லாஸ் ஏஞ்செல்ஸ்: டைட்டானிக் இந்த வார்த்தையைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. ஒரு காதலை மிக அழகாக வலியுடன் பதிவு செய்த இந்தப்படம் இன்றளவும் காதலர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளது.
1997 ம் ஆண்டில் பிரபல ஹாலிவுட் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து, இயக்கிய படம் டைட்டானிக். ஒரு கப்பலையும், காதலையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக உள்ள ஒரு காதல் காவியம்.

புகழ் பெற்ற இந்தப் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் நேற்று அதிகாலை தனது சொந்த விமானத்தில் பயணம் செய்தபோது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.

விமானியாகப் பயிற்சி எடுத்துக் கொண்ட ஜேம்ஸ் ஹார்னர் கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பரா அருகே திங்கள்கிழமை காலை தனது சொந்த விமானத்தில், பயணம் செய்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

இதனை உறுதி செய்து பேஸ்புக் பக்கத்தில் செய்தி கொடுத்துள்ளார் அவரது உதவியாளர் சில்வியா பாட்ரிக்ஜா.

1953-ம் வருடம் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தவர் ஜேம்ஸ் ஹார்னர். லண்டனில் உள்ள ராயல் காலேஜ் ஆஃப் மியூசிக்கில் இசை பயின்றவர்.

1970களின் இறுதியில் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார்.

1982-ல் வெளியான ஸ்டார் டிரெக் 2 படமானது இவருக்கு நல்ல பெயரை அளித்தது. ஏலியன்ஸ், பிரேவ் ஹார்ட், அப்போலோ 13, ஏ பியூடிஃபுல் மைண்ட், அவதார் போன்ற சிறந்த ஹாலிவுட் படங்களுக்கு தனது மகத்தான இசையின் மூலம் உயிர் கொடுத்தவர் ஹார்னர்.

ஜேம்ஸ் ஹார்னர் இதுவரை 120 ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். பல முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஜேம்ஸ் ஹார்னருக்கு டைட்டானிக் படத்தின் மூலமே ஆஸ்கார் கனவு நனவானது, மேலும் இந்தப் படமானது மூலம் ஜேம்ஸ் ஹார்னர் உலகப் புகழ் பெறக் காரணமாக அமைந்தது.

டைட்டானிக் படத்தின் இசைக்காக 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றவர் ஜேம்ஸ் ஹார்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply