சென்னை: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து  பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா  உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சிறையிலடைக்கப்பட்டு, ஜாமீனில் வெளிவந்த ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும், தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்து  தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி,  ஜெயலலிதா உள்பட 4 பேரையும், கடந்த 11-5-2015 ஆம் தேதியன்று விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு, தமிழக அரசியல் கட்சிகளால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.  அத்துடன், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, கர்நாடக அரசு முடிவு செய்தது. இதற்காக,  பி.வி.ஆச்சார்யாவை அரசு வழக்கறிஞராக நியமனம் செய்தது.

இந்நிலையில், உச்சநீதி மன்றத்தில்  கர்நாடக அரசு  இன்று மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு முன் ஆஜரான கர்நாடக அரசு உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா, சுமார் 2,700 பக்கங்கள் கொண்ட மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

மேல் முறையீட்டு மனுவில் சொல்லப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் என்ன?

* சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்பட்டது நீதிக்கு முரணானது. கடந்த மே 11-ம் தேதியன்று நீதிபதி குமாரசாமியால் வழங்கப்பட்ட தீர்ப்பு பூடகமானது. தர்க்கரீதியாக தவறானது. அப்பட்டமான கணிதப்பிழைகள் உள்ளன.

* பவானி சிங் அரசு சிறப்பு வழக்கறிஞராக நீக்கப்பட்டபோது உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை முன் வைத்தது. ஆனால் அதைகூட சிறப்பு நீதிமன்றம் பின்பற்றவில்லை

* கடந்த 2014-ல் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பினை ரத்து செய்ததற்கான காரணங்களைக்கூட குமாரசாமி தனது தீர்ப்பில் அறிவுறுத்தவில்லை.

* ஜெயலலிதா தரப்பினர் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன்களையெல்லாம், ஜெயலலிதாவின் வருமானமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கூறி, வங்கியிலிருந்து ஜெயலலிதா தரப்பினர் கடன்களைப் பெற்றார்கள் என்ற பட்டியலையும், அதன் கூட்டுத் தொகையையும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி குமாரசாமி

* ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அவரே பட்டியலிட்ட பத்து கடன்தொகையை கூட்டினால், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய்தான் வரும். இதன்படி ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 76.7% வரும்.

 * ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு வருமானத்தை விட 8.12 சதவீதமே அதிகமாக உள்ளதால் அவரை விடுதலை செய்வதாக குமாரசாமி கூறியுள்ளார். ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற அக்னிஹோத்ரி வழக்கை மேற்கோள் காட்டியுள்ளார். அது செல்லாது.

ஏனெனில், அக்னிஹோத்ரி வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்தின் மதிப்பு வெறும் ரூ.11,350. ஆனால் ஜெயலலிதா வழக்கில் சொத்து மதிப்பு கோடிகளில் உள்ளன. அக்னிஹோத்ரி வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்து சொற்பமானதாக இருந்ததாலேயே அவர் விடுவிக்கப்பட்டார்.

Share.
Leave A Reply