பெய்ரூட்: 3 கண்டங்களில் உள்ள 3 நாடுகளில் ஒரே நாளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
ஐஎஸ் அமைப்பின் வளர்ச்சி நினைத்ததை விட வலுவாகி வருவதையும் இது உணர்த்துவதாக உள்ளது. உலகம் முழுவதும் ஒரே நாளில் பல நாடுகளில் தாக்குதல் நடத்தக் கூடிய அளவுக்கு அவர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு தெளிவாக இருப்பதையும் இது சுட்டிக் காட்டுவதாக உள்ளது.
முதலில் பிரான்சில் உள்ள கேஸ் பேக்டரியில் புகுந்து தீவிவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஒருவரது தலையைத் துண்டித்து கொலை செய்தனர்.
அதேசமயம், குவைத்தில் ஒரு மசூதிக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கு வெறித்தனமாக நடத்திய தாக்குதலில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அடுத்து துனிஷாயவில் வெளிநாட்டவரைக் குறி வைத்து ரிசார்ட் ஒன்றில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த 3 சம்பவங்களும் திட்டமிட்ட ஒருங்கிணைப்புடன் கூடிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மூன்று நகரங்களுமே 3 கண்டத்தில் உள்ளவை. இதுவும் உலகுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் ஏதோ செய்தி சொல்ல வருவது போலவேத் தெரிகிறது.
பிரான்சில் தாக்குதல் நடந்த பேக்டரியானது அமெரிக்கர்களுக்குச் சொந்தமானதாகும். மூன்று தாக்குதல்களுக்குமே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனால் உலக நாடுகள் குறிப்பாக மேற்கத்திய நாடுகள் பெரும் பீதியைச் சந்தித்துள்ளன.
படு வேகமாக வளர்ந்து வரும் ஐஎஸ் அமைப்பை ஒடுக்க உலகம் என்ன செய்யப் போகிறது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. மற்ற தீவிரவாத அமைப்புகளை எளிதாக ஒடுக்கியது போல ஐஎஸ் அமைப்பை ஒடுக்க முடியாமல் உலக நாடுகள் திணறுகின்றன.
உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய அல் கொய்தா அமைப்பே இன்று வலுவிழந்து விட்ட நிலையில் ஐஎஸ் அமைப்பு தொழில்நுட்ப ரீதியாகவும், படை பலம் மூலமாகவும், வேகமாக வளர்ந்து வலுவாகி வருவது கவலை தருவதாக உள்ளது.
சிரியி, ஈராக்கின் பல பகுதிகளை தற்போது தன் வசம் வைத்துள்ள இந்தத் தீவிரவாத அமைப்பு லிபியா, ஏமன் என மேலும் பல நாடுகளையும் குறி வைத்திருப்பதும் கவலை தருவதாக அமைந்துள்ளது.
  71254b67-b3c7-43e7-b91c-d762e124ffad
சமீபத்தில்தான் ஐஎஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான அபு முகம்மது அல் அட்னானி, தனது அமைப்பினருக்கு விடுத்த ரமலான் மாத வாழ்த்துச் செய்தியில், புனிதமான ரமலான் மாதத்தில் நாம் நடத்தும் தாக்குதல்கள் நமக்கு சொர்க்கத்தில் இடம் கொடுக்க உதவும் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
மேலும் இந்த அமைப்பு தாக்குதல் நடத்த தேர்ந்தெடுத்த நாடுகளும் கவனத்துக்குரியதாகும். 4 ஆண்டுகளுக்கு முன்பு அரபு நாடுகளை உலுக்கிய அரபு வசந்தத்தில் வென்று தேறிய ஒரே அரபு நாடு துனீஷியா மட்டுமே.
இந்த நாட்டின் முக்கிய வருவாயே சுற்றுலா மூலம்தான் கிடைக்கிறது. அதைக் குறிவைத்து தற்போது தாக்குதல் நடந்துள்ளது.
அதேபோல சவூதி அரேபியாவில் ஷியா மசூதிகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடயத்தியது போல குவைத்திலும் செய்துள்ளனர்.
இதன் மூலம் ஷியா, சன்னி பிரிவினரிடையே துவேஷத்தை அதிகரித்து பிளவை மேலும் வலுவாக்குவதே இவர்களின் நோக்கமாக கருதப்படுகிறது.
ஆனால் பிரான்சில் நடந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் ஐரோப்பாவிலும் எங்களால் எளிதாக தாக்குதல் நடத்த முடியும் என்று காட்டுவதற்காக இப்படி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மொத்தத்தில் ஒரே நாளில் 3 கண்டங்களைச் சேர்ந்த நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதை மேற்கத்திய நாடுகள் பெரும் கவலையுடன் பார்க்கின்றன.

Share.
Leave A Reply