விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்திருந்த குற்றச்சாட்டில், கைதடியில் வைத்து இரண்டு பேரை சிறிலங்கா காவலதுறையினர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தகவல் ஒன்றை அடுத்து, கைதடியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று பிற்பகல் சோதனையிட்ட சிறிலங்கா காவல்துறையினர், அங்கிருந்து விடுதலைப் புலிகளின் வரிப்புலி சீருடை, 3 தொப்பிகள், 2 ஜக்கட்டுகள் என்பனவற்றைக் கைப்பற்றினர்.
புதுக்குடியிருப்பில் இருந்து இரகசியமாக இவற்றை எடுத்து வந்து, கைதடியில் வைத்திருந்த நிலையிலேயே காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, புதுக்குடியிருப்பு, வள்ளிபுனத்தைச் சேர்ந்த மனோகரன் மயூரன், கைதடி மேற்கைச் சேர்ந்த வாரித்தம்பி பரத்குமார் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சீருடையை இளைஞர்களுக்கு அணிவித்து ஒளிப்படம் எடுத்து. அவற்றை, வெளிநாடுகளில் தஞ்சம் அடைவதற்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஒருவர், வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் முகவராகச் செயற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலையில் போட்டியிட புலிகளின் முன்னாள் முக்கிய பிரமுகர் விண்ணப்பம்
29-06-2015
வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு, விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய போராளியான ரூபன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் விண்ணப்பித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவும், தலைமைச் செயலகப் பொறுப்பாளராகவும், பொருண்மிய மேம்பாட்டுக் கழகப் பொறுப்பாளராகவும், இருந்தவர் ரூபன் எனப்படும் ஆத்மலிங்கம் ரவீந்திரா.
1985ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரை 24 ஆண்டுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்தவர்.
2000ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13 ஆயிரம் வாக்குகளை மட்டும் பெற்று பிரதிநிதித்துவத்தை இழந்த நிலையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனினால், திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட, ரூபன் மேற்கொண்ட அரசியல் நகர்வுகளால், அடுத்த ஆண்டு- 2001இல் நடந்த தேர்தலில் 66,500 வாக்குகளைப் பெற்றதுடன், இரா. சம்பந்தனும் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.
1987ஆம் ஆண்டு இந்திய-சிறிலங்கா உடன்பாட்டுக்கு அமைய வட- கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்படவிருந்த இடைக்கால நிர்வாக சபையில் விடுதலைப் புலிகளின் சார்பில் ரூபன் பெயரிடப்பட்டிருந்தார்.
இவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் சேவையாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை இவர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் கையளித்துள்ளார்.