டசோரியில் இல்லை.
இப்போது எங்களிடம் தான் இருக்கின்றான். குழந்தை வேணுமென்றால் நீ எங்களுக்கு 30 இலட்சம் ரூபா தர வேண்டும். இதை மீறி நீ பொலிஸாருக்கு தகவலை வழங்கிக் குழந்தையை மீட்க நினைத்தால் நடப்பதோ வேறு!”
என்று அடையாளம் தெரியாத தொலைபேசி இலக்கத்திலிருந்து பதில் வந்தது.
இதனைத் தொடர்ந்து ரியாஸ் அதிர்ச்சியில் உறைந்து போனார். அவருடைய தலையில் பெரிய பாறாங்கல்லை யாரோ போட்டது போல் இருந்தது.
தனது தலையில் இரண்டு கைகளாலும் அடித்துக் கொண்டு, நிலை குலைந்தவராய் “ஐயோ நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்.
என்னுடைய மகனை ஒன்றும் செய்து விடாதீர்கள். என்னால் அவ்வளவு சீக்கிரமாய் 30 இலட்சத்தைத் தேட முடியாது. நான் வேணுமென்றால் 10 இலட்சம் தருகின்றேன்.
தயவுசெய்து எனது மகனை விட்டு விடுங் கள்” என்று ரியாஸ் அந்தக் கொடியவனை நோக்கிக் கெஞ்சி மன்றாடினார். ரியாஸின் மன்றாடல் ஓர் அப்பாவித் தந்தையின் அழுகுரலாய் இருந்தது.
ரியாஸ் வவுனியா நகரில் பிரபல்யமான வர்த்தகர் ஆவார். சிறு வயது முதலே துணிவோடும், தன்னம்பிக்கையுடனும் போராடி வவுனியா நகரில் வியாபாரத்தில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தவர்.
அதுமட்டுமின்றி, ஊருக்குள்ளும் ரியாஸூக்கென்று ஒரு நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தது. “ரியாஸ்” என்று பெயர் சொல்லிக் கேட்டால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
மேலும் இவை எல்லாவற்றையும் விட ரியாஸ் தனது மனைவி மீதும், இரு மகன்மார்கள் மீதும் அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார்.
எத்தகைய பரபரப்பான சூழலிலும் தனது குடும்பத்தினருக்காக நேரத்தைச் செலவழிக்கத் தவறவில்லை. அதுவும் குடும்பத்தின் கடைக்குட்டியான இளைய மகன் நியாஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார்.
பெரும்பாலும் அவனுக்கு வேண்டிய அனைத்தையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரியாஸ் பார்த்துப் பார்த்து செய்வார்.
மேலும் ரியாஸ் தனது வர்த்தக நிலையத்துக்குச் செல்லும் போதே பிள்ளைகள் இருவரையும் கையோடு அழைத்துச் சென்று பாடசாலையில் விட்டு விட்டு தனது வர்த்தக நிலையத்துக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
முதலில் மூத்த மகனை 7.30 மணியள வில் பாடசாலையில் விட்டு விட்டு இறுதியாக இளைய மகனை வேப்பங்குளத்திலுள்ள பாலர் வகுப்பில் விட்டுச் செல்வார்
இந்நிலையில் ரியாஸின் 5 நேர தொழுகையும், “ தனது குடும்பத்தினருக்கு எந்த வித ஆபத்தும் நேர்ந்து விடக் கூடாது என்று இறைவனை நோக்கிய பிரார்த்தனையாகவே இருக்கும். அவ்வாறிருக்கையில்,
அன்றைய விடியல் (2015.06.12) ரியாஸின் குடும்பத்தை நோக்கிப் பெரும் பேரிடியாகவே இருந்தது. அதிகாலையிலேயே எழுந்து தனது தொழுகையை முடித்து விட்டு, மனைவியின் கையால் சமைத்த உணவினை சாப்பிட்டு விட்டு, பிள்ளைகளை கையோடு அழைத்துக் கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டார்.
வழமை போல் மூத்த மகனை பாடசாலையில் விட்டு விட்டு அவருடைய செல்ல மகனான நியாஸை வேப்பங்குளத்திலுள்ள பாலர் பாடசாலைக்கு கூட்டிச் சென்றார்.
அதன்பின் பாலர் வகுப்பு வாசலிலேயே பிள்ளையின் தலையைத் தடவி, உச்சிமோர்ந்து தனது அன்பை வெளிப்படுத்தி வழியனுப்பி வைத்து விட்டு பிள்ளை தனது நண்பர் கூட்டத்துடனும் ஆசிரியர்களுடனும் போய்ச் சேரும் வரை வாசலில் இருந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தார்.
அதன்பின் பிள்ளை அவர்களுடன் ஒன்றாக இணைந்த பிறகு குழந்தையின் பாதுகாப்புத் தொடர்பாக எவ்வித சந்தேகமும் கொள்ளாது அவ்விடத்தை விட்டுச் சென்று விடுவார்.
எனினும் அதன்பின் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக பெரும் சதி முயற்சியொன்று இடம்பெறப் போகின்றது என்பதை ரியாஸ் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
சூரியனின் கதிர்கள் சுட்டெரிந்து கொண்டிருந்த நேரமது. சரியாக நண்பகல் 12 மணியிருக்கும். ரியாஸ் மும்முரமாக தனது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது அநாமதேய தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் ”உங்களது இளைய மகனை கடத்தி வைத்துள்ளோம் 30 இலட்சம் ரூபாவை உடனடியாகச் செலுத்தினால் பிள்ளையை உயிருடன் பார்க்க முடியும்” என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து குழப்பமடைந்த ரியாஸ் எதற்கும் பாடசாலையில் சென்று பார்ப்போம் என்ற முடிவில் வேப்பங்குளத்திலுள்ள பாலர் பாடசாலைக்குச் சென்று தனது தங்க மகனின் முகத்தைத் தேடினார்.
எனினும் எங்கு தேடியும் பிள்ளை இருக்கவில்லை. எனவே குழந்தை கடத்தப்பட்டு விட்டது என்பது ரியாஸூக்கு உறுதியானது.
ஆயினும் யார் பிள்ளையைக் கடத்தி இருப்பார்கள்? என்பது மட்டும் புரியாத புதிராகவே இருந்தது. பாடசாலை ஆசிரியர்களிடமும், நிர்வாகத்தினரிடமும் இது பற்றி வினவியபோது “முதலாளி கூட்டி வரச் சொன்னார் என்று கூறி சிலர் பிள்ளையை வேனில் அழைத்துச் சென்றார்கள்.
அதன்பின் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது” என்று அவர்கள் பதிலளித்தனர். ரியாஸூக்கு தலை சுற்றியது. இதயம் வழமைக்கு மாறாகப் படபடத்தது.
நினைவுகள் எல்லாம் தொலைந்தவராய் அங்கும், இங்கும் அலைந்து திரிந்து கப்பக்காரர்களுக்கு தருவதாய் உறுதியளித்த 10 இலட்சம் ரூபாவைத் திரட்டினார்.
அதன்பின் கப்பக்காரர்களின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி பணத்தை எங்கு கொண்டு வர வேண்டும் என்று வினவினார்.
எனினும் அந்த கப்பக்காரர்கள் சரியாக எந்த இடத்தையும் தெரிவிக்காமல் ஒவ்வொரு தொலைபேசி அழைப்புக்கும் ஒவ்வொரு இடத்தைக் கூறி அங்கும், இங்கும் அலைய வைத்தனர்.
இறுதியில் வவுனியா பூவரசங்குளம் பகுதியில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் பணத்தை வீசி விட்டுச் செல்லு மாறு பணித்துள்ளனர்.
அதன்பின் ரியா ஸூம் பணப்பையை அங்கு வீசி விட்டு பிள்ளை வீட்டுக்கு வந்திருக்கும், அவர்கள் கொண்டு வந்து விட்டிருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் வீட்டை நோக்கிச் சென்றார்.
எனினும் அங்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருந்தது. சதா புன்னகையுடன் வலம் வரும் மனைவி முகத்தில் புன்னகையைக் காணவில்லை.
சுய நினைவிழந்து, பிள்ளையைப் பறிகொடுத்த ஏக்கத்தில் பித்துப் பிடித்தவளாய்க் கிடந்தார். மூத்த மகன் தன்னோடு ஓடியாடி விளையாடிய தம்பி இல்லாத தனிமையில் ஒரு மூலையில் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.
மொத்தத்தில் இழவு விழுந்த வீட்டைப் போன்று ரியாஸின் வீடு காட்சியளித்தது. ரியாஸூக்கு எதுவுமே புரியவில்லை. பணத்தைக் கொடுத்தும், குழந்தையைப் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று புலம்பினார்.
பல முறை எனது பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாகத் தானே இருந்தேன். அப்படியிருக்கையில் இறைவன் ஏன்? எனக்கு இவ்வளவு பெரிய சோதனையைத் தந்தார் என்று இறைவனை சபித்தார்.
இதனிடையே இறைவன் ரியாஸின் பிராத்தனையைக் கேட்டார் போல் கப்பக்காரர்களிடமிருந்து ரியாஸூக்கு தகவலொன்று கிடைக்கப்பெற்றது. அந்தத் தகவலின்படி ரியாஸின் வீட்டுக்கு அருகிலுள்ள பட்டாணிச் சூர் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில் பிள்ளையை விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரியாஸூம், மனைவியும் அங்கு விரைந்து சென்றார்கள். அப்போது இரவு 8.00 மணியிருக்கும்.
அந்த இருள் சூழ்ந்த இரவில் பிள்ளை தனியாக நின்று கொண்டிருந்தது. தோளிலும், மார்பிலும் போட்டுச் சீராட்டி மகிழ்ந்த மகனைக் கண்டவுடன் பெற்றோர் இருவரின் மகிழ்ச்சிக்கும் அளவே இருக்கவில்லை. அள்ளி அணைத்து முத்த மழை பொழிந்தனர்
அதன்பின் பிள்ளையை வீட்டுக்கு அழைத்துச் சென்று சில மணி நேரங்கள் கடந்த பின் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்ட ரியாஸ் பொலிஸாருக்கு மேற்படி சம்பவத்தை அறிவிப்போம் என்ற முடிவுக்கு வந்தார்.
அதன்படி இரவு 9.30 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்தார்.
அந்த முறைப்பாட்டுக்கு அமைய கடத்தல்காரர்கள் வர்த்தகரான ரியாஸை அழைத்த இடங்கள், பிள்ளையை விடுவித்த இடங்கள் என்பவற்றுக்குச் சென்று சோதனைகளை நடாத்தியதுடன், வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதையடுத்து சந்தேக நபரை கடந்த 13 ஆம் திகதி வவுனியாப் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி குறித்த சந்தேக நபர் வவுனியா பகுதியிலுள்ள சமுர்த்தி அபிவிருத்தி வங்கியொன்றில் பணி புரிந்தவர் என்பதும், சமுர்த்தி வங்கியில் காணப்பட்ட முக்கிய சேமிப்புத் தொடர்பான ஆவணங்களை தீக்கிரையாக்கி அழித்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
எனவே, கடந்த சில மாதங்களாகவே சிறுவர், சிறுமியர்களைக் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகப் பொலிஸ் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரமும் ‘குற்றம்’ பகுதியில் 7 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பின் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் பற்றி நாம் குறிப்பிட்டிருந்தோம்.
இவ்வாறு கப்பம் பெறுவதற்காகவும், பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவும் சிறுவர், சிறுமியர் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுவது நாளைய எதிர்காலத்தையே கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, பெற்றோர், தமது பிள்ளைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். பாடசாலைக்குச் செல்லும் போதும் பாடசாலையிலிருந்து வரும் போதும் பிள்ளைகள் தனித்துச் செல்வதை முடியுமான அளவு தவிர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது தகுந்த பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
(2015.06.18 திகதி வரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில்)