அங்கோர் வாட், இந்திய மன்னர்களின் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் உலக இலட்சினை என்று சொல்லலாம். நம்மவர்கள் கடல் தாண்டி ஆட்சிப் புரிந்ததற்கு ஓர் பெரும் சான்றாக விளங்குகிறது அங்கோர் வாட்.
“அங்கோர்” என்பது நகரம் என்பதை குறிக்கும் சொல், “வாட்” என்பது கோயில் என்பதை குறிக்கும் சொல். எனவே, இது 12ஆம் நூற்றாண்டுகளில் ஓர் பெரிய மக்கள் வாழ் நகரமாகவும், கலாச்சார சின்னமாகவும் இருந்திருக்கலாம்.
இனி, உலகின் பெரிய கோவிலாக கருதப்படும் இரண்டாம் சூரியவர்மன் மன்னன் கட்டிய அங்கோர் வாட் பற்றிய அதிசயிக்க வைக்கும் வரலாற்றுக் கூற்றுகள் பற்றிப் பார்க்கலாம்..
ஆரம்பத்தில் இந்து கோவில்
இரண்டாம் சூரியவர்மன் 12ஆம் நூற்றாண்டில், அங்கோர் வாட்டை ஓர் விஷ்ணு தள வழிப்பாட்டு கோவிலாக தான் கட்டினார். பின் 14 – 15ஆம் நூற்றாண்டுகளில், புத்த மத துறவிகளால் கையகப்படுத்தப்பட்டு கூடுதலான புத்த சிலைகளும், கலைநய வேலைப்பாடுகளும் சேர்க்கப்பட்டு புத்த கோவிலாக மாற்றப்பட்டது.
மயானம்
அங்கோர் வாட் எந்த நோக்கத்திற்காகக் கட்டப்பட்டது என்பது இன்றுவரை ஓர் மர்மமாகவும், விவாதமாகவும் இருந்து வருகிறது. ஆனால் இது ஒரு மயானம் அல்லது இறுதி ஊர்வலம் நடத்தும் இடமாக உலக அளவில் ஒப்புக்கொள்ளப் பட்ட விஷயமாக இருக்கிறது. இது இடைப்பட்ட காலங்களில் இவ்வாறு மாறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பிரபஞ்சத்தின் பிரதி
உலகின் மிகப்பெரிய மதம் சார்ந்த கோவிலாக கருதப்படும் அங்கோர் வாட் கோவிலின் கட்டிட அமைப்பு, நமது பிரபஞ்சத்தின் அமைப்பைக் குறிப்பது போல இருக்கிறது. மற்றும் இது அண்டத்தில் உலகின் நிலையைக் குறிப்பது போலவும் இருக்கிறது.
மாபெரும் நகரம்
கம்போடியாவின் அங்கோர் எனும் இடத்தில் கட்டப்பட்ட இந்த அங்கோர் வாட், சூரியவர்மனின் ஆட்சிக்காலத்தின் போது, பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்றும். அந்த காலகட்டத்தில் அங்கோர் தான் உலகின் பெரிய நகரமாக இருந்திருக்க வேண்டும் என்றும் யூகிக்கப்படுகிறது.
ஐந்து மில்லியன் டன் மணற்கல்
அங்கோர் வாட் கோவிலின் கட்டுமானம் சாதாரணமாக கருத முடியாது. உலகிலயே பெரிய கட்டுமானமாக திகழும் இந்த அங்கோர் வாட் கோவிலை முழுதாக புகைப்படம் எடுப்பதே கடினமாகும். இந்த கோவிலை கட்ட ஏறத்தாழ ஐந்து மில்லியன் டன் மணற்கல்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
பாரம்பரிய சின்னம்
கடந்த 1992ஆம் ஆண்டு UNESCO அங்கோர் வாட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
சுற்றுலா பயணிகள்
கம்போடியாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளில் 50%க்கும் மேற்பட்டவர்கள் அங்கோர் வாட் கோவிலைக் காண்பதற்காக தான் செல்கின்றனர்.
மீட்டெடுப்புப் பணிகள்
கொஞ்சம், கொஞ்சமாக சிதைந்து வரும் அங்கோர் வாட் கோவிலை மீட்டு, சிதைவுகளை சீரமைக்க உலக நாடுகளில் இருந்து நிறைய நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
நாளுக்கு 10,000 டாலர்கள்
“டாம் ரைடர்” எனும் ஆங்கில படத்தின் படப்பிடிப்பிற்காக, பாரமௌன்ட் தயாரிப்பு நிறுவனம், ஓர் நாளுக்கு 10,000 டாலர்கள் என மொத்தம் 7 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினர்.