மும்பையில் விஷச்சாராயத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 8 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 4 கலால் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை மலாடு மேற்கு லட்சுமிநகர் குடிசை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள், கடந்த 17ஆம் திகதி இரவு அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.
சாராயம் குடித்த சில நிமிடங்களில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானோர் வயிற்று வலி, நெஞ்சு வலி ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பரிசோதனையில் அவர்கள் குடித்த சாராயத்தில் விஷத்தன்மை இருந்தமை கண்டறியப்பட்டது.
இந் நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 13 பேர் அன்றைய தினமே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.நேற்று காலைவரை 90 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இதில் தொடர்புடைய சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்தோடு விஷச்சாராயம் விற்பனைக்கு துணைபோன மால்வாணி உயர் பொலிஸ் அதிகாரி பிரகாஷ் பாட்டீல், துணைபொலிஸ் அதிகாரி சங்கர் கார்கே உள்ளிட்ட 8 பொலிஸாரை பணியிடை நீக்கம் செய்து மும்பை பொலிஸ் ஆணையாளர் ராகேஷ் மரியா உத்தரவிட்டுள்ளார்.