சென்னை: ‘‘’ஹன்சிகா மட்டும் தான் அழகியா, நித்யாமேனன் அழகி இல்லையா?’’, என்று கவிஞர் விவேகா-நடிகை ஸ்ரீப்ரியா இடையே சினிமா பட விழாவில் விவாதம் நடந்தது.
சினிமா பட விழா
ரஜினிகாந்த் -கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் கதாநாயகியாக நடித்தவர் ஜெயப்பிரதா. இவர், தனது மகன் சித்துவை கதாநாயகனாக வைத்து, ‘உயிரே உயிரே’ என்ற படத்தை தயாரித்து இருக்கிறார். ஏ.ஆர்.ராஜசேகர் டைரக்டு செய்து இருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.
விழாவில், நடிகைகள் ஹன்சிகா-நித்யாமேனன் ஆகிய 2 பேரில் யார் அழகி? என்பது தொடர்பாக சுவையான விவாதம் நடந்தது.
கவிஞர் விவேகா பேசியதாவது:-
இந்த படத்தின் டைரக்டர் ராஜசேகர் என் நண்பர். படத்தின் எல்லா பாடல்களையும் நான் தான் எழுதியிருக்கிறேன். இந்த படத்தில் கதாநாயகியின் அழகை வர்ணித்து ஒரு பாடல் எழுதும்படி டைரக்டர் ராஜசேகர் கேட்டுக்கொண்டார். நானும் பல்லவியை எழுதி காட்டினேன்.
அப்போது அவர், ‘உங்களை நித்யாமேனனுக்கு பாடல் எழுத சொல்லவில்லை. அழகான ஹன்சிகாவுக்கு தான் பாடல் எழுத சொன்னேன்’ என்றார். அதைத்தொடர்ந்து, ‘‘இவள் தான் அழகி… உலகத்தின் மலர்களுக்கு இவள் தான் தலைவி’’ என்று அந்த பாடலை எழுதினேன்.
இவ்வாறு கவிஞர் விவேகா கூறினார்.
விவாதம்
அப்போது மேடையில் அமர்ந்திருந்த நடிகை ஸ்ரீப்ரியா எழுந்து, கவிஞர் விவேகாவை பார்த்து, ‘‘நித்யாமேனன் அழகி இல்லை என்று யார் சொன்னது? ஹன்சிகா அழகுதான். அதற்காக நித்யாமேனனை அழகு இல்லை என்று சொல்லாதீர்கள். நித்யாமேனன் ரொம்ப அழகு. நன்றாக நடிக்க தெரிந்தவர்’’, என்று கூறினார்.
இந்த சுவையான விவாதத்தை ரசிகர்கள் கைதட்டி வரவேற்றார்கள்.
விழாவில், அரசியல் பிரமுகர் அமர்சிங், நடிகர்கள் அனில்கபூர், மோகன்பாபு, சித்து, நரேன், ஜெகன், நடிகைகள் ராதிகா சரத்குமார், சுமலதா, சாயாசிங், ரோகிணி, உமா பத்மநாபன், மீரா கிருஷ்ணன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.