வாஷிங்டன்: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, அவரது மகன் சஞ்சய் காந்தி 6 முறை அறைந்தார் என்ற தகவலை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபரும், புலிட்சர் விருது பெற்றவருமான லீவிஸ் எம். சிமோன்ஸ் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1975ம் ஆண்டு அவசரநிலையை பிரகடனப் படுத்திய காலகட்டத்தில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் டெல்லி நிருபராக பணியாற்றியவர் லீவிஸ் எம்.சிமோன்ஸ்.
அப்போது அவரது பத்திரிகையில் வெளியான ஒரு தகவல் உலகை உலுக்கியது. அதாவது, இந்திராகாந்தியின் மகன் சஞ்சய்காந்தி, அவரை ஆறுமுறை கன்னத்தில் அறைந்தார் என்பதுதான் அந்த செய்தி.
இதுகுறித்து இந்திய செய்தி ஊடகம் ஒன்று இ-மெயில் மூலம் தற்போது சில தகவல்களை அந்த நிருபரிடமிருந்து பெற்றுள்ளது.
விருந்தில் அடி
அதில், லீவிஸ் எம்.சிமோன்ஸ் கூறியதாவது: எமெர்ஜென்சி பிரகடனப்படுத்தும் முன்பு, ஒருநாள் இரவு விருந்தின்போது, இந்திராகாந்தியை, சஞ்சய்காந்தி, கன்னத்தில் ஆறுமுறை அறைந்துள்ளார்.
நாடு கடத்தப்பட்டேன்
இருப்பினும் அந்த தகவலை உடனடியாக நான் பத்திரிகையில் எழுதவில்லை. எமெர்ஜென்சி காலம் முடிந்த பிறகு நான் இந்தியாவை விட்டே வெளியேற்றப்பட்டேன். ஹாங்காங்கில் இருந்துதான் நான் அந்த செய்தியை எழுதினேன். எனவே, நான் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட சஞ்சய்காந்தி விவகாரம் காரணம் இல்லை.
ராணுவம் பற்றி செய்தி
இந்திராகாந்தி, எமெர்ஜென்சியை பிறப்பித்தது ராணுவத்தினர் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று நான் எழுதிய செய்திக்காகவே, நான் நாடு கடத்தப்பட்டேன். 5 மணி நேர நோட்டீஸ்தான் கொடுக்கப்பட்டது. அதற்குள் அதிகாரிகள் வந்து ஏர்போர்ட்டுக்கு அழைத்து சென்றுவிட்டுவிட்டனர்.
அதிகாரிகள் சிக்கினர்
அதேநேரம், எனது டைரியில் இருந்த இந்திய அதிகாரிகள் ‘வட்டாரங்கள்’ பெயரை வைத்து, அந்த அதிகாரிகளை சிறையில் அடைத்துவிட்டனர். அதன்பிறகுதான், அதிகாரிகள் பெயர்களை எழுதி வைக்க கூடாது என்ற படிப்பினை எனக்கு கிடைத்தது. இவ்வாறு அந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். எமெர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுகுறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்தபடி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எமர்ஜென்சியை பிரகடனப்படுத்த இந்திராவுக்கு ஆலோசனை கொடுத்த ‘புண்ணியவான்’ யார் தெரியுமா?
டெல்லி: இந்திய தேசத்தின் இருண்டகாலமாக ‘1975 எமர்ஜென்சி’ அமைந்துவிட்டது … இந்த வரலாற்றின் கறைபடிந்த பக்கத்தை அமல்படுத்தியது இந்திராதான் என்றாலும் இதன் பின்னணியில் சூத்ரதாரியாக இருந்தவர்களையும் நாம் அறிந்து கொள்ளத்தான் வேண்டும்..
1975ஆம் ஆண்டு திடுமென எமர்ஜென்சியை இந்திரா காந்தி பிறப்பிக்கவில்லை.. அதற்கு 10 ஆண்டுகாலத்துக்கு முன்னதாக இருந்தே மெல்ல.. மெல்ல.. எமர்ஜென்சிக்கான காரணிகள் துளிர்விடத் தொடங்கி இருந்தன.
1966 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தாஷ்கண்டில் இறக்கிறார்.. அப்போது காங்கிரஸ் தலைவர் காமராஜரின் பெரு முயற்சியால் இந்திரா காந்தி பிரதமராக ஆக்கப்பட்டார். 1967 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று இந்திரா பிரதமராக ஆனார்.
உடைந்த காங்கிரஸ்
1969 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காங்கிரஸ் பிளவுபட்டது. இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரு அமைப்புகள் உருவாயின. 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக போரை நடத்தி வென்றார் இந்திரா. காங்கிரஸ்
அலகாபாத் தீர்ப்பு..
1975 ஜூன் 12-ந் தேதியன்று 1971 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திராகாந்தி வென்றது செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்திரா காந்தி பதவி விலகவில்லை. இந்திரா பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டன. இதற்கு ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமை வகித்தார். இதை ஒடுக்க காங்கிரஸ் வியூகம் வகுத்தது.
எமர்ஜென்சி பிரகடனம்
இந்த நிலையில்தான் 1975ஆம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவு எமர்ஜென்சி நாட்டில் பிரகடனம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள் ஈவு இரக்கமின்றி கொடுஞ்சிறைக்குள் தள்ளப்பட்டனர்.
கட்டாய குடும்ப கட்டுப்பாடு
ஊடக சுதந்திரம் என்பதே இல்லாமல் போனது. கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை சஞ்சய் காந்தி அமல்படுத்தியதாக பொதுமக்கள் கொந்தளித்தனர். இந்திய வரலாற்றில் இன்றளவும் இருண்ட காலமாகத்தான் இது இருந்துவருகிறது.,..
ஆர்.கே. தவான் விளக்கம்
இந்த எமர்ஜென்சி பிரகடனம் உருவானது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவரும் இந்திரா காந்தியின் தனிச்செயலாளருமாக இருந்த ஆர்.கே. தவான் தற்போது டிவி சேனல் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: இந்திரா காந்தியிடம் எமர்ஜென்சியை கொண்டுவர வேண்டும் என்று ஆலோசனை கூறியதே அப்போது மேற்கு வங்க முதல்வராக இருந்த எஸ்.எஸ். ராய்தான்.. அவர்தான் இந்த எமர்ஜென்சியின் மூளையாக இருந்தவர்.. அவரும் இந்திரா காந்தியும் ஜனாதிபதியை சந்தித்து எமர்ஜென்சியை பிரகடனப்படுத்தப் போவதாக கூறிய போது நானும் உடனிருந்தேன்.
அப்போது ஜனாதிபதி, எஸ்.எஸ்.ராயிடம் எமர்ஜென்சிக்கான பிரகடனத்தை தயாரித்து வருமாறு கூறினார். எஸ்.எஸ்.ராய் தயாரித்த அந்த பிரகடனத்தை நான் தான் ஜனாதிபதியிடன் கொண்டு போய் நள்ளிரவில் கொடுத்தேன். இவ்வாறு ஆர்.கே.தவான் கூறியுள்ளார்.