பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் தமக்கு ஏழு ஆசனங்கள் தரப்பட வேண்டும் என திருமலையில் நேற்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கூட்டமைப்புக்குள் புதிய குழப்பத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலுக்கான ஆசன ஒதுக்கீட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே இதுவரையில் இறுதி முடிவு எட்டப்படாத போதிலும், யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சிக்கு 6 ஈ.பி.ஆர்.எப்.எப். அமைப்புக்கு இரண்டு, ரெலோ, புளொட் என்பனவற்றுக்கு ஒவ்வொன்றையும் வழங்குவது தொடர்பில் இறுதியாகப் பேசப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திருமலையில் நேற்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில், தமிழரசுக் கட்சிக்கு ஏழு ஆசனங்களும் ஏனைய கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு ஆசனங்களும் ஒதுக்கப்பட வேண்டும் என்ற யோசனை கட்சி உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், தமது கட்சிக்கு இரு ஆசனங்கள் தரப்பட வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்திவரும் நிலையில், தமிழரசுக் கட்சியின் இந்தத் தீர்மானம் குழப்ப நிலையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளையில், வன்னியில் தமக்கு மூன்று ஆசனங்களும், மட்டக்களப்பு, திருமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தலா ஐந்து ஆசனங்களும் தரப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆசனப்பகிர்வு குறித்து இறுதி முடிவை எட்டுவதற்காகவும், தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதற்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் பங்குகொள்ளும் கூட்டம் ஒன்று எதிர்வரும் 6 ஆம் திகதி காலை 10 மணிக்கு வவுனியாவில் நடைபெறவிருக்கின்றது.

முக்கியமான விடயங்கள் தொடர்பில் இதில் ஆராயப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் பிரமுகர் ஒருவர் இன்றுகாலை ‘சமகளம் செய்தி’ க்குத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply